Monday, April 24, 2017

வணக்கம்,

நெடுவாசல் பேசுகிறேன்..

நான் நெடுவாசல் கிராமம். பிப்ரவரி 15-க்கும் முன்னால என்னை யார் என்று தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனா 16-ஆம் தேதிக்குப் பிறகு என்னை தெரியாம இருக்க முடியாது.

முதல்ல என்னைப் பற்றி சொல்லிடுறேன்.. பழைய தஞ்சை மாவட்டம் 1974-க்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டம் பிரிக்கப்படும் போது புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் நான். ஊருக்கு கிழக்கே காவிரி ஆறு ஓடுது (இப்ப தண்ணி இல்லாம வறண்டு கிடக்குது). ஊரு எல்லாம் மா, பலா, வாழை என்று முக்கனிகளின் விளை நிலமாகவும் கடலை, சோளம், மிளகாய், எள், நெல் விளையுற மண்ணா இருக்கிறேன். நீங்க எந்த விதைய போட்டாலும் கொத்து கொத்தா விளைச்சலைக் கொடுப்பேன். என் மண்ணை என் மக்கள் இன்னும் கெடுக்கல. வீட்டுக்கு வீடு ஆடு, மாடு இருக்கிறதால உரத்துக்கு பதிலா எரு போட்டு என்னையும் வளமா வச்சிருக்காங்க.

நானும் என் பிள்ளைகளும்..

பெரிய ஊரு. அதனால கிழக்கு மேற்குன்னு நிர்வாகத்துக்காக ஊராட்சிகளைப் பிரிச்சு வச்சிருந்தாலும், மக்கள் ஒன்னா தான் இருக்காக. காவிரியில தண்ணி வரலன்னு என் கிராம மக்கள் சோர்ந்து உக்காந்திருக்கமாட்டாங்க. ஆழ்குழாய் கிணறு அமைச்சு தண்ணி பாய்ச்சி என்னை எப்பவும் குளிர்ச்சியா வச்சிருப்பாங்க. அதனால நானும் இந்த மக்களுக்கு குறை இல்லாம விளைச்சலைக் கொடுப்பேன். விவசாயம் செழிக்கத் தொடங்கின பிறகு பிறந்த குழந்தைகள், படிக்கத் தொடங்கி இப்ப பல நாடுகள்லயும் வேலை செய்றாங்க. அதனால என்னை மறக்க மாட்டாங்க.

இடியாய் விழுந்த திட்டம்!

நான் மட்டுமில்லங்க, என்னைச் சுற்றியுள்ள எல்லா உறவு கிராமங்களும் செழுமை தான். இப்ப அடிக்கிற வெயிலுக்கு கூட நாங்க இதம் கொடுக்கும் நிழல் மரங்களை வளர்த்து வச்சிருக்கோம். இப்படி செழுமையான கிராமத்தை தான் அழிக்கிற திட்டமா ஹைட்ரோ கார்பன் என்கிற இயற்கை எரிவாயு எடுக்கிற திட்டத்தை மத்திய அரசாங்கம் பிப்ரவரி 15-ஆம் தேதி மாலையில அறிவிச்சது. அதைப் பார்த்து நான் கொதிச்ச கொதிப்பு பக்கத்து கிராமத்துல மட்டுமில்ல வெளிநாட்ல இருக்கிற எங்க புள்ளைகளுக்கும் தூக்கம் இழக்க செஞ்சிருச்சு. மறுநாள் 16-ஆம் தேதி காலை 7 மணிக்கே, என் கொதிப்பை வெளியே கொண்டு வர பத்திரிக்கை தம்பிகள் ஊருக்குள்ள வந்துட்டாங்க. அப்ப எனக்கு கொஞ்சம் நிம்மதி, இந்த தம்பிகள் எப்படியும் என் கொதிப்பை வெளியே கொண்டு போய் என்னையும் என் உறவு கிராமங்களையம் அழிக்கிற திட்டத்தை முடக்குவாங்க என்ற நம்பிக்கை வந்தது.

எனக்கான முதல் போராட்டம்..

வந்த தம்பிகள் கடைவீதியில நின்னு ஊர் பெரியவர்களிடம் பேசினாங்க. திட்டம் வந்தா விவசாயம் அழியும், மண்ணு மலடாகும்ன்னு சொன்னாங்க. (இத்தனை குழந்தைகளைப் பெற்ற வயிறு மலடாகலாமா?) அப்பவே திரண்ட என் கிராம மக்கள், முதல் ஆர்பாட்டம் செஞ்சாங்க. அப்ப அந்த வழியா பள்ளிக்குப் போன என் செல்லங்கள் என்ன ஆர்பாட்டம்ன்னு கேட்க ஹைட்ரோ கார்பன்னு திட்டம் வருதாம். அது மீத்தேன் போல திட்டமாம் என்று சொல்ல, உடனே அந்தத் திட்டம் வரக் கூடாதுன்னு ஒரு மனு எழுதுங்க, அதுல முதல் கையெழுத்து நாங்க போடுறோம்ன்னு மாணவ செல்வங்கள் 50 பேருக்கு மேல கையெழுத்து போட்டாங்க. அடுத்த நாளே மாவட்ட ஆட்சியர்கிட்ட கையெழுத்து போட்ட மனுவை ஊர் பெரியவங்களும் விவசாயம் காக்கிறவங்களும் சேர்ந்து போய் கொடுத்துட்டாங்க.

அதுக்குப் பிறகும் சும்மா இருக்கல. தினம் தினம் மக்கள் கூடி கூடி பேசுவாங்க. அரசாங்கம் எதையும் சொல்லல. பிப்ரவரி 25-ஆம் தேதி மோட்டார் சைக்கிள்ல 100 கிராமங்களுக்கு கருப்பு கொடியோட பேரணியா போய் வந்தாங்க. 25-ஆம் தேதி உண்ணாவிரதம் என்று சொன்னாங்க. என் மண்ணில் விளைஞ்ச நெல். என் குழந்தைகளுக்கு கிடைக்கல, பட்டினி போடுதேன்னு எனக்கு அழுகை வந்தது. துடைத்துக் கொண்டேன். எனக்காக உடல் வருத்தி போராடத் தயாரானாங்க. என் கிராமம் மட்டுமில்லாம என் உறவுல உள்ள 100 கிராம மக்களும் வெளியூர் மக்களும் வந்து நாடியம்மன் வாசல்ல, ஆலமரத்தடியில சாப்பிடாம அமர்ந்தாங்க. அதன் பிறகு தொடர்ந்து போராட்டத்தையே திருவிழா போல நடத்தினாங்க.

வயது வித்தியாசம் பார்க்காமல் போராட்டம்!

ஒரு நிகழ்ச்சிக்கு யார் வந்தாலும் அவர்களை கையெடுத்து கும்பிட்டு அழைக்கிறது வழக்கம். அதுபோல, போராட்டக் களத்துக்கு வந்த வெளியூர் மக்களைக் கையெடுத்து கும்பிட்டு வரவேற்று அமரச் சொன்னாங்க. வந்த மக்கள் போராடும் மக்களுக்கு சோறும் தண்ணியும் கொண்டு வந்து கொடுத்தாங்க. மதியம் சாப்பாடு போராட்டக் களத்தில் ஆட்டம்-பாட்டம், ஒரு கலைத் திருவிழா போல போராட்டத்தையே நடத்தினாங்க. அதைப் பார்த்து திரை நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இப்படி எல்லாரும் வந்தாங்க. எனக்காக என் மண்ணுக்காக இத்தனை பேர் வருவதை பார்த்து ஆனந்த கண்ணீர் வந்தது. அந்த ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாம தான் மு.க.ஸ்டாலின் வந்த அன்று மழையா கொட்டிட்டேன். 4 வயசு குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரைக்கு வந்தாங்க. திருநங்கையும், மாற்றுத்திறனாளிகளும் வந்தாங்க.

இப்படி எல்லாம் போராட்டத் திருவிழா நடத்தினவங்களைத் தான் பா.ஜ.க-வின் எச்.ராஜா நெடுவாசல் பயங்கரவாதிகளின் பிடியில் இருக்குன்னு பொசுக்குன்னு சொல்லிட்டார். அந்த வார்த்தைகள் என்னை ரணமாக்கிடுச்சு..

யார் பயங்கரவாதிகள்?!

யாரு பயங்கரவாதி...? 4 வயசு குழந்தையும் நெடுவாசலை காப்போம்ன்னு உரக்க முழக்கம் போடுதே அந்த குழந்தை பயங்கரவாதியா? இல்லை என்னைக் காக்க என் மண்ணில் அழுது புறண்டு ஒப்பாரி வச்சு சுருண்டு விழுந்து செத்த பொன்னம்மா பயங்கரவாதியா? கைகளை மட்டுமே ஆயுதமா கொண்டு வந்து உயர தூக்கி முழக்கமிட்ட இளைஞர்களும், மாணவர்களும், இளம் பெண்களும் பயங்கரவாதிகளா? நடுங்கிற குளிர்ல குளத்து தண்ணியில இறங்கி நெடுவாசலை காப்பாற்றுன்னு முழங்கினவங்க பயங்கரவாதிகளா? உரிமைக்காக கண்ணீர் வடிய ஓட்டை மண் சட்டியில  சொந்த மண்ணுலயே பிச்சை எடுத்தாங்களே அந்தப் பெண்கள் பயங்கரவாதிகளா? நடக்க முடியாமல் கோவையில் இருந்தும், பெருங்களூர்ல இருந்தும் மற்றவர்கள் துணையோடு வந்து ஆதரவு கொடுத்தவங்க பயங்கரவாதிகளா? போராட்டக் களத்தில கூட யாரையும் குறை சொல்லி பேசாதீங்கன்னு கட்டுப்பாடு போட்டு போராட்டத் திருவிழாவை நடத்தினவங்க பயங்கரவாதிகளா? தள்ளாத வயதிலும் போராட்டத்தில் கலந்துகொண்ட மூதாட்டி கொண்டுவந்த கைத்தடி பயங்கர ஆயுதமா? குழந்தைகள் பிடித்த பதாகையின் கைபிடி குச்சி பயங்கர ஆயுதமா? போராடும் மக்களுக்கு ஆதரவாக கோவையில் இருந்து ரயிலேறி வந்து குளித்தலையில கைது செய்யப்பட்டார்களே 2 மாணவிகள், 5 மாணவர்கள்; அவர்கள் மீது நக்சலைட்களுன் தொடர்பு, பிரிவினை ஏற்படுத்துவாங்க, மத்திய மாநில அரசுகளை குறை சொல்வாங்க, பயங்கர ஆயுதம் வச்சிருந்தாங்கன்னு சொல்லி சிறைக்கு அனுப்புனாங்களே அவங்க வச்சிருந்த ஆயுதம் என்னய்யா..? 2 பறைகளும் 4 பறை அடிக்கிற குச்சிகளும் தானே? ஒருவேளை அதுதான் பயங்கர ஆயுதமா?

என் பிள்ளைகள் பயங்கரவாதிகளா?

அய்யா எச்.ராஜா என்னைக் காக்க போராட வரும் என் பிள்ளைகள் பயங்கரவாதிகள் இல்லய்யா.. அவங்களை அப்படி சொல்லாதீங்கய்யா.. உங்க வார்த்தைகள் தான் பயங்கரமா இருக்குய்யா.. நிச்சயம் என் பிள்ளைகள் என்னை மீட்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கய்யா.. மறுபடியும் நீங்க என்னைப் பார்க்க வாங்க அப்ப கூட கையெடுத்து கும்பிட்டு தான் என் மக்கள் உங்களை வரவேற்பாங்க. ஒரு நாள் உலகம் சுற்றும் வாலிபன் நம்ம பிரதமர் மோடி அய்யாவையும் அழைச்சுக்கிட்டு வாங்க, என்னைப் பார்க்க. பார்த்துட்டு அப்பறம் சொல்லட்டும் என்னை அழிக்கலாமா? என்று..

இப்பவும் என் பிள்ளைகள் நாடியம்மன் கோயில் வாசல்ல தான் கிடக்குறாங்க. என்னைக் காக்க! நீங்க நம்புற என் கிராம நாடியம்மன் என்னை காக்கும் என்ற நம்பிக்கையோட காத்திருக்கிறேன்.

அன்புடன்,
நெடுவாசல்.

இரா.பகத்சிங்

0 comments :

Post a Comment

 
Toggle Footer