Wednesday, April 26, 2017

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலளிக்க வலியுறுத்தியும், இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தியும் நாளை வியாழக்கிழமை (ஏப்ரல் 27) வடக்கு- கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்புக்களும் தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், தமிழ் மக்கள் பேரவை, தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளிட்ட அமைப்புக்களும், வடக்கு- கிழக்கின் வணிக சங்கங்கள் உள்ளிட்ட தொழிலாளர் சங்கங்களும் கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் வளாகத்தில் இன்று புதன்கிழமை 66வது நாளாகவும், வவுனியாவில் 62வது நாளாகவும், மருதங்கேணியில் 43வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு, கேப்பாபுலவு, முள்ளிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையிலேயே, வடக்கு- கிழக்கில் பூரண கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer