Tuesday, May 30, 2017

வாழ்க்கை எளிமையானது, அழகானது, எதையும் எளிதாய் எடுத்துக்கொண்டால் அழகானது, என்ற பார்வையில் தொடர்ந்து  நல்லுணர்வு (ஃபீல் குட்) திரைப்படங்களைக் கொடுப்பவர் இயக்குனர் ராதாமோகன். அவரது சில படங்களில் எல்லாம் சரியாக அமைந்து, நல்ல வெற்றிப் படங்களாய் ஆகியிருக்கின்றன. சில படங்களில், சில விஷயங்கள் தவறாகி தோல்வியும் அடைந்திருக்கின்றன. ஆனால் அவரது எந்த ஒரு படமும் தவறான விஷயங்களை பேசியதில்லை. அந்த மேன்மையைத் தொடர்ந்து வரும் ராதாமோகனுக்கு, பெரும்பாலான  விஷயங்களும், சரியாக அமைந்து வெற்றியாகியிருக்கும் படம் பிருந்தாவனம்.

காது கேட்காத, வாய் பேச முடியாத கண்ணனாக அருள்நிதி. அவரது பிருந்தாவனத்தில் அனைவரும் அன்பாக இருக்கின்றனர், நல்லவர்களாக இருக்கின்றனர். ஊட்டியில்  முடி திருத்தும் வேலை செய்யும் அருள்நிதியின் நண்பராக வரும், 'டாடி எனக்கொரு டவுட்டு'  செந்தில், அருள்நிதியை காதல் செய்யும் தன்யா, அவரது நலம் விரும்பியான எம்.எஸ்.பாஸ்கர், பக்கத்து வீட்டுக்காரர்கள், அந்த ஆங்கிலோ இந்தியன் போன்ற பாட்டி,  என அனைவரது அன்பும் நிறைந்த அழகான உலகில் இருக்கும் அருள்நிதி, நகைச்சுவை நடிகர் விவேக்கின் ரசிகர். தன் சொந்த வேலைக்காக ஊட்டிக்கு வரும் நடிகர் விவேக்கை சந்திக்கும் அருள்நிதி அவருக்கு நெருக்கமாக, தன்யாவின் காதலை அருள்நிதி ஏற்க மறுக்க, தொடரும் நிகழ்வுகள் தான் பிருந்தாவனம். கதை தேர்விலும், நடிப்பிலும், பிற நிதிகளை விட அதிக நீதி செய்கிறார் அருள்நிதி. நடிகர் விவேக்காகவே வரும் விவேக்கிற்கு இது அற்புதமான வாய்ப்பு. ஒரு புறம் நடிப்பதற்கும், இன்னொரு புறம் ஒரு நடிகராகவே தன் குரலைப் பதிவு செய்வதற்கும் வாய்ப்பு. சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். இவர்கள் இருவரையும் தாண்டி அழகாகவும் அழுத்தமாகவும் தான்யா. எம்.எஸ்.பாஸ்கர் மிகச் சிறந்த நடிகர் என்பதை முதலில் வெளிப்படுத்தியவர் ராதாமோகன். நன்றாக இருக்கிறது என்றாலும், அதே போன்ற கதாப்பாத்திரங்களில் தான் அவரை மீண்டும் நடிக்க வைக்க வேண்டுமா, என்று தோன்றுகிறது.

" நீங்க பாத்த மாப்பிள்ளை ரொம்ப குண்டா இருக்கான், அவன் ஃபோட்டோ டவுன்லோட் ஆகவே ரெண்டு நாள் ஆச்சு", "பேச ஃபோன் கொடுத்தா ஆட கேண்டி க்ரஷ் கேப்ப போல", கடைக்கு வெளியே ஏதோ வண்டி மோதும் சத்தம் கேட்க, "சல்மான் கான் ஏதும் வந்துருக்காரா?" என்று கேட்பது, இப்படி சின்ன சின்னதாக ரசித்து சிரிக்க ஐம்பது வசனங்களாவது படத்தில் இருக்கும். வசனகர்த்தா யாராக இருந்தாலும் ராதாமோகனுக்கு அமையும் சிறப்பு இது. இந்த முறை, பொன்.பார்த்திபனால் அமைந்திருக்கிறது. தொலைக்காட்சியில் 'பிரேக்கிங் நியூஸை'ப் போல திரைப்படங்களில் ட்விஸ்ட் என்பது நமக்கு பழகிவிட்ட நிலையிலும், இந்தப் படத்தில் வருவது  அழுத்தமான ட்விஸ்ட் தான். நடிகர்  விவேக் மரங்கள் நடுவது மிக மிக நல்ல காரியம். அதை சொல்வதனால் அது போன்ற நல்ல காரியங்கள் பரவலாம். ஆனாலும், படத்தில் அதை  இத்தனை முறை  சொல்ல வேண்டுமா?

கோடையில் வாடும் நமக்கு ஊட்டியின் அழகைக்  தன் கேமரா வழியே நன்றாகக் காட்டி புத்துணர்ச்சியளிக்கிறார் விவேகானந்த். கோபத்தில் அருள்நிதி உடைந்து பொங்கும் அந்த காட்சியில், அவருக்காக அங்கு பறக்கும்  கொடியும் பேசுவது, கதை சொல்லலில்  ஒளிப்பதிவின் பங்கை மிக அழகாக சொல்லியிருக்கிறது. அந்த காட்சியின் பின்னணி இசையும் சேர்ந்து பேசியிருக்கிறது. பின்னணி இசையில் இவ்வளவு விளையாடும் விஷால் சந்திரசேகர் , பாடல்களின் போது வேறு யாரிடமும் கொடுத்து விடுவாரா என்று புரியவில்லை. இத்தனை அழகான படத்துக்கு, நல்ல பாடல்கள் இன்னும் சிறப்பு சேர்த்திருக்கும். பாடல்கள் வரும் இடங்களைப் பார்க்கும் பொழுது இயக்குனருக்கும் பாடல்களில் பெரிதாய் அக்கறை இல்லையோ என்றே தோன்றுகிறது. படத்தொகுப்பாளர் ஜெய் கார்ட்டூன் படங்களைப் போல  சில 'எஃபக்ட்ஸை'ப் பயன்படுத்தியிருக்கிறார். சில காட்சிகளையும் வெட்டியிருக்கலாம், என்ன கோபமோ தெரியவில்லை.                      

நல்ல  படத்திற்கு சரியான துவக்கமும் ஓட்டமும் எப்படி முக்கியமோ அதுபோல  சரியான இடத்தில் முடிவதும் மிக முக்கியம். மூன்று காட்சிகளுக்கு முன்பே முடித்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும், இருந்தாலும் ஆசுவாசம் தருகிறது, இந்த பிருந்தாவனம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer