Tuesday, April 11, 2017

சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே சாலையில் திடீரென விரிசல்கள் தோன்றின. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள், "மீண்டும் ஒரு பள்ளமோ?", என்று அச்சம் கொண்டனர். உடனே போக்குவரத்து சாலையின் ஒரு புறமாக மாற்றி விடப்பட்டது. கடந்த ஞாயிறு மதியம், சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்றுகொண்டிருந்த 25 G பேருந்தில் இருந்த யாரும் அப்படி ஒரு அனுபவத்தை சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அண்ணா சாலையில் ஒரு பேருந்து நிறுத்தத்தில், நின்று கொண்டிருந்த பொழுது சாலையில் திடீரென்று ஏற்பட்ட சுரங்கத்தில் பேருந்து உள்ளே செல்ல, விபரீதத்தை உணர்ந்த ஓட்டுனர் அனைத்து பயணிகளையும் உடனடியாக பேருந்தில் இருந்து இறக்கி விட்டார். அனைவரும் தப்பினர். பேருந்தை ஒட்டி, பின்னே வந்துகொண்டிருந்த காரும் உள்ளே இறங்க, காருக்குள்  மாட்டிக்கொண்ட மருத்துவர் பிரதீப்பை சுற்றி இருந்தவர்கள் காப்பாற்றினார். பின்னர் பேருந்தும் காரும் கிரேன்களை பயன்படுத்தி  வெளியே எடுக்கப்பட்டன.

இதற்கு விளக்கமளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நம்மை மீறிய இயற்கையின் சக்தி தான் இதற்கு காரணம்" எனவும் மெட்ரோ கட்டுமான பணிகளில் எந்தத் தவறும் இல்லையெனவும் குறிப்பிட்டார். ஒரு முறை இயற்கையின் தவறு நிகழலாம். பலமுறை நடந்து விட்ட பிறகும் அதற்கான முன்னெச்சிரிக்கையாக எதுவும் செய்ய முடியாதா? இதைப்பற்றி கட்டுமான  வல்லுனர்கள்  கூறுகையில், மண் பரிசோதனையில் நிகழும் சிறிய தவறுகளாலோ அல்லது இன்னொரு இடத்தில் சுரங்கப்பாதை தோண்டப்படும் பொழுது  ஏற்படும் அழுத்தம், வெப்பம் ஆகியவற்றால் உண்டாகும் வெற்றிடத்தை  சரிசெய்ய தேவையான வகையில் தேவையான பொருளை இட்டு நிரப்பாமையினாலோ ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறினர்.

கடந்த மார்ச் 30 அன்று அண்ணா சாலையில் அமெரிக்க தூதரகத்தின் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டு சிமெண்ட் கலவை மற்றும் ரசாயனம் பீய்ச்சி அடித்ததில் அந்த வழி சென்றவர்கள் பீதி அடைந்தனர். அன்றே இரு இடங்களில் இதே போன்று நிகழ்ந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் நாள் ஸ்பென்சர் பிளாசா எதிரில் திடீர் பள்ளம் தோன்றி சேரும் ரசாயனமும் வெளிப்பட்டன. 2015 ஆம் ஆண்டு, சென்னை பொது மருத்துவமனை அருகே, சாலையில் திடீர் பள்ளம் தோன்றி கார் ஒன்று சிக்கியது. இப்படி மெட்ரோ பணியினால் திடீர் பள்ளங்கள் ஏற்படுவது போக, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 அன்று, காலை எட்டு மணியளவில்  தன் இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த கிரிதர் என்பவர் மீது மேலே  மெட்ரோ கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட பத்து அடி நீள இரும்புக்கம்பி விழுந்ததில் உயிர் இழந்தார். ஹெல்மெட் அணிந்தும் கனமான கம்பி என்பதால் உயிர்  பிழைக்கவில்லை.

மெட்ரோ பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களும் விபத்தில் உயிர் இழந்திருக்கின்றனர். எந்த சம்மந்தமும் இல்லாத பொது மக்களும் ஆபத்தை சந்திக்கின்றனர். மெட்ரோ பணிகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது ... டெல்லி, லக்னோ என மெட்ரோ ரயில் பணிகள் நிகழ்ந்த இடங்களில் விபத்துகள் நடந்திருந்தாலும், இந்த திடீர் சாலை  பள்ளம் சென்னையில் தான் நிகழ்ந்திருக்கிறது.

ஏற்கனவே விமான நிலைய மேற்கூரை உடைந்து விழுவது, வெள்ளம், புயல் என வித விதமான ஆபத்துகளை கடந்து வந்துகொண்டிருக்கும் சென்னை மக்களுக்கு புதிய சோதனையாய் திடீர் பள்ளங்கள் வந்திருக்கின்றன. எல்லா துன்பங்களிலும்  மீம்ஸ் போட்டு சிரித்துக் கடக்கும் நம்மவர்கள் இந்த திடீர் பள்ளத்துக்கும் பல மீம்ஸ்களை புதிதாய் இறக்கினர்.  இனி சாலையில் செல்லும் போது சென்னை மக்கள் முன், பின், வலது, இடது, மேல், கீழ் என அனைத்து திசைகளிலும் கவனமாய் செல்ல வேண்டும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer