Monday, April 24, 2017

பிரிட்டன் மகாராணி எலிசபெத் II தனது 91 ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை விமரிசையாகக் கொண்டாடி உள்ளார். இதை முன்னிட்டு மத்திய இலண்டனில் பிரிட்டன் இராணுவத்தின் மரியாதை நிமித்தமான குண்டு வேட்புக்களைத் தீர்க்கும் சத்தத்தை மக்கள் அனைவரும் கேட்கக் கூடியதாக இருந்தது.

உலகின் மிக நீண்ட ஆயுள் கொண்ட அரச வம்சத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படும் எலிசபெத் II மகாராணி தனது அரச பணிகளில் இருந்து சற்று ஓய்வு பெறவுள்ளதுடன் இளம் தலைமுறையினர் அவற்றை முன்னின்று நடத்த வழியும் விடத் தயாராகி உள்ளார். இந்நிலையில் பிரிட்டன் மக்கள் அனைவரும் இன்று உற்சாகமாக எலிசபெத் மகாராணியாரின் பிறந்த தினத்தைக் கொண்டாடி வருவதுடன் அவருக்கு வாழ்த்துக்களும் வந்து குவிந்த வண்ணமுள்ளன. பிபிசி சேனல் இன்று அதிகாலை செய்தியிலேயே பிரிட்டன் தேசிய கீதத்தை ஒளிபரப்பி மகாராணியாருக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பொறிஸ் ஜோஹ்ன்சன் டுவிட்டரில் முதலாவது நபராக வாழ்த்தைப் பதிவிட்டார்.

ஏப்பிரல் 21 ஆம் திகதி 1926 ஆம் ஆண்டு மத்திய இலண்டனில் பிறந்த எலிசபெத் மகாராணி தனது 25 ஆவது வயதில் 1952 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசியானார். தற்போது இவருக்குப் பின் பிரிட்டன் அரசராக முடிக்குரிய வரிசையில் இவரின் மூத்த மகனான இளவரசர் சார்லெஸ் உள்ளார். இருந்த போதும் ஏற்கனவே எலிசபெத்தின் பேரப் பிள்ளைகளான வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் அவரது கடமைகளில் சிலவற்றைத் தம்முடையதாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

வெகு காலமாக பிரிட்டனின் அரச வம்சத்தைக் கட்டிக் காத்து வந்த எலிசபெத் மகாராணியார் அவ்வப்போது சர்ச்சைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார். அண்மையில் ஜனவரியில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து அந்நாட்டு அரசு முடிவெடுத்த சமயங்களிலும் பிரதமர் தெரேசா மேய் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பிரிட்டனுக்கு வருமாறு அழைக்க முடிவெடுத்த போதும் எலிசபெத் மகாராணியார் மௌனம் காத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எலிசபெத் மகாராணியார் இன்னும் நீண்ட ஆயுளுடன் பதவியில் நீடிக்க வேண்டும் என விரும்பும் உள்ளங்களுடன் 4 தமிழ்மீடியா நிருபர்களும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer