வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட குறித்த அறிவிப்பு, ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ஊடாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டு, அரசாங்க அதிபர் ஊடாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் குறித்த அறிவித்தலில், காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராய அடுத்த வாரம் விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும், குறித்த குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது பிரதிநிதிகள் தமது கருத்துக்களை பதிவுசெய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், அக் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் இரண்டு வாரங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்தை பதிலளிக்க வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருகட்டமாக இன்று வீதி மறியல் போராட்டம் இடம்பெற்றது. இதில், வடக்கு- கிழக்கில் பல பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதனிடையே, ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டிய போதும், முதலில் அதற்கு தகுந்த பதில் அளிக்கப்படவில்லை. அந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 07ஆம் திகதி சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனாலும், அதனை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நிராகரிந்திருந்தனர். இந்த நிலையிலேயே, ஜனாதிபதி சந்திப்புக்கான வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திரி இணக்கம்; வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது!
Tuesday, May 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment