Wednesday, May 17, 2017

ரஜினிகாந்த் - ஒரு மந்திரச்சொல். நிறம் - தோற்றம் என அனைத்தும் கடந்து திரையுலகில் தன் திறமையால் தனக்கென ஸ்டைல் அமைத்துக்கொண்டவர். இந்திய சினிமாவே இன்றுவரை வியக்கும் அளவுக்கு உலக ரசிகர்களை ஈர்த்து சூப்பர் ஸ்டார் சிம்மாசனத்தில் கம்பீரமாய் அமர்ந்திருப்பவர் ரஜினி. உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்க மட்டேன்... நான் உயிர் வாழ்வதிங்கேதான், ஓடிவிடமாட்டேன் என்றும், என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா... என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா... என்றும் திரையில் அவ்வப்போது தன் தமிழ்ப் பாசத்தை வெளிப்படுத்துவார் ரஜினி. இதை விசிலடித்து வரவேற்ற ரசிகர்கள்... தலைவா அரசியலுக்கு வா... என அழைக்கும்போதெல்லாம், அது ஆண்டவன் கையில தான் இருக்கு என்று மேலே கையைக் காட்டுவார் ரஜினி. இவ்வளவு மக்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கிறதே? அதை வீணாக்கலாமா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு... கண்டிப்பாக அதை வீணாக்க மாட்டேன் என்றும் பதில் சொல்வார் அவர். இருக்கு ஆனா இல்ல என்ற பாணியில் தன் அரசியல் விருப்பங்களைத் தேவையான நேரத்தில் வெளிப்படுத்தியே வருவார்.

1996-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அதிரடியாய் ஒலித்தது ரஜினியின் வாய்ஸ். இந்த ஆட்சி மீண்டும் வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலகூட காப்பாத்த முடியாது என்று ஜெ.ஆட்சியை எதிர்த்து பேட்டியளித்தார் ரஜினி. அந்தத் தேர்தலில் திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, படுதோல்வியைச் சந்தித்தார் ஜெயலலிதா. மீண்டும் அரசியல் சூழல்கள் மாற... 2001-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். 2004-ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நடத்திய “கலைத்தாய்க்கு கலையுலகின் பாராட்டு விழா”வில் ரஜினியின் பேச்சு ஜெ.வுக்கு புகழ் மாலையாக அமைந்தது.

2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாகவே பா.ஜ.க.வை ஆதரித்தார் ரஜினி. அந்தத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தது பாஜக. ஆனால், ரஜினியின் குரல் காற்றில் காணாமல் போக, தமிழகத்தில் 39இடங்களையும் வென்றது திமுக கூட்டணி. அதன்பிறகு தேர்தல் நேரங்களில் அவர் வாய் திறப்பதில்லை. ஆனாலும், 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிரடியாய் ஒரு வெடியைக் கொளுத்திப்போட்டார் ரஜினி. ஆம்.. கேமராக்கள் புடைசூழ ஊடக வெளிச்சத்தில் இலைக்கு வாக்களித்தார். ரஜினி வாக்களித்தது பட்டாசாய் வெடித்துக்கொண்டிருக்க, அன்று மாலை கலைஞருடன் பொன்னர் சங்கர் சிறப்புக்காட்சியில் கலந்துகொண்டார். கலைஞரும் ரஜினியும் பொன்னர் சங்கர் படத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டனர்.

ரஜினி அரசியலைவிட அதிகம் விரும்புவது ஆன்மிகத்தைத் தான் என்பது அனைவரும் அறிந்தது. தனிமனித வாழ்வில் ஆன்மிகம் அவருக்கு தன்னிறைவைக் கொடுத்திருந்தாலும் சினிமாவிலும் அரசியலிலும் அது உதவாமலே போனது. ரஜினி நடித்த ஸ்ரீ ராகவேந்திரா, பாபா ஆகிய படங்களின் படுதோல்வியே அதற்கு உதாரணம். ரஜினியின் ஆன்மிக பலத்தை எப்படியாவது ஓட்டுகளாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இன்று வரை துடித்துக்கொண்டே இருக்கிறது பாஜக. இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் வரை தேர்தல் நேரங்களில் ரஜினியைச் சந்தித்து வாழ்த்து பெறுவதும் அதற்காகத்தான்.

1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பங்கேற்று பேச, இருந்த கூட்டத்தின் மேடைக்கு அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. அந்த குண்டுவெடிப்பு சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. அப்போது கருத்து தெரிவித்த ரஜினி “நல்ல வேளை ஆண்டவன் அத்வானியைக் காப்பாற்றிவிட்டார்” என்றார். “அத்வானியைக் காப்பாற்றிய ஆண்டவன் அப்பாவிகளைக் காப்பாற்றவில்லையே” என்ற எதிர்கருத்து மக்களிடமிருந்து வந்தது. அந்த முற்போக்குக் குரலே தமிழகத்தின் அடையாளமாக இன்றுவரை இருக்கிறது. என்ன தான் பாஜக-வினர் கைகொடுத்தும், கட்டியணைத்தும் ரஜினியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலும், அது ஓட்டாக மாறாமல் போவதற்கு இதுவே முக்கிய காரணம்.

தமிழர் பிரச்சனைகளில் ரஜினியின் குரல் எப்போதுமே கவனிக்கப்படும். தமிழ் உணர்வைப் பயன்படுத்தி தமிழகத்தில் ரஜினியைத் தனிமைப்படுத்தவே சிலர் நினைத்தார்கள். காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழர் - கன்னடர் இடையே பிரச்சினைகள் அப்போதும் கொதிநிலையில்தான் இருந்தது. தமிழர்களுக்கு ஆதரவுக்குரல் கொடுக்கத் தமிழ்த் திரையுலகம் நெய்வேலியில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் பிரம்மாண்ட கண்டனக் கூட்டத்தை நடத்தியது. அதில் கலந்துகொள்ளாமல் அடுத்த நாள் சென்னையில் தனியாக உண்ணாநிலை போராட்டம் என்று அறிவித்து அமர்ந்தார் ரஜினி. முதல்நாள் நெய்வேலிக்குப்போன சினிமா நட்சத்திரங்கள் முதல், அரசியல் தலைவர்கள் வரை பலரும் ரஜினியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். உண்ணாநிலை போராட்டத்தின்போது நதிகள் இணைப்பை வலியுறுத்தினார் ரஜினி. பணம் இல்லை என்று இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்... முதல் ஆளாக நானே ஒரு கோடி தருகிறேன் என்று அறிவித்தார். தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களை ஒன்றுதிரட்டி நதிகளை இணைப்பது பற்றி முழுவேகத்தில் செயல்படப்போகிறார் ரஜினி என்று அப்போது பேசப்பட்டது. ஆனால்... காவிரி நதிநீர்ப் பிரச்சனை இன்றும் தீயாய் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

2008-ஆம் ஆண்டு கலைஞர் கொண்டுவந்த ஒகேனக்கல்- கூட்டுக் குடிநீர் திட்டதிற்கு கர்நாடக மாநில அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க, அங்கிருக்கும் தமிழர்களும் தாக்கப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்தியது. அந்த மேடையில் தமிழர் உணர்வு அனல் பறக்க, ரஜினி என்ன பேசப்போகிறார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழ்நாடு... கர்நாடகா... எதுவா வேண்ணா இருக்கட்டும், சத்தியம் பேசுங்க, உண்மையப் பேசுங்க, நம்ம இடத்துல தண்ணீர் எடுக்க அவங்க தடுக்குறாங்கன்னா... அவங்கள ஒதைக்க வேணாமா... என்று பரபரப்பாய் பேசினார்.

2008-ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளைக் கண்டித்து உண்ணாநிலை போராட்டம் நடத்தியது தென்னிந்திய நடிகர் சங்கம். அதில் கலந்துகொண்ட ரஜினி, 35ஆண்டுகளாக தமிழர்களை உங்களால் ஒழிக்க முடியலனா நீங்க என்ன வீரர்கள்? ஆம்பளைங்களா நீங்க? என்று  இலங்கை அரசை வன்மையாக கண்டித்துப் பேசினார். எந்த நாடாக இருந்தாலும், பாமர மக்களின் வேதனையின் காற்றுப்பட்டாலே அந்த நாடு உருப்படாது... என்று உணர்வுப்பூர்வமாக இருந்தது  அவர் பேச்சு. ஈழத்தமிழர்களைப் பற்றி அவர் பேசும்போது இலங்கைத் தமிழர்கள் என்றே குறிப்பிட்டுப்பேசியது கவனிக்க வேண்டிய ஒன்று.

2012-ஆம் ஆண்டு ரஜினி உடல்நலனில் பிரச்சனை வந்தபோதும் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பூரண நலம் பெற்று 12.12.12 பிறந்த நாளன்று ரசிகர்களை நேரில் சந்தித்தார். அந்த ரசிகர்கள் வெள்ளத்தில் அவர் உருக்கமாகப் பேசினார். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். நான் மருத்துவமனையில் இருந்தபோது ரசிகர்களின் பிரார்த்தனைகளை அறிந்தேன். நான் நலம்பெற அதுவே காரணம். இதற்கு நன்றி என்று சொல்ல முடியாது. ஏதாவது செய்யவேண்டும்... ஆனால், அது என் கையில் இல்லை... என்று திரும்பவும் மேலே கையைக் காட்டினார். எந்திரன் பெரிய படமாக அமைந்தது. நான் அடுத்து நடிக்கப்போற படம் அதைவிடப் பெருசா இருக்கவேண்டும் என்று தன் விருப்பத்தை ரசிகர்களிடம் அப்போது பகிர்ந்துகொண்டார்.

பால்காரன், ஆட்டோக்காரன், வேலைக்காரன், உழைப்பாளி, தொழிலாளி என்று உழைக்கும் மக்களில் ஒருவனாக நடித்த ரஜினி, ’சிவாஜி’ படத்தில் கருப்புப் பண ஒழிப்பு என கார்ப்பரேட் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்தார். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் ரஜினியை தனக்கானவராக நினைத்து வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டன. அதை ரஜினி ஆதரித்ததும் இல்லை, எதிர்த்ததும் இல்லை. திரை ஜாம்பவன்களை படைதிரட்டி லிங்கா படத்தில் சிக்ஸர் அடிக்க கணக்கு போட்டார் ரஜினி... ஆனால் அது நடக்காமல் போனது.

தான் விரும்பி எடுத்த பாபாவிலும் தோல்வி, மக்கள் விருப்பம் இதுதான் என்று நினைத்து எடுத்த லிங்காவிலும் தோல்வி என்பதால் தனக்கான வெற்றியை அடைய புதிய களத்தில் தன்னைப் புகுத்திக்கொள்ள நினைத்தார் ரஜினி. அவர் அடுத்து கையில் எடுத்தது தலித் ஆதரவு அரசியல். அடக்குனா... அடங்குற ஆளா நீ... என நெருப்பாய்த் தோன்றி தன் திரை பலத்தை கபாலி படத்தில் நிரூபித்தார் ரஜினி. கபாலி படத்தில்... அதுவரை ரஜினியைக் கடுமையாக விமர்சித்த சிலர் பாராட்டுவதும், தீவிர ரஜினி ரசிகர்கள் சிலர் அவரை விமர்சிப்பதும் என்று ஆச்சரியங்கள் நிகழ்ந்தன. மீண்டும் ரஜினி, இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவர இருக்கிறது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.ஓ. இதன் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். இவர் இலங்கை அரசுக்கு ஆதரவானவர் என்று விஜய் நடித்த ‘கத்தி’ படம் வெளியாகும்போதே சர்ச்சைகள் வெடித்தன. லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கை வவுனியாவில் கட்டிய 150 வீடுகளை ரஜினி கலந்துகொண்டு, அதைத் தமிழ் மக்களிடம் ஒப்படைப்பதாகத் திட்டம். அதற்கு வீட்டை இடித்தவர்களே தலைமை தாங்குவார்கள் என்பதுதான் வேடிக்கை.

மத்தியில் பாஜக அரசு ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நல்லுறவு இருப்பது போல காட்டி, உலக நாடுகளை ஏமாற்றவே ரஜினியை பாஜக அரசு பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்பதும் ஈழ ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு. ரஜினியின் இலங்கைப் பயணத்திற்கு தமிழகத்தின் சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்ப, அதை ஏற்று அந்த நிகழ்வில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் ரஜினி. அவர் கொடுத்த அறிக்கைதான் ஹைலைட்! அவர் சொல்கிறபடியே எதையும் காரணம் இல்லாமல் அவர் செய்யமாட்டார். அவர் சொல்லும் முக்கிய காரணங்களுள் ஒன்று மீனவர் பிரச்சனையைக் குறித்து இலங்கை அதிபர் மைத்ரி சிறிசேனாவுடன் சுமூகத்தீர்வு காணப் பேசப்போகிறேன் என்பதுதான். குற்றவாளியிடம் நீதி கேட்பது வேடிக்கை இல்லாமல் வேறென்ன? மாவீரர்களின் சமாதிகளை பார்வைவிட அதற்குக் காரணமாய் இருந்தவர்களையே துணைக்கு அழைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்ற ஈழ ஆதரவாளர்களின் கூற்றையும் கவனிக்க வேண்டி உள்ளது. இப்படியாக... உழைக்கும் மக்களின் பிரதிநிதி, கார்ப்பரேட் எதிர்ப்பு, தலித் ஆதரவு, ஈழப்பாசம் என்று தொடர்கிறது ரஜினியின் பயணம்.

இந்த நிலையில் தனது ரசிகர்களை சந்தித்து இருக்கிறார் ரஜினி என்ற தகவல் மீண்டும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அரசியல் இல்லை என்று ரஜினி சொன்ன பிறகும் அரசியல் தலைவர்கள் அதை உற்றுகவனித்தே வருகிறார்கள். “ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்” என்ற பதப்படுத்தப்பட்ட ரசிகர்களின் குரல் இப்போதும் ஒலிக்கிறது. ரஜினியின் கையில் இருக்கும் அரசியல் நெருப்பு பொசுங்குமா அல்லது பொறி கிளப்புமா என்பதை பார்க்க பொறுமை அவசியம்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer