“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் வானூர்தியில் ஒன்றாகப் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதுவும் பேசுவதில்லை. மாறாக, அவர் தன்னுடைய உறவினர்களை பிரதமருக்கு அறிமுகப்படுத்தி வருகின்றார்.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தமது போராட்டத்தினால் உரிமைகளை பெற்று வருகின்றார்களே தவிர, வேறு எவரும் பெற்றுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி- இரணைதீவு பூர்விக மண்ணில் மீள்குடியேற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்துப் பேசினர். இதன்போது, ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “தமது பூர்வீக மண்ணில் குடியேறுவதற்காக மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடுகின்றனர். இவ்வாறு மக்கள் போராட்டத்தினால் தமது உரிமைகளை பெற்று வருகின்றார்களே தவிர, வேறு எவரும் பெற்றுக்கொடுக்கத் தயாராக இல்லை.
இந்த நிலையில் மக்கள் வீதியில் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் நாட்டின் பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இருவரும் ஒரே வானூர்தியில் பயணித்துள்ளனர். இவ்வாறு மிக நெருக்கமான உறவை வைத்திருக்கும் அவர்கள் மக்களிற்காக எதையும் பேசியதாக தெரியவில்லை. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவ்வாறு மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தனது மகளின் பிறந்த நாளிற்கு ஜனாதிபதியை அழைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இவ்வாறு மக்களை வீதிகளிற்கு கொண்டுவந்த அரச தலைவர்களுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பவர்கள், வீதிகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை என்றும் சிந்தித்தது கிடையாது. இந்த உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வெறுமனே மக்களின் வாக்குகளிற்காக அவர்களின் வீடுகளிற்கு செல்பவர்கள், பின்னர் மக்களை மறந்து தமது நெருக்கமான உறவை அரச தலைவர்களுடன் கொண்டுள்ளனர். உண்மையை மக்கள் உணர்ந்து எதிர்வரும் காலங்களில் செயற்பட வேண்டும்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
வானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Tuesday, May 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment