Friday, April 28, 2017

கூகிளின் மொழிபெயர்ப்புப் புரட்சி எனும் தலைப்பில், எழுத்தாளர், பதிப்பாளர்,சமூக ஆர்வலர், ஆழி செந்தில்நாதன் அவர்கள் தமது பேஸ்புக் தளத்தில்( Aazhi Senthil Nathan ) சிறப்பான ஒரு குறிப்பினைப் பதிவு செய்துள்ளார். அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கு மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team
கூகிளின் மொழிபெயர்ப்புப் புரட்சி

கூகிள் டிரேன்ஸ்லேட் இன்று தமிழ் உள்பட 9 இந்திய மொழிகளில் நரம்பிய தானியங்கு மொழிபெயர்ப்பு தொழி்ல்நுட்பத்தை (Neural Machine Translation) அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதற்கு முன்பு அது பயன்படுத்திவந்த புள்ளியியல் தானியங்கு மொழிபெயர்ப்போடு ஒப்பிடுகையில் இது மாபெரும் முன்னேற்றம். இன்னமும்கூட அது முழுமையான 100 சதவீத மொழிபெயர்ப்பைச் சாத்தியப்படுத்தவில்லை. அப்படி ஒருபோதும் நடக்கப்போவதுமில்லை. தானியங்கு மொழிபெயர்ப்பு முழுமையாக மனித மொழிபெயர்ப்பாளர்களுக்கு பதிலீடாக ஆகப்போவதில்லை.

என்றாலும், நரம்பிய தானியங்கு மொழிபெயர்ப்பு பெரும்பாலான தேவைகளுக்குப் போதுமானதுதான்.

அதாவது ஒரு ஆங்கிலச் செய்தியை அல்லது கட்டுரையை தானியங்கு வழியில் மொழிபெயர்த்து, கிட்டத்தட்ட அதை முழுமையாக படித்துப் புரிந்துகொள்ள முடியும்.

சில உதாரணங்கள்:

ஆங்கிலம்:

A constitutional referendum was held in Turkey on 16 April 2017 on whether to approve 18 proposed amendments to the Turkish constitution that were brought forward by the Justice and Development Party (AKP) and the Nationalist Movement Party (MHP).

கூகிள் மொழிபெயர்ப்பு:

ஒரு அரசியலமைப்பு வாக்கெடுப்பு துருக்கியில் ஏப்ரல் 16, 2017 அன்று நடைபெற்றது. துருக்கிய அரசியலமைப்பிற்கான 18 முன்மொழிய திருத்தங்களை ஒப்புக் கொள்ளலாமா என்பது குறித்து, நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி (AKP) மற்றும் தேசியவாத இயக்கம் (MHP) ஆகியவற்றால் முன்வைக்கப்பட்டன.

- சில சிறிய தவறுகள் நெருடல்களைக் கடந்தால், இந்த மொழிபெயர்ப்பு ஒரு சாதாரண வாசகருக்கு போதும்தான்.

இன்னொரு எடுத்துக்காட்டு:

State-run telecom operator BSNL has started offering 10 GB data per day as part of its 'Unlimited Broadband at 249' offer. The telco is allowing its users to download and use 10 GB data per day by paying monthly charges of Rs 249 only.

தமிழில்:

மாநில நெடுஞ்சாலை இயக்குனர் பிஎஸ்என்எல் தனது 24 ஜி அலைவரிசை வரம்பில் ஒரு நாளைக்கு 10 ஜிபி தரவுகளை வழங்கி வருகிறது. 249 ரூபாய் மாதாந்திர கட்டணம் செலுத்துவதன் மூலம், ஒரு நாளைக்கு 10 ஜிபி தரவு தரவிறக்கம் செய்து உபயோகிப்பது டெலஸ்கோ பயனர்களுக்கு அனுமதிக்கிறது.

State-run telecom operator ஐ மாநில நெடுஞ்சாலை இயக்குநர் என்று மொழிபெயர்ப்பது வேடிக்கையும் அரசியல் உள்நோக்கமும் கொண்டதுதான். (ஆனால் பிஎஸ்என்எல்லை மாநில அரசின் வரம்புக்குள் கொண்டுவருவதை நாம் வரவேற்கிறோம்). அதைத் தவிரத்துவிட்டுப் பார்த்தால், இதற்கு முன் இருந்த மொழிபெயர்ப்பைவிட இது எவ்வளவோ பரவாயில்லை.

மற்றொரு எடுத்துக்காட்டு

Never miss an episode when you're away from home. Amazon Fire TV Stick works with any HDTV so you can take it over to a friend's house or bring it along to hotels. Just plug and play anywhere—all you need is a Wi-Fi connection.Some content is not available in all countries.

வீட்டிலிருந்து நீங்கள் தொலைவில் இருக்கும் போது ஒரு அத்தியாயத்தை இழக்காதீர்கள். அமேசான் தீ டிவி ஸ்டிக் எந்த HDTV உடன் வேலை செய்கிறது, எனவே நீங்கள் ஒரு நண்பரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் அல்லது ஹோட்டல்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் பிளக் செய்து விளையாடலாம்-உங்களுக்கு தேவையான அனைத்து Wi-Fi இணைப்பு.சில நாடுகளில் எல்லா உள்ளடக்கமும் கிடைக்காது.

அமேசான் தீ! -

பயமாகத்தான் இருக்கிறது என்றாலும், இந்த மொழிபெயர்ப்பு நுட்பம் மேலும் நுணுக்கமாகவும் சரியாகவும் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் இதைக் கொண்டு சிறுகதைகளையும் கவிதைகளையும் மொழிபெயர்க்கமுடியாது. ஆனால் ஒரு ஆங்கிலக் கவிதையை பின்நவீனத்துவ தமிழ்க் கவிதையாக மொழிபெயர்ப்பப்பட வாய்ப்புமை இருக்கிறது (சரியாகத்தானே தப்பாக எழுதுகிறேன்?)

அதற்கும் ஒரு உதாரணம்:

I carry your heart with me(i carry it in
my heart)i am never without it(anywhere
i go you go,my dear; and whatever is done
by only me is your doing,my darling)

- e e cummings

தமிழில்

நான் உன் இதயத்தை என்னுடன் (நான் எடுத்துச்செல்வேன்
என் இதயம்) நான் அதை இல்லாமல் இல்லை (எங்கும்
நான் போகிறேன், என் செல்லம்; மற்றும் என்ன செய்யப்படுகிறது
நீ மட்டும் தான் என் செய்து, என் அன்பே)

தமிழி்ன் உலக இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களே, சாக்கிரதையாக இருங்கள். உங்களைவிட மெஷின் அதீத பின்நவீனத்துவத்தோடும் பரீட்சார்த்த விழுமியங்களோடும் மொழிமாற்றுகை நிகழ்த்துகிறது.

நரம்பிய தானியங்கி மொழிபெயர்ப்புதான் கடந்த ஓராண்டாக மொழிபெயர்ப்பு உலகில் மிகப்பெரிய பேச்சாக இருந்துவருகிறது.

அதென்ன "நரம்பிய"? அதாவது மனித மூளை - அதாவது நமது நரம்புகளில் - நாம் எப்படி மொழியைப் புரிந்துகொள்கிறோமோ அல்லது மொழிபெயர்த்து அறிகிறோமோ அதே உத்தியை கணிப்பொறி பின்பற்றினால் என்ன ஆகும்? மனித மூளையைப் போலவே கணிப்பொறி செயல்படும்படி செய்கிற செயற்கை மதிநுட்பவியலின் உச்சக்கட்ட சாத்தியங்களில் ஒன்றுதான் இந்ததொழில் நுட்பம். ( மிகவும் சுருக்கமாக எளிமைப்படுத்தி இதைச் சொல்கிறேன்.).

இந்த தொழி்ல்நுட்பத்தில்தான் தற்போது எங்கள் நிறுவனமும் சில ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்கிறது. (கூகிளோடு மோத அல்ல, மாறாக அந்த தொழில்நுட்பத்தை மேலும் நம்வசப்படுத்த).

அரசியலுக்கும் அறிவியல் தொழில்நுட்பத்துக்கும் இடையில் உள்ள உறவை அறிபவர்கள், இது போன்ற தொழில்நுட்பங்கள் மொழி ஆதிக்கங்களை அடியோடு தகர்க்கக்கூடியவை என்றும் புரிந்துகொள்வார்கள். எதிர்காலத்தில் மக்கள் அவரவர் மொழியிலேயே மற்றவர்களோடு தொடர்புகொள்ளப்போகிறார்கள். இங்கே எந்த மொழியைத் திணித்துக்கொண்டும் ஆர்பாட்டம் போடமுடியாது.

ஆங்கிலத்தையே உலகின் கடைசி இணைப்பு மொழி என்று சொல்லத்தொடங்கிவிட்டார்கள்.

2016 இல் சீன - ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இதை கூகிள் நிறுவனம் முதலில் அறிமுகப்படுத்தியபோது எங்களைப் போல மொழிபெயர்ப்பு நிறுவனங்களின் தலைமீது அது இடி போல வீழ்ந்தது. உண்மையிலேயே கலங்கிப்போய்விட்டோம்.

ஆனால் கடைசியில் ஒட்டுமொத்தமாகவே இது மொழிபெயர்ப்புத்துறையின் அளவையும் வீச்சையும் பல மடங்கு உயர்த்தக்கூடியது என்பதையும் நரம்பிய மொழிபெயர்ப்பு தமிழ் போன்ற அதிக முதலீட்டு, வள ஆதாரங்களற்ற மொழிகளுக்கு ஒரு பெரும்பேறு என்பதையும் அறிந்துகொண்டேன். அதன் பிறகு இப்போதைக்கு நம்ம பிஸினஸ் ஆட்டம் கண்டாலும் புதிய சூழலுக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை பிறந்தது.

அதைவிட முக்கியமாக இந்த தொழில்நுட்பம் உலகம் முழுக்க பல நூறு மொழிகளை அழிவிலிருந்து காப்பாற்றவும் உதவும் என்பதும் உண்மை.

செயற்கை மதிநுட்பம் (Artificial Intelligence) ஒருவழியாக இன்று தமிழுக்கு வந்துவிட்டது.

- நன்றி : ஆழி செந்தில்நாதன்

0 comments :

Post a Comment

 
Toggle Footer