Monday, April 3, 2017

வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி
வருகிறார்கள்.

வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக இந்திய சட்டக் கமிஷன் மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளைச் செய்துள்ளது. அதில் சட்டப் படிப்பு மற்றும் வழக்கறிஞர்கள் தொழில் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வழக்கறிஞர்கள் அல்லாத பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் தவறு செய்யும்பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பார்கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில பார்கவுன்சில் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு பார் கவுன்சில் உறுப்பினர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழுவில் விசாரிக்கப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நடைமுறைதான் இதுவரை இருந்துவந்தது. இந்நிலையில், சட்டக் கமிஷன்
பரிந்துரையில் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் பார்கவுன்சில் உறுப்பினர்கள்
அல்லாத பிரதிநிதிகளைச் சேர்க்கும் வகையில் சரத்துகள்
கொண்டுவரப்பட்டுள்ளன.அதன்படி இந்த ஒழுங்குநடவடிக்கை குழுவில் ஓய்வு பெற்ற
நீதிபதிகள், ஆடிட்டர்கள், பொறியாளர்கள், அரசியல்வாதிகள், டாக்டர்கள்
போன்ற வழக்கறிஞர்கள் இல்லாத பிரிவைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கும்
சூழல் ஏற்பட்டுவிடும். மேலும், வக்கீல்கள் மீது வழக்கு தொடர்பவர்கள்
புகார் தெரிவித்தால் அந்த வழக்கறிஞர்கள் மீது நம்பிக்கை மோசடி சட்டப்
பிரிவின்கீழ் வழக்கு தொடரும் வகையிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை சட்ட மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய
அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு
அகில இந்திய பார்கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டில்
உள்ள அனைத்து மாநில வழக்கறிஞர்கள் சங்கங்களும் மத்திய அரசின் முடிவுக்கு
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பரிந்துரைகளின்படி
கொண்டுவரப்படவுள்ள சட்ட மசோதாவைத் திரும்பப்பெற வேண்டும் என்று
வழக்கறிஞர்கள் சங்கங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இதையடுத்து, இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு
முழுவதும் வழக்கறிஞர்கள் மார்ச் 31ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு
உள்ளிட்ட போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அகில இந்திய பார்கவுன்சில்
வேண்டுகோள் விடுத்தது.அதன் அடிப்படையில் நாடு முழுவதும் இன்று வழக்கறிஞர்கள்
போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கு விடுமுறை
விடப்பட்டிருப்பதால் இந்த சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வரும் 3ம் தேதி
போராட்டம் நடத்த வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், அகில இந்திய பார்கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா, இணைத்
தலைவர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர்
பிரசாத்தை நேற்று சந்தித்து பேசினர். அவர்கள் வக்கீல்கள் சட்டத்தில்
கொண்டுவரப்படும் திருத்தத்தால் வழக்கறிஞர்கள் தொழில் கடுமையாக
பாதிக்கப்படுவதுடன் நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை
போய்விடும் என்று சட்டத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், இந்த விஷயத்தை கவனமாக
பரிசீலித்து வழக்கறிஞர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவு
எடுக்கப்படும் என்று பார்கவுன்சில் நிர்வாகிகளிடம் அமைச்சர்
தெரிவித்துள்ளதாக பார்கவுன்சில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer