Monday, April 24, 2017

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழைய பழமொழி.

இப்போதெல்லாம் எத்தனை விசில் என்பது அரிசியைப் பொறுத்து என்றாகிவிட்டது.

திராவிட ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது என்று திராவிட இயக்கங்கள் தவிர்த்து மற்ற எல்லோருமே புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.

பல மாநிலங்கள் அடங்கிய இந்திய ஒன்றியத்தில், தமிழ்நாடு விடுதலை பெற்றபோது இருந்த நிலையைக் காட்டிலும், இப்போது எப்படி இருக்கிறது என்பதைக் கொண்டுதானே, மாநிலத்தின் நிலைமையை ஒப்பிட முடியும்?

ஒரு மாநிலத்தில் வாழும் மக்களின் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, சமூக நல்லிணக்கம், சுகாதாரம் இவற்றை அளவுகோலாகக் கொண்டுதான் அந்த மாநிலத்தின் வளர்ச்சியை கணக்கிடுகிறார்கள்.

அந்த வகையில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தைக் காட்டிலும் தமிழ்நாடு எல்லா விஷயத்திலும் முன்னேறித்தான் இருக்கிறது.

மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலைமையை எனது கிராமத்தைக் கொண்டு மதிப்பிட விரும்புகிறேன். 50 ஆண்டுகளுக்கு முன் எனது கிராமமும் கிராம மக்களும் இருந்த நிலைமையையும், இன்றைய எனது கிராமத்தின் நிலைமையையும், ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரம் என்பது வெகு தொலைவாக இருந்த காலகட்டத்தில் நான் பிறந்திருக்கிறேன்.

1959-ல் எங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊர்களுக்குக்கூட ஒற்றையடிப் பாதைகளிலும் கட்டைவண்டிகளிலும்தான் பயணிக்க வேண்டும்.

நான் முதல் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு காலாண்டு தேர்வு வரைக்கும் அலங்காநல்லூர் என்ற பேரூரில் படித்தேன். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகில், பழைய போலீஸ் குடியிருப்பு பின்புறம் நாங்கள் வைத்திருந்த விறகுக்கடையும், மர அறுவைக் கூடமும் ரொம்பப் பாப்புலர்.

அதையொட்டிய குடியிருப்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு -குறிப்பாக அருந்ததியர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்குச் சொந்தமானவை.

அந்தக் குடியிருப்பை சேர்ந்த மாணவர்களில் பலர் எனக்கும் எனது அக்காவுக்கும் பள்ளித் தோழர்களாக இருந்தனர். அவர்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லாவிட்டாலும், அவர்களுடைய பெற்றோர் எங்கள் விறகுக்கடையில் வேலைபார்க்கும்போது அந்த நண்பர்களுக்கும் எங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை நிறைய உணர முடிந்தது.

ஆனால், விறகுக்கடை எல்லை தாண்டி பெரியாறு கால்வாயில் நாங்கள் விளையாடும்போது அந்த வித்தியாசம் காணாமல் போய்விடும்.

அலங்காநல்லூர் வாழ்க்கையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வீரியத்தை, பழைய போலீஸ் ஸ்டேஷன் முன்பும், அன்றைக்கு பாலமேடு வரை ஓடிய பாரதா டிரான்ஸ்போர்ட் என்ற ஒரே பஸ்சை மறித்து நடத்திய போராட்டத்தின்போதும் ஓரமாய், சிறுவனாய் நின்று பார்த்திருக்கிறேன்.

1967 தேர்தலின்போது “""சோழவந்தான் பொன்னம்மா சோள விலை என்னம்மா?''’என்றும், “""கக்கா மாணவர்கள் உனக்கென்ன கொக்கா?''’என்றும், “""காமராஜ் அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சு?''’என்று அலங்காநல்லூர் வீதிகளில் தி.மு.க. கொடிபிடித்து கோஷம் எழுப்பிய நினைவிருக்கிறது.

வாடிவாசல் அருகேயுள்ள வேப்பமரத் திட்டில் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் பேசியதை கேட்ட நினைவிருக்கிறது.

1968-ல் நானும் எனது குடும்பமும் சொந்த ஊரான ஆதனூருக்கே செல்ல வேண்டியதாயிற்று.

ஆதனூரிலிருந்து வெளியூர் செல்ல நான்கைந்து ஒற்றையடிப்பாதைகள் இருந்தன. எங்கள் ஊருக்கும் பக்கத்து ஊரான தேவசேரிக்கும் இடையில் ஓர் ஓடை இருக்கிறது. மழைக்காலத்தில் ஓடையில் வெள்ளம் வந்தால் கடப்பது சிரமம்தான்.

கிராமத்தில் நுழைவுப்பாதையின் ஓரங்கள் திறந்தவெளி கழிப்பறைகளாக இருந்தன. ஊருணியிலும், கிணறுகளிலும் 30 அடிக்குள் தண்ணீர் காண முடிந்தது. மாடுகளின் உதவியோடு, கமலைவாரியில் தண்ணீர் இறைத்தே தோட்ட விவசாயம் பார்த்தார்கள்.

விவசாயக்கூலிகளுக்கு பணத்திற்கு பதிலாக சோளம், நெல் உள்ளிட்ட தானியங்களை கொடுத்தார்கள். கடைகளிலும் தானியங்களைக் கொடுத்துவிட்டே பொருட்களை வாங்கும் நிலை இருந்தது.

மேல்சட்டை போட்ட ஆட்கள் மிக அரிதாக இருந்தனர். ஒன்று அல்லது இரண்டு வேட்டி துண்டுகள் வைத்திருந்தால் அபூர்வம். பெண்களும் பெரும்பாலும் உடுத்து மாத்து சேலைகள் குறைவாகவே வைத்திருந்தார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பாலோர் ஒருசில பெரிய விவசாயிகளின் வீடுகளில் வருஷக் கூலிக்கு வேலை பார்க்கிறவர்களாக இருந்தார்கள். அந்த வீடுகளில் தரும் கஞ்சியையே உணவாக கொண்டார்கள்.

சலவைத் தொழிலாளர் குடும்பங்களும், முடிதிருத்துவோர் குடும்பங்களும் அறுவடைக் காலங்களில் தானியங்களையே ஆண்டுக்கூலியாக பெற்றன. காலை, மாலையில் பாத்திரங்களுடன்  வந்து, கிடைக்கிற உணவை வாங்கிச் சென்றார்கள்.

ஊருணியை ஒட்டி ஓட்டுப்பள்ளிக்கூடம் இருந்தது. பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் மிகக்குறைவாக இருந்தனர். ஐந்து வகுப்புகளுக்கு மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். மதிய உணவு முடிந்தவுடன் மிகச்சிலரே பள்ளியில் இருந்தனர். பெண்கள் மிகச் சொற்பமாகவே பள்ளிக்கு வந்தனர். அவர்களும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்கப்படுவதில்லை. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் திராவிட ஆட்சியின் முதல் முதல்வர் அறிஞர் அண்ணா மறைந்தார்.

ஆறாம் வகுப்பிற்கு மதுரையில் உள்ள அத்தை வீட்டிற்கு சென்றுவிட்டேன். என்னுடன் படித்தவர்களில் பலர் முடுவார்பட்டி நடுநிலைப் பள்ளியுடன் படிப்பை முடித்துக்கொண்டனர். சிலர் அலங்காநல்லூர் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றாலும் பள்ளி இறுதி வகுப்பை முடிக்காமலேயே தோற்றனர்.

முதன்முதலில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவன் நானாக இருந்தேன். பட்ட வகுப்பு தேறியவனும் நானாக இருந்தேன்.

திராவிட ஆட்சியின் தொடக்கத்தில்தான் முதன்முதலாக எங்கள் கிராமத்திற்கு தெருவிளக்கு அறிமுகமானது. வீடுகளுக்கும், கிணறுகளுக்கும் மின் இணைப்பு தரப்பட்டது. இணைப்புச் சாலை உருவாக்கப்பட்டது. மதுரையிலிருந்து பாலமேடு வரைக்கும் ஓரிரு தனியார் பஸ்களே இயக்கப்பட்ட நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கூட்டுறவு சங்கம் மூலமாக வெல்ஃபேர் கோவாபரேடிவ் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் ஒரு பஸ் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள முடுவார்பட்டி வரை பயணத்தை தொடங்கியது. முதன்முதலாக தாழ்த்தப்பட்டோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டன.

கிணற்றிலிருந்து மாடுகள் உதவியோடு தண்ணீர் இறைப்பது போய், மின் மோட்டார்கள் அதிகரித்தன. குறுகியகால விவசாயம் செய்வது மறைந்து, கரும்பு பயிரிடப்பட்டது. பேருந்துகள் அரசுடமை ஆக்கப்பட்டதால் அரசுப் பேருந்துகள் கிராமங்கள் வரை இயக்கப்பட்டன.

ஆதனூரில் மழலையர் பள்ளிக்கு கட்டிடம், தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் என்று வசதிகள் பெருகி இருக்கின்றன. ஊருணி ஆழப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. சாலை அகலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு மேல்நிலை நீர்த்தொட்டிகள் கட்டப்பட்டிருக்கின்றன. காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் கிராமங்கள் அனைத்தையும் இணைத்திருக்கிறது.

மதுரையிலிருந்தும், சுற்றுப்புறங்களில் இருந்தும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கிராமத்தில் வந்து மாணவர்களை ஏற்றிச் செல்கின்றன.

எட்டாம் வகுப்புவரை படித்த பெண்களுக்கு அரசின் திருமண உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்காரணமாக எல்லா பெண்களையும் எட்டாம் வகுப்புவரை படிக்க வைப்பதில் பெற்றோர் ஆர்வமாக இருந்தனர். பின்னர் அதுவே 10-ம் வகுப்புவரை படித்தால் என்று மாற்றப்பட்டது.  10-ம் வகுப்பு வரை நன்றாக படிக்கும் பெண்களை பெற்றோரே மேல்படிப்புக்கு அனுப்புவதற்கும் பக்குவப்பட்டனர்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்துமே பெண்களுக்கு என்று ஒதுக்கியதும், ஆசிரியர் பயிற்சி முடித்த அனைவருக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் வேலை கொடுத்ததும் திராவிட ஆட்சிதான்.

இன்று எனது கிராமத்தில் அனைத்துவிதமான உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்கின்றன. வீடுகள் அனைத்திலும் கழிப்பறை வசதி செய்யப்பட்டிருக்கிறது. கிராமம் சுத்தமாக இருக்கிறது. படித்தவர்கள் எண்ணிக்கையும், நகரங்களுக்கு வேலைக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. விவசாயம் சுருங்கினாலும், அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

கூரை வீடுகளாக இருந்த எனது கிராமத்தில் இப்போது கூரை வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.

மக்களின் பொருளாதார நிலை மேம்பட்டிருக்கிறது. சுயஉதவிக் குழுக்கள் மூலமாக பெண்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் சுயமுன்னேற்றத்தில் அக்கறை அதிகரித்திருக்கிறது. வெளியுலகப்பார்வை கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற உதவியிருக்கிறது.

இவ்வளவு இருந்தாலும், சில அரசியல் கட்சிகளும், சாதி அமைப்புகளும் சாதி உணர்விலிருந்து மக்கள் விடுபட்டுவிடாமல் ரொம்ப பாதுகாப்பாக வைத்திருக்க பாடுபடுகின்றன.

எனது கிராமத்தில் சாதிப் பாகுபாடுகளை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, இளைஞர்கள் ஓரளவு நெருக்கமாகவே பழகுவதாக நான் உணர்கிறேன். விரைவில் பாகுபாடுகளைக் களைந்து சாதிகளுக்குள் இணக்கமான உறவு ஏற்படும் காலம் உருவாகும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. திராவிட இயக்கங்களால் மட்டுமே அந்த நம்பிக்கை நனவாகும்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer