Tuesday, May 30, 2017

உலகமெங்கும் உணவு அரசியல்

'மாடுகளையும் ஒட்டகங்களையும் இறைச்சிக்காக விற்கத்  தடை' என மத்திய அரசு அறிவித்ததிலிருந்து மற்ற அனைத்து பிரச்சனைகளையும் மறந்து நாடே இதைத்தான் பேசுகிறது. எதிர்ப்புக்குரல்கள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் எழுந்திருக்கின்றன.  மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த அறிவிப்பை எதிர்க்கின்றனர். ஏனெனில், உணவு என்பது ஒவ்வொருவரின் உணர்வு. பல ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் உணவுப்பழக்கத்தை சட்டென, சரியான காரணமும் இல்லாமல் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மிகப்பெரிய உணர்வு ரீதியான தாக்குதல். இந்தியாவில் இந்த நிலையென்றால், உலகத்தின் பல நாடுகளிலும் பல உணவுகளுக்கும், பல விதமான காரணங்களுக்காக தடை விதிப்பதும் நீக்குவதும் அவ்வப்போது நடக்கிறது.

இந்தியாவுக்குப்  பசு, அமெரிக்காவுக்கு குதிரை  

குதிரை மாமிசம்  உண்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும் அமெரிக்காவில் புஷ் ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை 2011-ஆம் ஆண்டு வரை  இருந்தது. அதன் பிறகு நேரடியான தடை நீங்கினாலும், மறைமுகமாக தொடர்ந்தது. குதிரை இறைச்சி நிலையங்களைக் கண்காணித்து சான்றளிக்கும் வேலைக்காக அரசு செலவு செய்ய தயாராய் இல்லை. அந்த சான்றிதழ் இல்லாமல் விற்க முடியாது. இவ்வாறு மறைமுகத் தடை தொடர்கிறது. ஏனெனில், பெரும்பாலான அமெரிக்கர்களின் நம்பிக்கைப்படி குதிரை மனிதர்களின் நண்பனாகவும், விளையாட்டு விலங்காகவும் மதிக்கப்படுகிறது. அதுபோல நாய்க்கறி உண்பது அங்கு மரியாதைக்கு குறைவாக கருதப்படுகிறது. முன்னாள் அதிபர் ஒபாமா தன் சிறு வயதில் நாய்க்கறி உண்டதைப் பற்றி ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். அதிபர் தேர்தலின் போது அந்த விஷயத்தை வைத்து அவர் கேலி செய்யப்பட்டார். இது மட்டுமல்லாமல் 'ரெட் ஃபிஷ்' (red fish) எனப்படும் மீன் வகை, கடல் ஆமைகள் ஆகியவையையும் உண்ண தடை உள்ளது. 'ஹக்கிஸ்' (haggis) என்னும் உணவு ஆட்டு நுரையீரலால் செய்யப்படுவதால் அதற்கும் தடை இருக்கிறது.

இதிலும் சீனா முந்துகிறது..??

உலகின் பல நாடுகளிலும் நாய்க்கறி விரும்பி உண்ணப்பட்டு வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கூட நாய்க்கறி உண்ணப்படுகிறது. சென்னையிலும் உண்ணப்படுவதாய் செய்திகள் வந்தன. ஆனால், உண்பவருக்கே தெரியாமல் பிரியாணியில் கலக்கப்படுவதாய் வந்தன. உண்பவர் விரும்பி உண்டால் தவறில்லை. தைவானிலும், ஹாங்காங்கிலும் நாய்க்கறிக்கு தடை இருக்கிறது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் பிரிட்டனிலும் நாய்க்கறி உண்பது வெறுக்கப்படுகிறது. ஆனாலும், நாய்கள் நம்மிடம் நன்றியோடு இருப்பது போல, மனித இனம் நாய்களுக்கு நன்றியோடு இருக்கவேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. உலகெங்கிலும், போர்க்காலங்களிலும், பஞ்சங்களின் போதும் நாய்க்கறியே உதவியுள்ளது.

ஆடு, மாடு, பன்றி, தவளை, பாம்பு என கண்ணில் கண்டதையெல்லாம் கறியாக்கி உண்ணத் தயாராய் இருக்கும் சீன அண்ணன்கள் நாய்க்கறி உண்பதிலும் முன்னிலை வகித்தனர். ஆனாலும் சமீப காலத்தில் அரசு நாய்க்கறி விற்கத்  தடை விதித்துள்ளது. மிகப்பெரிய நாய்க்கறி உண்ணும் திருவிழாவான யூலின் திருவிழாவுக்குத் தடை விதிக்க விலங்கு நல ஆர்வலர்கள் முயற்சி எடுத்து, அதில் வெற்றிபெறப் போவதாக தெரிவிக்கின்றனர். விற்பனையாளர்களோ தங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கூறுகின்றனர். சில ஆயிரம் நாய்களின் விதியில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது ஜூன் மாதம் தெரியவரும்.

வாத்துகளின் வாழ்க்கை

'ஃப்வா க்ரா'(foie-gras) என்னும் வாத்துகளின் கல்லீரலால் செய்யப்படும் உணவுக்கு பல நாடுகளிலும் தடை உள்ளது. ஏனெனில், இந்த உணவுக்காக வளர்க்கப்படும் வாத்துகளுக்கு, இரும்புக்குழாய்களின் மூலம் தினமும் மூன்று முறை, வலுக்கட்டாயமாக அதிக  அளவு உணவு கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் வாத்துகளின் கல்லீரல் வீங்க வைக்கப்பட்டு, அதைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது. முற்காலத்தில், ஒரு வகை வாத்துகள் தங்களின் குளிர்கால இடம்பெயர் (migration) பருவத்தின் பொழுது, அதிக உணவை உட்கொண்டு, இடம்பெயர பயன்படுத்தும் வகையில் அவற்றின் உடல் அமைந்துள்ளது. ஆனால், வருடம் முழுதும் செயற்கையாக, வாத்துகளை கொடுமைப்படுத்தி உணவைத் திணிப்பதால், பல நாடுகளும் இதைத் தடை செய்திருக்கின்றன. இந்தியா 2014-இல் இந்த உணவை இறக்குமதி செய்யத்தடை விதித்தது. ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மனி என பல நாடுகளும் இவ்வுணவுக்கு முழுமையாகவோ அல்லது உள்நாட்டில் உற்பத்தி செய்யவோ தடை விதித்திருக்கின்றன. இருந்தாலும், இதை விரும்பி உண்ணும் மிகப்பெரிய மக்கள் தொகையும் இருக்கத்தான் செய்கிறது.

உணவுக்காக உசுர விடத் தயார்...?
   
நமக்கெல்லாம் உணவுக்கு ஊறுகாய் தொட்டு சாப்பிட்டு தான் பழக்கம். கொஞ்சம் விஷத்தை தொட்டுக்க கொடுத்தால்? ஜப்பானிலும் கொரியாவிலும் கிட்டத்தட்ட அப்படி ஒரு உணவு மிகப் பிரபலம். ஆனால், அவ்வளவு கெட்டவர்கள் இல்லை. விஷத்தைத் தொட்டுக்கொள்ள வைக்க மாட்டார்கள். விஷம் கொண்ட ஃபுகு(fugu) எனப்படும் பஃப்பர் மீனை (puffer fish) சமைத்து சாப்பிடத் தருவார்கள். சமைக்கும் போது சற்று தவறினாலும் சாப்பிடுபவர் உயிரை விட நேரிடும். மிக மிக தேர்ந்த சமையல் நிபுணர்கள் தான் இதை சமைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ரிஸ்க்கெல்லாம் வேண்டாமென்று பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளும் இதைத் தடை செய்திருக்கின்றன. நல்ல வேளை இந்தியாவில் இந்த மீனெல்லாம் இல்லை..  

உண்ணப்போகும் மீனின் கண்கள்

சில பிரபல அசைவ உணவகங்களில் மீன்களை பெரிய தொட்டிகளில் வைத்திருப்பார்கள். நாம் எதைக் காட்டுகிறோமோ அதை சமைத்துத் தருவார்கள். அதற்குப் பதிலாக  நாம் காட்டுவதை அப்படியே தட்டில் வைத்து சாப்பிடச் சொன்னால்? அதற்குப் பெயர் தான் இக்கீஸு க்குரி (ikizukuri). சில வகை மீன்கள் இவ்வாறு ஜப்பானில் பரிமாறப்படுகின்றன. இந்த வகை உணவிற்கும் ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் தடை விதித்திருக்கின்றன. நமது தட்டில் இருக்கும் வெட்டப்பட்டு துடித்துக்கொண்டிருக்கும் மீனின் கண்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பது சற்று சங்கடமான விஷயம்தான்.

சமோசாவுக்குத்  தடையா...?    

சிங்கப்பூரில் சூயிங் கம்மிற்கு தடை இருக்கிறது. ஒட்டும் தன்மை கொண்டதால் தடை. சுத்தத்தைப் பராமரிக்க, மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டது சிங்கப்பூர். சாப்பிடுபவர்கள் பொது இடங்களில் ஒட்டிச் செல்வதால் இந்தத் தடை. இருந்தாலும் மருத்துவர்கள் பரிந்துரைத்தால் பயன்படுத்தலாம். பிரான்சில் டொமேட்டோ சாஸ் எனப்படும் கெச்-அப்பை ஆரம்பப்பள்ளி மாணவர்கள் உண்ணத் தடை. அவர்களின் பாரம்பரிய உணவுகளின் சுவையை இது மறைத்து விடுவதே காரணம். சோமாலியாவில் 'அல்-ஷபாப்' அமைப்பு சமோசாவிற்கு தடை விதித்துள்ளது. அதன் முக்கோண வடிவம் கிறிஸ்துவத்தை நினைவு படுத்துவதுதான் காரணம் என கூறப்படுகிறது. இது போல உலகமெங்கும் பல இசுலாமிய நாடுகளில் பன்றிக்கறிக்கு நேரடியான தடையும் மறைமுகமான தடையும் நிலவுகின்றன.

பல நாடுகளில் இறைச்சிகள் தடை செய்யப்படுவதற்கு அந்த விலங்குகள் அழிந்து வருவதும், அல்லது அதன் காரணமாக நோய்கள், உயிருக்கு ஆபத்து வருவதும் காரணமாக இருக்கின்றன. அதையும் தாண்டி பல நாடுகளில் உணவு என்பது, அரசியலின் வடிவமாகவும் மதங்களின் படிமமாகவுமே  இருக்கின்றது. பல காலமாக வழக்கத்தில் இருக்கும், அழிந்து வரும் விலங்காகவும் இல்லாத, விவசாயிகளின் வாழ்வு சுழற்சிக்கும் தேவைப்படும் மாட்டிறைச்சி உணவுப்பழக்கத்தை அச்சுறுத்தும் வகையில் இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை செய்திருப்பது, ஒரு மிகப்பெரிய உணர்வுத்தாக்குதல், சமநிலையை சோதிக்கும் செயல்.

- வசந்த் பாலகிருஷ்ணன்

0 comments :

Post a Comment

 
Toggle Footer