Tuesday, May 30, 2017

சிலருக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு, பார்க்க வருபவர்களை மகிழ்ச்சிப் படுத்தி ரசிக்க வைத்து விட்டால் போதும். சிலருக்கு சினிமா ஒரு அங்கீகாரம், அதிகாரம் மிக்க நிலையை அடைய ஒரு வழி. வெற்றிகரமான படங்களைக் கொடுத்து வரவேற்பையும் பெருமையையும் அடைய வேண்டும். சிலருக்கு சினிமா ஒரு விளையாட்டு. எதற்கு எடுக்கிறோம் என்று தெரியாமல், ரசிகர்களை கிறுக்கர்களாய் நினைத்து, படம் பார்க்க வருபவர்களுக்கு கிறுக்கு பிடிக்க வைத்து பின் அவர்களும் அப்படியே ஆகி போய்விடுவார்கள். இவர்கள், நன்றாய் எடுக்க முயற்சி செய்து தவறாய் போய் விட்ட கதையெல்லாம் அல்ல. 'இந்த மக்களுக்கு இது போதும், படம் ஓடி விடும்', என்ற தவறான எண்ணம். சிலருக்கு சினிமா, கலையின் உச்ச வடிவம். வெற்றி தோல்வி தாண்டி அதன் சாத்தியங்களை பரிசோதித்துக் கொண்டே இருப்பார்கள். சமுத்திரக்கனி போன்ற சிலருக்கு, சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அதை, நேர்மைறையான விஷயங்கள் சொல்ல பயன்படுத்தி,  அதன் வழி நன்மை சொன்னால் பரவும் என்ற நம்பிக்கை.

மிலிட்டரி வேலையை விட்டுவிட்டு, உயிருக்குப் போராடுபவர்களை உடனடியாக காக்க வேண்டும்  என்பதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுநராகும் 'மகா விஷ்ணு'வாக சமுத்திரக்கனி. அவருடன் முதலுதவி செய்யும் பணியில் 'சேவியராக' கஞ்சா கருப்பு. இவர்கள் ஒவ்வொரு உயிரைக் காப்பாற்றும் பொழுதும் ஒரு நட்போ பகையோ உருவாகிறது. அப்படி ஒரு கொலை முயற்சியில் காயமுற்றவரின் உயிரை, தடைகளை மீறி சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்ததால் உருவான ஒரு பகை இவர்களையும், இவர்களைச் சார்ந்தவர்களையும் என்ன செய்கிறது, அகிம்சையையே கொள்கையாய் வைத்திருக்கும் சமுத்திரக்கனி அதை எப்படி வெல்கிறார் என்பதே தொண்டன்.

உயிர் காக்கும் வேலை செய்பவர்களுக்கு 'மகா விஷ்ணு', 'சேவியர்' என்ற பெயர்கள், மிலிட்டரியில் இருந்துவிட்டு வந்து வன்முறையை முழுதாய் வெறுக்கும் நாயகன், 'தப்பு சார்' என்ற ஒற்றை வரியைத் தாண்டி உயர் அதிகாரி செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்க முடியாத போலீஸ் 'அப்துல் ரகுமான்', நியாயமான IPS அதிகாரிக்குப் பெயர் மயில்வாகனன், நீதிபதிக்குப் பெயர் பரந்தாமன், 'டீ வாங்கிக்கொடு' என்று அடுத்தவர்களிடம் கேட்கும் நிலையிலும்   'இல்லாதவர்களுக்கு இலவசம்' என்று ஆட்டோ ஓட்டுபவர்..இன்னும் இன்னும் பல விஷயங்களில் நிகழ்காலம், நேர்மறை எண்ணங்கள்,  நன்மை செய்தல் ஆகியவற்றை திகட்டத் திகட்ட புகட்டி இருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. இத்தனை போதனைகள் இருந்தாலும் 'போர்' அடிக்காமல் செல்வது நலம். பரபரப்பான துரத்தல் காட்சிகள் சமுத்திரக்கனியின் பலம். பெண்கள் மீதான வன்முறை, விவசாயிகளின் நிலை, ஜல்லிகட்டுப் போராட்டம், அதைத் தொடர்ந்த தாக்குதல், ஊடகங்களின் செயல்பாடு என நிகழ்காலத்தின் எல்லா விஷயங்களையும் வசனங்களில், காட்சிகளில் தொட்டுச் செல்கிறார். சூரி, தம்பி ராமையா வரும் காட்சி சிரிக்கவைக்கும் நகைச்சுவை. முதல் பாதியில் நகைச்சுவை என்று நம்பி எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், ஒவ்வொரு காட்சியிலும், யாரேனும் போதிக்க வருவார்களோ என்ற பயமும், வில்லன்களை பழி வாங்க சில பல ஆண்டுகளுக்கு முன் வந்த மசாலா படங்களின் முறையைப் பின்பற்றியது ஆகியவை குறையாக இருக்கின்றன.

விக்ராந்திற்கு கோபமும், சோகமும் வருவதைப் போல, காதல் இயல்பாக வரவில்லை. நீண்ட காலம் கழித்து நல்ல கதாபாத்திரங்களில் சுனைனா, கஞ்சா கருப்பு. பிற நடிகர்களும் அவரவர் பாத்திரத்திற்கு சரியான நடிப்பு. ஜஸ்டின் பிரபாகரனின் இசைதான் சற்று ஏமாற்றம். மனதில் நின்று விளையாட ஒரு பாடலும் இல்லை. பின்னணி இசை படத்திற்கு தேவையான பரப்பரப்பைத் தந்திருக்கிறது. இருந்தாலும், சமுத்திரக்கனி அந்த மாவட்ட செயலாளரிடம் பேசிவிட்டு வரும் காட்சியில் வரும் பின்னணி இசை, பழைய பேரரசு படங்களை ஒரு நிமிடம் கண்ணில் காட்டியது. வேண்டாம் ஜஸ்டின். ஏகாம்பரம், ரிச்சர்ட் நாதன் இருவரின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ற வண்ணங்களில், அந்த குடியிருப்பையும் அழகாக காட்டியிருக்கிறது. துரத்தல் காட்சிகளிலும், ஆம்புலன்ஸ் காட்சிகளிலும் ஒளிப்பதிவு நம்மையும் பதட்டத்துடன் அழைத்துச் செல்கிறது.

நிறைகளும் குறைகளும் கலந்த வாழ்க்கையைப் போலவே இரண்டும் கலந்திருந்தாலும் , நிறைகள் அதிகமாகவே உடையவன் இந்த தொண்டன்

0 comments :

Post a Comment

 
Toggle Footer