Friday, May 5, 2017

சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்த சுமார் 30இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 08.00 மணி முதல் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு (SAITM -South Asian Institute of Technology and Medicine) எதிராக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

எனினும், இந்த வேலை நிறுத்தம் காரணமாக எந்தவொரு நோயாளியும் உயிரிழக்க மாட்டாரென்றும் மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் வழமை போல் இயங்குமென்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இவ்வேலை நிறுத்தம், மகரகம புற்றுநோய் வைத்தியசாலை, அனைத்து சிறுநீரக சிகிச்சை நிறுவனங்கள், நாடு முழுவதுமுள்ள விபத்துப்பிரிவுகள் என்பவற்றை பாதிக்காது என்றும் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, "நோயாளர்களின் வாழ்க்கையும் மருத்துவக் கல்வியின் தரமும் சிங்கப்பூரிலுள்ள மெளன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற முடியாத அப்பாவி பொது மக்களுக்காக பாதுகாக்கப்படல் வேண்டும். சிங்கப்பூரிலுள்ள மெளன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறக் கூடியவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக அமையாது.

இந்த அடையாள வேலைநிறுத்தம் நாளை சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு நிறைவடையும். எனினும் எதிர்வரும் 09ஆம் திகதிக்குள் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிடத்து, ஏனைய துறைகளையும் உள்ளடக்கியதாக இவ்வேலை நிறுத்தம் பெரும் பூதாகரமாக உருவெடுக்கும்.

அர்த்தமற்ற பேச்சுக்களாலோ அல்லது யோசனைகளாலோ எவ்வித பிரயோசனமும் இல்லை. நாட்டிலுள்ள அனைத்து மருத்துவ பீடாதிபதிகள் மற்றும் மருத்துவ ஆசிரியர் சங்கத்தினால் முன்மொழியப்பட்ட ஒரு தொகை யோசனைகளை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அரசாங்கத்துக்கு முன்வைத்தோம். அதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.

தொழிற்சங்கங்களின் மீதான அடக்குமுறை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. எது எவ்வாறாக இருந்தாலும் அரசாங்கம் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு விவகாரத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் வரையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்விடயத்திலிருந்து ஓயப்போவதில்லை. மருத்துவ ஆசிரியர் சங்க அழைப்பாளரைத் தேடி மூவர் வந்துள்ளனர்.

இவர்களுள் ஒருவரிடம் ஆயுதம் இருந்துள்ளது. வைத்தியர் எம்.சி வீரசிங்க இச்சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சமீர சேனாரத்னவின் துப்பாக்கிச்சூட்டு நாடகத்தைப் போன்று பொலிஸார் இச்சம்பவம் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பர்கள் என்று நம்புகிறோம்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer