Friday, April 28, 2017

பழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா, சிறுநீர்ப்பை புற்றுநோய் காரணமாக மும்பை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 70. 1968ஆம் ஆண்டில் இந்தி திரையுலகில் வில்லனாக அறிமுகான வினோத் கண்ணா, முதலில் முக்கியத்துவம் குறைந்த வேடங்களிலேயே நடித்து வந்தார். 1971-க்குப் பிறகு கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி, பெரும் புகழ்பெற்றார். அமர் அக்பர் அந்தோனி, குர்பானி உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு ஏராளமான ரசிகர்களை தேடித்தந்தது.

நடிகர் வினோத் கண்ணா, திரைப்படத் தயாரிப்பாளராகவும், பின்னர் அரசியல்வாதியாகவும் அறியப்பட்டார். 1997-ல் பாஜக-வில் இணைந்த வினோத் கண்ணா, பஞ்சாப்பின் குருதாஸ்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், அதன் பிறகு வெளியுறவுத்துறை இணையமைச்சராகவும் பதவி வகித்தார். 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் குர்தாஸ்பூரில் இருந்து 4வது முறையாக எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வினோத் கண்ணா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், முற்றிய சிறுநீர்ப்பை புற்றுநோய் காரணமாக, இன்று காலை 11.20 மணியளவில் வினோத் கண்ணாவின் உயிர் பிரிந்ததாக, மும்பை சர் எச்.என். ரிலையன்ஸ் ஃபவுன்டேசன் மருத்துவமனை அறிவித்துள்ளது.

இவருக்கு கவிதா கண்ணா என்ற மனைவியும், ராகுல், அக்‌ஷயே, சக்‌ஷி என்ற மகன்களும், ஷ்ரத்தா கண்ணா என்ற மகளும் இருக்கின்றனர். வினோத் கண்ணாவுக்கு முன்னதாகவே கீதாஞ்சலியுடன் திருமணமாகி பின்னர் விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப்புக்கான பாராளுமன்ற உறுப்பினரான வினோத் கண்ணா பாலிவுட்டில் 141 படங்களில் நடித்துள்ளார். அரசியலில் தீவிர கவனம் காட்டி வந்த வினோத் கண்ணா சமீபத்தில் `தபாங்', `ப்ளேயர்ஸ்', `தபாங் 2', `தில்வாலே' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பாலிவுட் திரையுலகின் பல்வேறு உயரிய விருதுகளையும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

வினோத் கண்ணாவின் மறைவுக்கு இந்தி திரையுலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், மை டியர் பிரண்ட் வினோத் கன்னாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திகிறேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர் வினோத் கண்ணா மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மக்கள் மனதில் அர்ப்பணிப்புள்ள தலைவராகவும், நடிகராகவும் என்னென்றும் நிலைத்திருப்பார் என கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer