Tuesday, May 2, 2017

எந்தவொரு தேர்தலுக்கான சவாலையும் முகம் கொடுப்பதற்கும் ஐக்கியத் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை பின்னடையச் செய்யும் எந்தவொரு முயற்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பொரள்ளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை தலைமை தாங்கி உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்து சமுத்திரத்தில் இலங்கையை வர்த்தக கேந்திர மத்திய நிலையமாக உருவாக்குவதே எமது இலக்கு. அதற்கு ஆதரவாளர்களின் ஒத்துழைப்பு அவசியம்.

நாட்டில் பல பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியாவும் ஜப்பானும் இணங்கியுள்ளன. இழக்கப்பட்ட ஜி.எஸ்பி வரிச்சலுகையை மீளப் பெற்றிருப்பது அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கு கடந்த வருட மே தினக் கூட்டத்திலும் இவ்வருடம் கூடுதலான ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பல கட்சிகள் இங்கு வருகை தந்துள்ளன. மருதானையில் இருந்து எமது ஊர்வலம் பொரளையை வந்தடைவதற்கு சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் எடுத்தது. இந்த மக்கள் கூட்டத்தைக் கண்டதும் எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்கும் தைரியம் எமக்கு கிடைத்துள்ளது.

எமது அரசியல் பாதையில் பாரிய குழி இருந்தது. அதில் விழுவதை தடுப்பதற்காகவவே நாம் பல கட்சிகள் கூட்டு சேர்ந்தோம். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை வெல்ல வைப்பதற்கு தீர்மானித்தோம். இறுதியில் வென்றோம். பின்னர் தேசிய அரசாங்கம் அமைத்தோம்.

இதன்போது கடந்த அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட பலர் குறித்தும் எமக்கு அறியக் கிடைத்தது. பலர் தமது வேலையை இழந்திருந்தனர். அவர்களுக்கு உதவுவதற்கு முன்பு சரிவடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாம் அவர்களிடம் ஒரு வருட கால அவகாசம் கேட்டிருந்தோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தார். இந்த பொருளாதாரத்தை இனிமேலும் கட்டியெழுப்ப முடியாதென மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் எமக்கு சவால் விடுத்திருந்தனர். எனினும் எம்மால் முடியுமென்ற நம்பிக்கையுடனேயே நாம் இருந்தோம்.

எவ்வாறாயினும் ஆட்சிக்கு வந்து ஒருசில வருடங்களுக்குள்ளேயே நாம் பொருளாதார ரீதியாக பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். இதனை நாம் இப்போது முன்னெடுக்காவிடில் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக மேலும் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். அதனால் நாம் தொடர்ந்தும் பொருளாதார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1977ஆம் ஆண்டில் திறந்த பொருளாதாரத்தை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தது ஏற்றுமதியை அதிகரித்து பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கேயாகும்.

நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். கடந்த 2003ஆம் ஆண்டில் நான் பிரதமராக இருந்தபோதே வரிச் சலுகை பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் பேசினேன். ஆட்சி மாற்றமடைந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க அப்பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தார். அதன் பயனாக எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைத்தது.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை இழக்கச் செய்தார். நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இழந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுத்தருவோமென தேர்தல் வாக்குறுதி வழங்கியிருந்தோம். அதன்படி கடந்த ஒரு வாரகாலத்துக்கு முன்பு இழந்த ஜி.எஸ்.பி பிளஸ்ஸை நாம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு பெருமையடைகின்றோம்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளது. அவர்கள் எம்மைப் புரிந்துக் கொண்டார்கள். அவர்கள் எம்மை ஒதுக்கவோ விலக்கவோ இல்லை. ஜி.எஸ்.பி மூலம் இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 6,600 வகையானப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஆடைகள் மட்டுமன்றி மேலும் பல பொருட்களை நாம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யலாம்.இதன் மூலமே நாட்டின் வருமானத்தை இருமடங்கில் அதிகரிக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமக்கு நாட்டை பாரிய கடன் சுமையுடனேயே பாரம் கொடுத்தார். அதற்கமைய 2018ஆம் ஆண்டில் நாம் 96 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக செலுத்த வேண்டியுள்ளது. 2020இல் வெளிநாட்டுக் கடனாக மட்டும் 1,500 கோடி டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது. எனவேதான் ஏற்றுமதி மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரித்து மக்களை பாதிக்காத வகையில் இக்கடனை திருப்பிச் செலுத்த நாம் தீர்மானித்துள்ளோம்.

ஜி.எஸ்.பி நடைமுறைக்கு வந்ததும் உள்நாட்டு வெ ளிநாட்டு முதலீடுகளுடன் நாட்டின் பல பாகங்களிலும் தொழிற்சாலைகளை நிறுவுவோம். இதன்மூலம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும். இதிலிருந்து கிடைக்கும் இலாபத்தை உரிமையாளருக்கு மட்டுமன்றி தொழிலாளிக்கும் வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எமது வேலைத்திட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை தடுத்து நிறுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர். அதற்கு ஐ.தே.க ஒருபோதும் இடமளிக்காது. எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண நாம் தயாராக இருக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer