Friday, April 28, 2017

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கடந்த 16ஆம் தேதி டெல்லியில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த 22-ம் தேதி டெல்லி சாணக்யபுரி போலீஸில் தினகரன் ஆஜரானார். அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்திய போலீஸார், 25-ம் தேதி நள்ளிரவில் கைது செய்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இருவரையும் 26-ம் தேதி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீஸார், அவர்களை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். அதை ஏற்று இருவரையும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

இந்நிலையில் தினகரன், மல்லிகார்ஜுனா இருவரையும் டெல்லி போலீஸார் வியாழக்கிழமை விமானத்தில் சென்னை அழைத்து வந்தனர். பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனுக்கு சென்றனர். அங்கு 2 அறைகள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

பின்னர், மாலை 4 மணி அளவில் இருவரையும் அடையாறில் உள்ள தினகரனின் வீட்டுக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து இருவரிடமும் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் வீடு முழுவதும் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் சில ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. அத்துடன் டிடிவி தினகரனின் மனைவி அனுராதா மற்றும் வீட்டு பணியாளர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

டிடிவி தினகரன் வீட்டுக்கு வெளியே ஊடகங்கள் குவிந்திருந்தன. அப்போது வெளியே வந்த டிடிவி தினகரன் மகள், போட்டோக்கிராபர்கள் உள்ளிட்ட ஊடகனத்தினரை தனது கேமரா மூலம் படம் பிடித்தார்.

இதற்கிடையே, மல்லிகார்ஜுனாவை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்ற போலீஸார், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திவிட்டு, மீண்டும் தினகரன் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer