Saturday, May 27, 2017

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற் பரப்பில் அமைந்துள்ள ஒரு செயற்கைத் தீவுக்கு அருகே அமெரிக்க அதிபர் டிரம்பின் Freedom of navigation என்ற ஆப்பரேஷனின் முதற் கட்டமாக அமெரிக்கா தனது கடற்படையின் போர்க் கப்பல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இது தமது இறையாண்மையை மீறிய செயல் என்றும் ஆத்திரமூட்டும் செயல் என்றும் சீன அரசு விமர்சித்துள்ளது.

மேலும் சீனத் தலைநகர் பீஜிங்கில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பொது மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். USS Dewey என்ற ஏவுகணை அழிப்புப் போர்க் கப்பலே மிஸ்சீஃப் ரீஃப் எனப்படும் தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய தீவுக்கு அருகே 20 Km தொலைவில் நிலை நிறுத்தப் பட்டுள்ளது. இது குறித்து பெண்டகன் பேச்சாளர் ஜெஃப் டாவிஸ் கூறுகையில், தென் சீனக் கடல் உட்பட ஆசிய பசுபிக் பகுதியில் தினசரி நடவடிக்கையின் ஒரு பகுதியாக சர்வதேச விதிகளுக்குக் கட்டுப்பட்டே எமது இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றுள்ளார்.

ஆனால் சீன அரசு மிகவும் காட்டமாகவே இக்கூற்றை நிராகரித்துள்ளதுடன் தமது அனுமதி இன்றி அமெரிக்கப் போர்க் கப்பல் தென் சீனக் கடலில் அத்துமீறி நுழைந்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இத்தவறை உடனே திருத்திக் கொள்வதுடன் போர்க் கப்பலை மீளப் பெறுமாறு நாம் அமெரிக்காவுக்கு வலியுறுத்துகின்றோம் எனவும் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லூ காங் பீஜிங்கில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்பின் இந்த Freedom of navigation ஆப்பரேஷன் மூலம் தென் சீனக் கடலில் பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வரும் சர்ச்சைக்குரிய பகுதியில் கடல் வழி பயண மார்க்கங்களை திறந்து வைக்கும் நோக்கம் செயற்படுத்தப் பட முடியும். ஆனால் இது அண்மைக் காலமாக வடகொரிய விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுடன் அதிகரித்துள்ள கூட்டுறவை சீனாவை ஆத்திரமூட்டுவதன் மூலம் வேறு விதத்தில் வலுவற்றதாக்கி விடும் எனவும் சீன வெளியுறவு அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடலின் பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளையுமே தன்னுடையவை என்று அப்பிராந்தியத்தில் இருக்கும் மிகச் சக்தி வாய்ந்த தேசமான சீனா கொண்டாடி வரும் போதும் தாய்வான், பிலிப்பைன்ஸ், புருனேய், மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளும் இக்கடற்பரப்பில் சில பகுதிகளைத் தமது என உரிமை கொண்டாடி வருகின்றன.

அமெரிக்காவின் FNOPS எனப்படும் குறித்த Freedom of navigation ஆப்பரேஷனின் பெப்ரவரி மாத வருடாந்த அறிக்கையில் 2016 ஆம் ஆண்டு மட்டும் இந்த ஆப்பரேஷனின் கீழ் இந்தியா, பிரேசில், இந்தோனேசியா, ஈரான், இத்தாலி, ஜப்பான், மலேசியா, ஓமான், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உட்பட 22 நாடுகளில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer