Monday, April 24, 2017

தமிழகத்தில் திரைப்படங்களின் பங்கு பெரியது. கால மாற்றத்தில், கதாநாயகர்களின் மேல் உள்ள பிரமிப்பும், அதன் பொருட்டு நடக்கும் கொண்டாட்டங்களும் குறைந்திருந்தாலும், திரைப்படங்களின் மேல் உள்ள விருப்பம் இன்னும் குறையாமலே தான்  இருக்கிறது. அதே போல, திரைப்படங்கள் எப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் பெரியதே. பொழுதுபோக்காக இருக்க வேண்டும், அதற்காக என்ன வேண்டுமானாலும் காட்டக்கூடாது, நல்ல  கருத்துகள் கூறினாலும் அதை மட்டுமே கூற முடியாது, நிகழ்கால பிரச்சனைகளைப் பேசினாலும், சுவாரசியமாகத் தான் பேச வேண்டும். இந்தக் கோடுகளுக்குள் திறமையாக விளையாடி ஜெயிப்பதே ஒரு இயக்குனருக்கு சினிமாவில் வெற்றி. இந்தக் கோடுகளுக்குள் இருக்கும் களம் ஒன்றும் சிறிதல்ல. மிக மிகப் பெரியதே. அதற்குள் எடுக்கப்பட்டே ஆயிரக்கணக்கான வெற்றிப் படங்கள் சாத்தியமாகி இருக்கின்றன.

சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டுனராக பாலாஜி, அவருடைய நண்பர்கள் பால சரவணன் மற்றும் 'யோகி' பாபுவுடன் மகிழ்ச்சியான, சிறிய வாழ்க்கை வாழுகிறார். அவரது வாழ்க்கையில் காதல் வருகிறது, காதலுக்குப்  பெண் வீட்டில் எதிர்ப்பு வருகிறது. பலமான பின்புலம் உள்ள குடும்பத்தின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைக் கூறி  ஒரு எதிர்பாரா திருப்பத்துடன் 'நகர்வல'த்தை முடித்திருக்கிறார் இயக்குனர் மார்க்ஸ். 'கனா காணும் காலங்கள்' ஜோவாக இன்னும் நம் மனதில் இருக்கும்  யுத்தன் பாலாஜி அமைதியான  நாயகனாக இருக்கிறார். முதல் பாதியில் வரும்  கலகலப்பான காட்சிகளில் அவர் இன்னும் கொஞ்சம் கலகலப்பாக இருந்திருக்கலாம். மற்றபடி அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார். 'தீக்ஷிதா', பள்ளி மாணவியாக பொருத்தமாக இருக்கிறார். படத்தின் பெரும்  பலமாக பாலசரவணனும் 'யோகி' பாபுவும் இருக்கின்றனர். முதல் பாதியை காப்பாற்றுகின்றனர். 'வேட்டை' முத்துக்குமார், ரவி, G.மாரிமுத்து ஆகியோரது நடிப்பு கவனிக்க வைக்கிறது.

இளையராஜா ரசிகையாக கதாநாயகி இருப்பதும், இளையராஜா அவர்களுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விதமும் ரசனை. காதல் தான் படத்தின் பெரும் பகுதி என்றான பின், காட்சிகளிலும் பாடல்களிலும், தயங்காமல்  இன்னும் அதிகமாய், அழகாய் காதலை சேர்த்திருந்திருக்கலாம். கதை நடக்கும் இடங்களும், கதாபாத்திரங்களின் தோற்றமும், உடைகளும் மிக இயல்பாக இருப்பது பலமாக இருக்க, காட்சிகள் அழுத்தமில்லாமல் செல்லுவது பலத்தைக் குறைக்கிறது. கடைசியில் வரும் திருப்பத்தில்,  முக்கியமான பிரச்சனையை சொல்லி, காட்டிய புதுமையை துவக்கத்தில் இருந்தே காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். படிக்காத அல்லது குறைவாகப் படித்த பையன், நன்கு படிக்கும் பெரிய குடும்பப் பெண்...இவர்களையெல்லாம்  போதுமான அளவு, படங்களில் பார்த்து விட்டோம் அல்லவா?    

பவன் கார்த்திக்கின்  இசையில் 'அந்தாங்கிறேன்...இந்தாங்கிறேன்' பாடல் ரசிக்க வைக்கிறது. தமிழ்த்தென்றலின் ஒளிப்பதிவில் பல நல்ல கோணங்கள் இருந்தன. இருந்தாலும் படம் முழுவதும் சற்று அயர்ச்சி தரும் ஒளியமைப்பு இருப்பது போல் உணர்வு. சென்னையின் எளிய மக்களின் வாழ்க்கையை காட்ட வேண்டும், காட்டப்படாத தண்ணீர் லாரி டிரைவரின் வாழ்க்கையைக் கையில் எடுக்க வேண்டும், இயல்பான இடங்களையும், உடைகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற இயக்குனர் மார்க்சின் முனைப்பு சிறப்பானது. அதற்கு எடுத்துக் கொண்ட கதை, 'காதல்' முதல் பல படங்களில் நமக்கு அறிமுகமானதாய் இருக்கிறது. முன்பெல்லாம் படங்களின் போக்கை கவனிக்கும் பொழுது, களம் ஒரே மாதிரியானதாகவும் கதைகள் வேறு வேறாகவும் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன. சமீப காலங்களில் புதிய புதிய களங்கள் இளம் இயக்குநர்களால் கையாளப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், களத்தில் ஈர்த்து விட்டு, கதையில் சறுக்குவது ஏமாற்றம்.      

மோசமாய் இல்லாமல் இருக்கும்  இந்த நகர்வலத்தில் நாம் காணும் இடங்களும் மனிதர்களும் புதிது...காட்சிகள் சற்று பழையது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer