Monday, May 1, 2017

ஒரு மனிதன் சராசரியாக 8 மணி நேரம் பணி செய்ய வேண்டும், 8 மணி நேரம் உறங்க வேண்டும், 8 மணி நேரம் பொழுதுபோக்க வேண்டும் என்பது இப்போதைய விதி. ஆனால் ஒருக்காலத்தில் 20 மணி நேரம் உழைப்பை தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் செலுத்தினார்கள் என்றால் நம்ப முடிகிறதா?. இன்றைய இளைஞர்களால் நம்ப முடியாது. ஆனால், உண்மை அதுதான்.

இந்தியா மட்டும்மல்ல உலகம் முழுவதும் 19 ஆம் நூற்றாண்டு வரை தொழிலாளர்கள் 18 முதல் 20 மணி நேரம் வேலை செய்ய செய்தார்கள், செய்ய வைக்கப்பட்டார்கள். அதை எதிர்த்து தொழிலாளர்கள் உரிமை குரல் எழுப்பினர். அந்த உரிமைக்குரல்களை முதலாளித்துவமும், அதற்கு எப்போதும் அடிவருடியாய் இருக்கும் அரசுகளும் நசுக்க தொடங்கின. தொய்வடையாத தொழிலாளர்களின் போராட்டத்தால், ஒரு நூற்றாண்டுக்கு பின்பே தொழிலாளர்களின் உரிமை குரலுக்கு ஒவ்வொரு நாடாக செவிக்கொடுத்தன.

1827ல் பிலடெல்பியா என்கிற நகரத்தில் கட்டிட தொழிலாளர்கள் தான் முதன் முதலில் தங்களுக்கென சங்கம் அமைத்தனர். இது உலகின் முதல் தொழிலாளர் சங்கம் என அடையாளப்படுத்தப்படுகிறது. அதன்பின் தான் உலகத்துக்கே ஜனநாயகத்தை கற்று தந்ததாக கூறும் இங்கிலாந்து நாட்டில் 1829ல் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் உருவானது. அதன்பின் அமெரிக்காவில் நியூயார்க் நகர ரொட்டி நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் சங்கம் உருவாக்கினார்கள். இதேபோல் ரஷ்யா, ஜெர்மனி என பல நாடுகளிலும் தொழிலாளர்கள் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என போராடிவந்தனர். ஒருச்சில நாடுகள் இதை ஏற்றுக்கொண்டன. முதலில் 10 மணி நேரம் தான் இனி பணி நேரம் என வரையறுத்தனர். சில ஆண்டுகளுக்கு பின் அதை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொழிலாளர்கள் வைத்தனர்.

1861ல் அமெரிக்காவில் ஏகப்பட்ட தொழிற்சங்கங்கள் இருந்தன. சிறிய அளவிலான அந்த தொழிற்சங்கங்கள், சிறிது காலத்திலேயே தேய்பிறையாக மாறின. 1866 ஆகஸ்ட் 20ந்தேதி, பல்டிமேர் என்கிற இடத்தில் சிறுச்சிறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தேசிய அளவிலனா ஒரு தொழிற்சங்கத்தை தொடங்கினர். இதன் முதல் தலைவராக வில்லியம் சில்விஸ் தேர்வு செய்யப்பட்டார். பிற நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, தொழிலாளர் உரிமைக்காக போராட துவங்கினார். அதே ஆண்டு அந்த சங்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. அதில், பிற நாடுகளில் உள்ள தொழிற்சங்கத்தோடு, ஒன்றிணைந்து போராடுவது என முடிவு செய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர் அமைப்புகள் முதலில் இணைந்து போராடின. பின்னர் மற்ற நாடுகளின் அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்டது.

1876 மே 1ந்தேதி, தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை என்கிற கோரிக்கையை முன்வைத்து அமெரிக்காவில் தொழிலாளர் அமைப்புகள் மிகப்பெரிய வேலை நிறுத்தப்போராட்டத்தை சிகாக்கோ நகரில் நடத்தினர். இதை நடக்கவிடாமல் தடுக்க அமெரிக்காவின் பெரும் முதலாளிகளும், முதலாளித்துவ அரசும், காவல்துறையை ஏவி தொழிலாளர்களை நசுக்கினர். தொழிலாளர்கள் தரப்பில் உயிர் சேதம் ஏற்பட்டும் பின்வாங்கவில்லை. ஆல்பர்ட்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ், அடால்ப் பிட்ஸர் போன்ற இடதுசாரி சிந்தனை கொண்ட தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள் தலைமையில் இரவில் கண்டன கூட்டம் நடத்தினர். இந்த தொழிலாளர் போராட்டத்தில் காவல்துறை வன்முறையை உருவாக்கியது. போராட்டத்தில் ஈடுப்பட்ட தலைவர்களை தாக்கி கைது செய்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை என்கிற பெயரில் சித்ரவதை செய்தபின், நீதிமன்றம் 1877 நவம்பர் 11ந்தேதி தொழிலாளர் சங்கங்களின் முக்கிய தலைவர்களான ஆல்பர்ட்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ், அடால்ப் பிட்ஸர் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. முதலாளித்துவ அரசும் அதனை நிறைவேற்றியது.

இதனால் உலகம் முழுவதும்மிருந்த தொழிலாளர் சங்கங்கள், தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த படுகொலைக்கு பின் மே 1 தொழிலாளர் போராட்டம் எல்லா நாடுகளுக்கும் பரவியது. மேற்குல நாடுகளின் அரசுகள் இதை நசுக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. 1930க்கு பின் ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க தொடங்கின. உயிர் நீத்த தொழிலாளர்கள் நினைவாக மே 1ந்தேதியை தொழிலாளர் தினமாக ஏற்றுக்கொண்டது.

1858ல் ஆஸ்த்திரேலியாவை சேர்ந்த தொழிலாளர்கள் தான் உலகில் முதன் முதலாக, 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் உறக்கம் என்பதை பிரித்து அரசாங்கத்துக்கு கோரிக்கையாக வைத்து, அரசாங்கம் வழியாக நிறுவனங்களை ஏற்கவைத்து வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

அதன்பின் வந்த காலங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும், பணி பாதுகாப்புக்கு என பல்வேறு சட்டங்கள் அனைத்து நாடுகளும் இயற்றியுள்ளன. ஆனால், அதை கடைபிடிக்கும் நாடுகள் வெகு குறைவானவை. மேற்குலக நாடுகள் கடைபிடிக்கும் அளவுக்கு ஆசிய நாடுகள் கடைபிடிப்பதில்லை. இங்கு சட்டங்கள் எல்லாம் ஏட்டில் மட்டும்மே உள்ளன. இன்றளவும் தொழிலாளர்கள் 10 மணி நேரத்துக்கு மேல் துன்பபட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர்.

ராஜ்ப்ரியன்.
nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer