Friday, May 12, 2017

ஆப்கானுக்கு மேலதிக இராணுவ வீரர்களை அனுப்புவது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஆலோசித்து வரும் நிலையில் யுத்தத்தால் கடுமயாகப் பாதிக்கப் பட்டுள்ள அங்கு இன்னமும் சில இராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப் பட்டாலும் பாதுகாப்பு நிலமை மிகவும் மோசமடையவுள்ளது என அமெரிக்காவின் மூத்த புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவம் இவ்வருடம் மேற்கொண்ட புள்ளி விபரப்படி அமெரிக்க இராணுவம் முன்பிருந்ததை விட அதிகளவு பின் வாங்கப் பட்டு வருவதாகவும் கிராமப் பகுதிகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப் படுவதாகவும் இத்தகைய ஒரு சூழலில் ஆப்கான் அரசால் அதிகபட்சம் அந்நாட்டின் 57% வீத நிலப்பரப்பையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் பொது மக்களின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கி விட்டுள்ளது.

இத்தகவலை அமெரிக்க செனட் சபையில் பேசுகையில் அமெரிக்க தேசியப் புலனாய்வு அமைப்பின் இயக்குனர் டான் கோட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் பெப்ரவரியில் ஆப்கானின் இராணுவப் பிரிவின் தலைமை அதிகாரி ஜெனெரல் ஜோன் நிக்கொல்சன் கருத்துத் தெரிவிக்கையில் அங்கு வளர்ந்து வரும் தலிபான்களை ஒடுக்க இன்னும் ஆயிரக் கணக்கில் சர்வதேசத் துருப்புக்கள் வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஏப்பிரலில் ராய்ட்டர்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தியில் டிரம்ப் நிர்வாகம் ஆப்கானுக்கு இன்னமும் 3000 இலிருந்து 5000 இற்கு இடைப்பட்ட அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகளை அனுப்புவது என முடிவெடுத்திருந்ததாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இன்றைய திகதியில் ஆப்கானில் தலிபான்களை ஒடுக்கச் சென்ற அமெரிக்கத் துருப்புக்களில் 2300 இற்கும் அதிகமான வீரர்கள் கொல்லப் பட்டுள்ளதுடன் 17 000 பேர் வரை காயம் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer