Saturday, April 15, 2017

ஒரு வெற்றிகரமான கதாநாயக நடிகர், திரையில்  நடிப்பைத் தாண்டி வேறு விஷயங்கள் செய்யும் பொழுது, அதிகமாக கவனிக்கப்படுவார். நன்றாக இருந்தால், அதிகமாக கொண்டாடப்படுவார். நன்றாக இல்லையென்றால், "இவருக்கு எதுக்கு இந்த வேலை?", என அதிகம் விமர்சிக்கப்படுவார். இப்படி, அதிகம் விமர்சிக்கப்படுவதற்கு காரணம், பொதுவாக இயக்குனர் ஆகும் கதாநாயகர்கள்,பெரும்பாலும்  தங்களை முன்னிலைப்படுத்தும் படங்களாகவே இயக்கி வந்துள்ளனர் என்பதே. இவையனைத்தையும் மனதில் வைத்து, இந்த ஆபத்துகள் இல்லாத, ஆனால், காண்பவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய , ஒரு கதையை உருவாக்கி இயக்கியுள்ளார் இயக்குனர் தனுஷ்.

'பவர் பாண்டி' ஒரு வெற்றிகரமான, பிரபலமான சண்டைக்காட்சி இயக்குனராக இருந்து வயதின் காரணமாக தொழிலில் இருந்து விலகி, மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகியோருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். இவர்களுடன் வாழும் வாழ்க்கை, தனதாய் இல்லாமல் இருப்பதை உணர்ந்து, தன் வாழ்க்கையை தேடி மேற்கொள்ளும் பயணத்தில் எதைக் கண்டடைந்தார் என்பதே ப.பாண்டி. அவர் தன் வாழ்க்கையைத் தேடித் போவதற்கான காரணம், கொடுமைக்கார மகனோ, மரியாதை தராத மருமகளோ  இல்லை. இயல்பாக அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடும் தலைமுறை இடைவெளியுமே.  

இயக்குனர் தனுஷ், ஒரு திரைப்படத்திற்கு  கதாபாத்திரங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, மகன்-மருமகள் குறைந்த எண்ணிக்கையான கதாப்பாத்திரங்கள் என்றாலும் அவர்களுக்குள்ளான உறவு, அவர்களின் குணாதிசயங்கள் ஆகியவற்றை நன்றாக உருவாக்கியுள்ளார். ஒரு காட்சியில், பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு சண்டைக்காட்சிக்காக படப்பிடிப்புக்கு செல்லும் ராஜ்கிரண், அங்கு அவருக்குக் கிடைக்கும் ராஜ மரியாதையை எண்ணி மகிழ்வுடன் வீட்டுக்கு வந்து தரையில் அமர்ந்து  அந்தப் பெருமையை தன் மகன் பிரசன்னாவிடம் பகிர்கிறார். அந்த இரு காட்சிகளில், வெளியில் அவருக்கிருக்கும் மரியாதையும், வீட்டில், அவமரியாதை இல்லை எனினும் அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுவதும் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தில் முழுமையான இயக்குனராக நிற்கிறார் தனுஷ்.

ராஜ்கிரண், வெளியில் நின்று, வேகமாக பாவனைகளை மாற்றி அசர வைக்கும்  நடிகராக இல்லாமல், நிதானமாக உள்ளிறங்கி உணர்வுப்பூர்வமாய் தாக்கம் ஏற்படுத்தும் நடிகராக இருக்கிறார். மகன் திட்டும்பொழுது, பேரனிடம் காட்டும் சிரிப்பு, தொலைபேசியில் அவர்கள் குரல் கேட்டு காட்டும் மகிழ்ச்சி, காலம்  தாண்டிய காதல் என படம் முழுவதும், பவர் பாண்டியாக நம்மை மகிழ வைக்கிறார். பிரசன்னாவுக்கு , நல்ல தோற்றம், நல்ல நடிப்பு. இப்பொழுது அரவிந்த் சாமி, ரகுமான் போன்றவர்கள் பயன்படுத்தப்படுவதைப் போல பின்னாளில் பயன்படுத்தப்படுவார் என்று தோன்றுகிறது. ரேவதிக்கு அழகான கதாபாத்திரம். பேரன், பேத்தியாய் வரும் இருவரும் அழகு, சுட்டி. அனைவரும் ஈர்க்கும் படத்தில், உறுத்தலாக இருப்பது 'பிளாஷ்பேக்' காட்சிகள். தனுஷைக் காண்பது மகிழ்ச்சிதான் என்றாலும் அவ்வளவு நேரமும் நம்மை ஈர்க்கும் 'பவர் பாண்டி' மறைந்து, அந்த அரை மணிநேரம் தனுஷ் தான் தெரிகிறார். மடோனா, வித்யுலேகா ஆகியோரும் அந்த வகையே.

ஷான் ரோல்டனின் இசையில், பாடல்கள் மென்மையாக இருக்கின்றன. இசைக்கருவிகளின் ஆதிக்கம் குறைந்த, அழகான மெட்டுகளுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு பாணியை தனக்கென கடைபிடிக்கிறார்  ஷான்.  சதுரங்கவேட்டையின் ஒரு பாடல், 'ஜோக்கர்' பாடல்கள், 'ப.பாண்டி' பாடல்கள் என இந்த பாணி இசை  ஈர்க்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தனுஷிற்கு எப்பொழுதும் பலமே.

ப.பாண்டி, ஒரு  குடும்பப் பொழுதுபோக்காக இருப்பதுடன், வயதான  தாய் தந்தையின் எதிர்பார்ப்புகள், அவர்கள் நடத்தப்படும் விதம், அதற்குள்ளான வேறுபாடுகள் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer