Saturday, April 15, 2017

வெற்றி பெற்ற  மூலக்கதையை, மாற்ற வேண்டிய விதத்தில் மாற்றி 'ஆப்தமித்ரா' ஆக்கி கன்னடத்திலும், பின்   'சந்திரமுகி'யாக ஆக்கி தமிழிலும் மிகப்பெரிய வெற்றியாக்கியவர் இயக்குனர்  பீ.வாசு. கிட்டத்தட்ட அதே போன்ற  ஒரு கதையை மீண்டும் கன்னடத்தில் பெரிய வெற்றியாக்கி, இப்பொழுது  தமிழுக்கும்  கொண்டு வந்திருக்கிறார். சூப்பர் ஸ்டாருக்கு பதிலாக மக்கள் சூப்பர் ஸ்டார், மன்னிக்கவும், சின்னக் கபாலி லாரன்சை வைத்து, அதே வெற்றியைப் பெற முயன்றிருக்கிறார். 'மொட்ட சிவா கெட்ட சிவா' வெளிவரும் முன்பே இந்தப் படமும் முடிந்து விட்டதால், விளைவறியாமல் 'சின்னக் கபாலி' போற்றுதல்களை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், பட்டங்களால் ஏதுமில்லை, படங்கள் தான் விஷயம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

தனக்கு வசதியான கதைக்களத்தில் மிக சௌகரியமாக விளையாடி இருக்கிறார் இயக்குனர் வாசு. திகில் படங்களின் வழக்கப்படி, கொல்லப்படும் ஒரு நல்லவர், ஆன்மாவாக வந்து, பழிவாங்குகிறார். அதற்கு முன் பயம் காட்டுகிறார். கொலையை துப்பறிய கதாநாயகன் லாரன்ஸ். கலகலப்புக்கு வடிவேலு. கதாநாயகியாக ரித்திகா சிங். பிளாஷ்பேக்குக்கு சக்தி. இவர்களுடன் ராதாரவி, சந்தான பாரதி, VTV கணேஷ் என தேவையான நடிகர்களை வைத்து ஆபத்தில்லாத படத்தைக் கொடுத்திருக்கிறார். லாரன்ஸ் தன்னுடைய பலமான நடனத்தையும், நகைச்சுவை குறும்புகளையும் நன்றாக செய்திருக்கிறார். இவை தான் அவருக்கு இப்பொழுது இருக்கும் ரசிகர்களை பெற்றுத் தந்தது. இனி பார்ப்பவர்களுக்கும் பிடிக்கப் போவது. இப்படியிருக்க, கதையைத் தாண்டி தனக்கு கொடுக்கப்படும் அதீத 'பில்ட்-அப்'களை தொடர்வதும்  குறைப்பதும்  அவரது  விருப்பம். 'இறுதிச் சுற்று', 'ஆண்டவன் கட்டளை' ரித்திகா, நன்றாக ஆடியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார். ஆனாலும், இதற்கு மட்டுமா அவர் என தோன்றுகிறது. சக்திக்கு நல்ல கதாபாத்திரம், அவர் வளர்க்கும் புறாவுக்கும்.

நாமெல்லாம்  மிகவும் 'மிஸ்' பண்ணிய  சிறந்த நகைச்சுவை நடிகரான வடிவேலு, 'சிவலிங்கா'வில்    மெல்லத் திரும்பியிருக்கிறார். இடையில் வந்த படங்கள் அவருக்கானவை அல்ல. ஆங்காங்கே சலிப்பூட்டினாலும், படத்தின் நல்ல விஷயங்களில் 'வடிவேலு'வும் ஒன்று.

தமனின் வழக்கமான பாணி இசை. பாடல்கள் விறுவிறுப்பாய் இருக்கின்றன. திகில் காட்சிகள் பெரிதாய் பயமூட்டுவதாய் இல்லையென்பதால் இசையும் அவ்வாறே. சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவும் குறையில்லாத ஒன்று.

'சிவலிங்கா' - பெரிய ஆச்சரியமும் இல்லை, மிகுந்த  ஏமாற்றமும் இல்லை.  

0 comments :

Post a Comment

 
Toggle Footer