Tuesday, May 30, 2017

படம் தொடங்கி தலைப்பு போடும் முன், வழக்கமாக  படத்தின்  கதாநாயகன் அல்லது இயக்குனரின் குரலில் வரும்  வரும் "புகை பிடித்தல் உடல் நலத்துக்குக்  கேடு தரும்...." என்ற சம்பிரதாய  அறிவிப்பு 'மொட்டை' ராஜேந்திரன் குரலில் வருகிறது. அப்பொழுதே அரங்கில் சிரிப்பலை. இப்படி, சின்ன சின்ன விஷயங்கள் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன. ஆனால், அதைத் தாண்டி படத்தில் பெரிதாய் எதுவும் ஈர்க்கவில்லை என்பதே 'சங்கிலி புங்கிலி கதவ தொற'யின் பலவீனம். ஆனால் படத்தின் இயக்குனர் 'ஐக்'கிற்கும் அதைத் தாண்டிய இலட்சியங்கள் இந்தப் படத்தில் இல்லையென்றே படுகிறது. பெரிதாய் முயற்சி எடுத்து, அது தவறாய் போய்விட்டது என்ற நிலையில்லை. 'கோடை  விடுமுறையில் குடும்பத்துடன் வந்து பார்த்து சிரித்து ரசிக்க ஒரு பேய்ப் படம்' என்ற லட்சியத்தில் தன் முதல் படத்தை இயக்கியிருக்கிறார் ஐக். அதில் ஓரளவு வெற்றி பெற்றுவிட்டார். 'நடிகவேள்' எம்.ஆர்.ராதாவின் பேரன் என்பதை படம் துவங்கும் முன் தலைப்பிலும், குடும்பத்தில் பலரையும் நடிக்க வைத்ததிலும் காட்டியிருக்கிறார், படத்தை எடுத்த விதத்தில் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

தமிழில் திகில் படங்கள் அல்லது பேய் படங்கள் என்றால் அதில் நகைச்சுவையும் கலந்தது என்பது ஒரு விதியாகிவிட்டது. பேய்ப் படங்களுக்கென ஒரு மாற்றப்படாத கதை அமைப்பும் உருவாகிவிட்டது. அதைத் தாண்டுபவர்கள் வெகு சிலரே. அந்த அமைப்புக்குள் பயத்தையும் சிரிப்பையும் முழுமையாக உண்டாக்கும் படங்கள் வெற்றி பெறுகின்றன. இப்படி, எக்கச்சக்க பேய்ப் படங்கள் வந்ததில் சினிமாவுக்கு நன்மை ஏற்பட்டதோ இல்லையோ தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு பெரிய நன்மை ஏற்பட்டு இருக்கிறது. இப்பொழுது உள்ள குழந்தைகள் யாரும், ஒரு வேளை,  பேயை  நேரில் கண்டால்  கூட பயப்பட மாட்டார்கள், சிரித்து விட்டு அதன் ஃப்ளாஷ்பேக்  என்னவென்று கேட்பார்கள். அந்த அளவுக்கு, தமிழ் திகில் படங்கள் பேய்களை நகைச்சுவையாக்கியிருக்கின்றன. இந்தப் படத்திலும் அதே கதை தான். ஒரு பாழடைந்த பங்களா, அதை வந்தடையும் நாயகன், நாயகி, மற்றும் சில  நகைச்சுவை நடிகர்கள், அவர்களை பயமுறுத்தும் பேய், அதற்கு ஒரு முன்கதை, இறுதியில் சுபம். முன்பிருந்த பேய்கள் சற்று உக்கிரமாக உயிர் பலியெல்லாம் வாங்கும். இப்பொழுது உள்ள பேய்களுக்கு அந்த வேலையுமில்லை.

ஜீவா, சில தோல்விகளைத் தொடர்ந்து, கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஆபத்தில்லாத கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கென்று மிகப்பெரிய முக்கியத்துவமா, உணர்வுப்பூர்வமாக நடிக்க வேண்டிய அவசியமோ இல்லாத கதை. அந்த அளவுக்கு நடித்திருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு ஸ்ரீ திவ்யா. அழகாக இருக்கிறார். சூரி, சில படங்களாக கோபம் வருமாறு நகைச்சுவை செய்து வந்தது சற்று  மாறி, இந்தப் படத்தில் சிரிப்பை உண்டாக்குகிறார். ராதிகா, ராதா ரவி இருவரின் நடிப்பில் மிகச் சிறந்தவர்கள் என்பதை இதிலும் காட்டியிருக்கின்றனர். ஆனால், அவர்களையும் பெரிதாய் பயன்படுத்தாமல், மேலோட்டமாகவே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். மற்ற நகைச்சுவைகள் நன்றாகவே சிரிக்க வைத்திருக்கும் பொழுது, எதற்காக தம்பி ராமையா - தேவதர்ஷினியின்   இரட்டை அர்த்த வசனங்கள்? அதுவும் ரசிக்கும்படி இல்லாமல் சளிக்கும்படி இருக்கின்றன.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை சிறப்பு. தொடர்ந்து குற்றம் 23, சிம்பா என  அவர் பல படங்களுக்கு இசையமைக்கிறார். அவரது  பாடல்களில் தரம் இருந்தாலும், கேட்பவர்களை உள்ளிழுக்கும் உணர்வு குறைவாக இருக்கிறது. இந்தப் படத்திலும், எல்லாப்  பாடல்களிலும்  'ட்ரெண்டி'யான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப்   பயன்படுத்தினாலும், போகிற போக்கில் அப்படியே போய்விடுகின்றன. மனதில் தங்கவில்லை. அதில் கவனம் செலுத்தினால் நல்ல பாடல்கள் கிடைக்கும். இல்லையேல், தமன் கடந்து சென்றுவிட்டது போல நடக்கும். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு, 'கட்டிலுக்கு மேலேயும் கீழேயும் ஒருவரே இருப்பது' போன்ற திகில் காட்சிகளில் சிறப்பாக இருக்கிறது. அட்லீ - ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பின் தரம் படத்தின் உருவாக்கத்தில் தெரிகிறது. அத்தனை வசதிகளும் தன் முதல் படத்திற்கு கிடைத்தும் அதைப் பயன்படுத்தி அளவாய் ஒரு படத்தை எடுத்திருக்கிறார் ஐக். நகைச்சுவை-பேய் பொழுதுபோக்கான  இந்தப் படத்தை, பார்த்தாலும் வருத்தமில்லை, பார்க்காவிட்டாலும் வருத்தமில்லை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer