Wednesday, April 12, 2017

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பிரத்தியேக செயலாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமாகிய வேழன் என்கிற அருணாச்சலம் வேழமாலிகிதன் என்பவர் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரினார் என்கிற குற்றச்சாட்டு கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில், தன்னிடமோ, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடமோ பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, “வேழன் என்கிற அருணாச்சலம் வேழமாலிகிதன் என்னுடைய செயலாளர் அல்ல. கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர். பாலியல் இலஞ்சம் கோரியதாக வெளியான செய்தி தொடர்பில் உறுதிப்படுத்துவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. குறித்த ஆதாரம் தயாரிக்கப்பட்டும் இருக்கலாம். குறித்த பெண் பாதிக்கப்பட்டிருந்தால், என்னிடமோ அல்லது கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ முறையிட்டால் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். அவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது. அதுமட்டுமின்றி, சிறைச்சாலையிலுள்ள தனது கணவருக்காக கடிதம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டது. நாங்கள் இதுவரை யாருக்குமே கடிதம் கொடுத்ததில்லை.” என்றுள்ளார்.

சிறையிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் மனைவியிடம், கடிதமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் பெற்றுக் கொடுப்பதற்காக வேழன் என்கிற அருணாச்சலம் வேழமாலிகிதன் பாலியல் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படும், பேஸ்புக் உரையாடல் பதிவு கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. இது தொடர்பில், சம்பந்தப்பட்ட பெண் முறையிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் தெரிவித்திருந்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer