Tuesday, May 9, 2017

புலம்பெயரும் பறவைகளையும் அவற்றின் வசிப்பிடப்பிங்களைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரத்துக்கு முக்கியத்துவம் தந்து 2006-ல் உலக புலம்பெயர் பறவைகள் தினம் தோற்றுவிக்கப்பட்டது.

புலம்பெயரும் பறவைகள் சந்திக்கும் ஆபத்துகள், அவற்றின் சூழலியல் முக்கியத்துவம், இப்பறவைகளைப் பாதுகாக்கவேண்டியதன் சர்வதச தேவை குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மே 10-ஆம் உலக புலம்பெயர் பறவைகள் தினம் தேதி கொண்டாடப்படுகிறது.

பறவைகள் திருவிழா, பறவைகள் குறித்த கல்வி நிகழ்வுகள், கண்காட்சிகள், பறவைகளைக் காண்பதற்கான சுற்றுலாக்கள் போன்றவை ஆண்டுதோறும் உலகின் வெவ்வேறு இடங்களில் நடக்கின்றன. இத்தகைய நிகழ்வுகளும் பறவைகள் பாதுகாப்பில் சேர்ந்ததேயாகும். ஆனால் ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு காலகட்டத்தில் பறவைகள் புலம்பெயரும் காலகட்டம் அமையும். அதற்கேற்ப நாடுகள் புலம்பெயர் பறவைகள் பாதுகாப்பு தினத்தை வெவ்வேறு தினங்களில் கொண்டாடுகின்றன.

எனினும் மே-10தான் உலக புலம்பெயர் பறவைகள் தினக் கொண்டாட்டத்தின் பிரதான நாளாகும்.
பறவைகள் புலம்பெயர்தல் இயற்கையின் அதிசய நிகழ்வுகளில் ஒன்றாகும். தங்கவும், உணவுதேடவும், முட்டையிட்டு குஞ்சுபொரித்து வளர்க்கவும் பறவைகள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பறந்துசெல்கின்றன. பறவைகள் வசிக்குமிடங்களில் முட்டையிடும் காலகட்டத்தில் பருவமோ, சூழலோ பொருத்தமில்லாமல் இருந்தால், பொருத்தமான சூழலுள்ள இடத்தைத் தேடி பறக்க பறவைகள் ஆயத்தமாகின்றன.

புலம்பெயர்வதில் பல்வேறு மாறுபாடுகள் உள்ளன. பொதுவாக பெரும்பாலான பறவைகள் தாங்கள் வசிக்கும் வட பகுதியிலிருந்து, தென்பகுதிக்கு அங்கே குளிர்காலம் நிலவும்போது இடம்பெயர்கின்றன. சில பறவைகள், ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இனப்பெருக்கம் செய்துவிட்டு, குளிர்காலத்தில் வடபகுதிக்கு இடம்பெயர்கின்றன. இன்னும் சில பறவைகள் குளிர்காலத்தில் மிதமான கடற்கரையோர பருவநிலையை விரும்பி இடம்பெயர்கின்றன. இன்னும் சில பறவைகள் குளிர்காலத்தில் தாழ்வான நிலப்பகுதிகளுக்குச் சென்றுவிட்டு, கோடைகாலத்தில் மலைப்பகுதிகளுக்கு பெயர்கின்றன. இத்தகைய பறவைகள் நீண்ட தூரத்தைக் கடப்பதற்கேற்ற கச்சிதமான உடலும் உள்ளமும், வேகமாகப் பறக்கும் திறனும் கொண்டவை. செங்கொண்டைப் பறவை, இருப்பதிலே நீண்ட தூரம் பறக்கும் பறவையினங்களில் ஒன்றாகும்.

வருடத்துக்கு இருமுறை புலம்பெயர்ந்து கிட்டத்தட்ட 16,000 கிலோமீட்டர் தூரத்தைக் இந்தவகைப் பறவைகள் கடக்கின்றன. சைபீரியாவில் முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் இவை, அதன்பின் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரைக்கோ, சிலநேரம் தென் ஆப்பிரிக்காவுக்கோகூட புலம்பெயர்கின்றன. புலம்பெயரும் பறவைகள் எப்படி அத்தனை துல்லியமாக இலக்கைச் சென்றடைகின்றன என்பது ஆச்சரியகரமானது. பகலில் சூரியனை வைத்தும், இரவில் நட்சத்திரங்களை வைத்தும் இடம்பெயர்கின்றன. இன்னும் சில பறவைகள் துருவப் பகுதிகளின் ஒளியை இனங்கண்டு பறக்கின்றன.

புலம்பெயரும் பறவைகளுக்காக ஒரு தினத்தை கடைப்பிடிப்பது எனும் யோசனை 1993-லேயே அமெரிக்காவில் தோன்றிவிட்டது. எனினும் அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் மட்டுமே இத்தினம் அனுசரிக்கப்பட்டது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதி நாடுகளையும் இணைத்துக்கொண்டு 2006 முதல் சர்வதேச தினமானது. இவ்வருட புலம்பெயர் பறவைகள் தினத்தின் கருத்தாக்கமானது, புலம்பெயர் பறவைகளின் எதிர்காலமே நமது எதிர்காலம் என்பதாகும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer