Tuesday, May 9, 2017

விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த ஆன்ட்ரியா தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் வகையிலும்  விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடன நிகழ்ச்சிகள் மற்றும் மிஸ் கூவாகம் அழகிப்போட்டி நடைபெற்றது.

முதல்கட்டமாக திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பாடலுக்கேற்ப நடனமாடி அசத்தினார்கள். அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக மற்ற திருநங்கைகள் குத்தாட்டம் ஆடினார்கள். தொடர்ந்து  மிஸ் கூவாகம் அழகிப்போட்டி நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 47 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

தமிழ் கலாச்சாரம், நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 10 பேர் 3 ஆம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மிஸ் கூவாகமாக சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த ஆன்ட்ரியா தேர்வு செய்யப்பட்டார். சேலத்தை சேர்ந்த கவி இரண்டாம் இடத்தையும், மதுரையை சேர்ந்த வர்னிதா 3ஆம் இடத்தையும் பிடித்தனர். இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்ட ஆன்ட்ரியாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ், கிரீடத்தை சூட்டி பரிசு வழங்கினார்.

இதேபோல் நடனப்போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, திருநங்கைகளின் நலனுக்காகவும், அவர்களுடன் சேர்ந்து முன்மாதிரியாக திகழும் சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் படிப்பு முடித்துள்ள ரேஸ்பானுவிற்கு சிறந்த இளம் திருநங்கைக்கான சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer