Saturday, April 15, 2017

அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தான் சிறுவர் புரட்சியாளரான மலாலா யூசுஃப்சாய்க்குக் கனடா அரசு நேற்று புதன்கிழமை கௌரவ கனேடிய குடியுரிமையை வழங்கி சிறப்பித்துள்ளது.

மேலும் 19 வயதாகும் மலாலா கனேடிய பாராளுமன்றத்தில் நேற்று சிறப்பு உரையும் ஆற்றி அனைவரையும் ஈர்த்துள்ளார். அவர் தனது உரையின் போது பெண் சிறுமிகளுக்குக் கல்வி வழங்க வேண்டியதான அவசியம், அகதிகள் பிரச்சினை உட்படப் பல தரப்பட்ட விடயங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

முக்கியமாக பெண்கள் கல்விக்குக் கனடா அரசு வழங்கும் ஆதரவு, மனிதாபிமானம் மற்றும் அகதிகள் பிரச்சினை தொடர்பில் அதன் கருணை மற்றும் பெண்கள் உரிமைக்கும் உலக சமாதானத்துக்கும் சார்பாகக் குரல் கொடுத்தல் போன்ற காரணங்களுக்காகத் தான் கனடா அரசுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன் என மலாலா தெரிவித்தார்.

இதைவிட கனடாவின் இளம் பிரதமரான ஜஸ்டின் ட்ருதேயா யோகாவைப் பயிற்சி பண்ணுகின்றார். தனது உடலில் பச்சை குத்தியுள்ளார். மேலும் பல முன்னேற்றகரமான விடயங்களுக்கும் துணை நிற்கின்றார் என மலாலா கூறிய போது அரங்கமே சிரிப்பை வெளிப்படுத்தி கை தட்டி நின்றனர். இது மட்டுமல்லாது கனடாவின் பிரதமரான ஜஸ்டின் அகதிகளுக்குக் கொடுக்கும் அடைக்கலம் மற்றும் அந்நாட்டு அமைச்சரவையில் இரு பாலினத்தவருக்கும் சம உரிமை பேணுதல் போன்ற செய்கைகள் தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியவை என்றும் மலாலா குறிப்பிடத் தவறவில்லை.

மலாலா கனேடிய சிறுவர் சிறுமியருக்குத் தான் அளிக்கும் செய்தி எனக் கூறிய விடயம் என்னவென்றால் நீங்கள் அனைவரும் இந்நாட்டில் ஜஸ்டின் ட்ருதேயா போன்று உயர்ந்த பிரதமர் பதவி போன்ற பதவிகளை வகிக்க வயதானவராகத் தான் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை என்பதாகும். அண்மையில் தான் மலாலா யூசுஃப்சாய் ஐ.நா சபையின் இளம் சமாதானத் தூதுவராக நியமிக்கப் பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer