Monday, April 10, 2017

கேப்பாப்புலவில் பாதுகாப்பு அமைச்சினால், அமைக்கப்பட்ட 150 கோடி ரூபா பெறுமதியான கட்டடத்தைத் தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக, மக்களுக்கு மாற்றுக் காணிகளும் பணமும் வழங்குவதற்கான முயற்சிகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இவ்விடயம் தொடர்பில் சிவில் அரச அதிகாரிகளுக்கும் அவர்கள் தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கேப்பாப்புலவு படைமுகாம் முன்பாக கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக 138 குடும்பங்களின் 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர். இந்நிலையில் கேப்பாப்புலவில் மாத்திரம் அண்ணளவாக 760 ஏக்கர் நிலப்பரப்பைப் பாதுகாப்புத் தரப்பினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இவற்றில் மக்களின் தொடர் போராட்டத்தினால், 279 ஏக்கர் நிலத்தை மாத்திரம் விடுவிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் சம்மதித்துள்ளனர்.

எனினும் விடுவிக்க இணங்கிய 279 ஏக்கரில், மக்களின் குடியிருப்புக் காணியான 142.2 ஏக்கர் உள்ளடங்கவில்லை. மக்களின் வாழ்வாதார நிலங்களும் அதில் உள்ளடங்கவில்லை என கேப்பாப்புலவு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தம்மால் விடுவிக்கப்படும் 279 ஏக்கரை மக்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களின் பரம்பரைக் காணிக்குரிய கொடுப்பனவும், புதிய காணியும் வழங்கப்பட்டு 14 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியில் புதிய வீடும் காணி உரிமையாளருக்குக் கட்டிக் கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத் தரப்பினர் தமது புதிய திட்டத்தை, சிவில் அரச அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

மக்கள் விடுவிக்கக் கோரும் காணியில் பாதுகாப்புத் தரப்பினரின் இரண்டு அடுக்கு மாடிக் கட்டடம் உள்ளடங்கியுள்ளதாகவும், அதன் சந்தைப் பெறுமதி 150 கோடி ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே பாதுகாப்புத் தரப்பினர் மாற்று யோசனையை முன்வைத்துள்ளனர் என்று சிவில் அரச அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer