Friday, April 28, 2017

வணிக ரீதியான பொழுதுபோக்குத் திரைப்படங்களை, தொடர்ந்து வெற்றிகரமாக எடுத்த ஒரு இயக்குனர் அந்த பாதுகாப்பான எல்லைக்குள்ளேயே இருந்து படம் எடுக்காமல், அந்த எல்லையை தன் அடுத்தடுத்த படங்களில் விரிவுபடுத்துவதும் அதன் மூலம் தன் தரத்தை மட்டுமல்லாமல் இந்திய  சினிமாத்துறையின் தரத்தையும் உயர்த்துவதும் பாராட்டப்பட வேண்டிய, கொண்டாடப்பட வேண்டிய விஷயம். எல்லையை விரிவுபடுத்துவது என்பது வெறும் காட்சிகளிலுள்ள பிரம்மாண்டமாய் மட்டுமல்லாமல் அதன் பின் உள்ள கதையையும்,  கதாப்பாத்திரங்களையும் முழுமையாக, உணர்வுப்பூர்வமாக அமைக்க வேண்டியதும் மிக முக்கியம். இதைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக வெற்றிகரமாக செய்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்த பிரம்மாண்டத்தையும், இத்தனை கலைஞர்களையும் கையாண்டு   இத்தனை மொழிகளுக்குமான ஒரு படமாக பாகுபலியை உருவாக்கியிருப்பது கண்டிப்பாக ஒரு சாதனையே.

பாகுபலியின் முதல் பாகத்தில், இரண்டாம் பாதியின் போர் காட்சிகள் நம்மை வியப்புறச்செய்தன. முடிவில், 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?', என்ற கேள்வியை நமக்குள் விட்டுச் சென்றது. அந்தக் கேள்விக்கான விடையாகவும் அதையும் தாண்டிய பல ரசிக்கத்தக்க விஷயங்களோடும் வந்திருக்கிறது இரண்டாம் பாகம். மகிழ்மதி பேரரசின்  மன்னராக பதவியேற்க இருக்கும்  அமரேந்திர பாகுபலியின் காதல், கட்டப்பாவுடனான உறவு, தேவசேனையின் அழகு, வீரம் என இரண்டாம் பாகத்தில் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் பல விஷயங்கள் இருக்கின்றன.  மகிழ்ச்சியான சம்பவங்கள் ஒரு புறம் நடக்க, மன்னராகும் வாய்ப்பை இழந்த பல்வாழ்த்தேவனும் அவரது தந்தையும் செய்யும் சூழ்ச்சிகளில் பாகுபலி   எப்படி சிக்கினார், அவரது மகன் 'ஷிவு என்ற மகேந்திர பாகுபலி', மகிழ்மதியை மீட்டாரா என்பதை பிரமாண்டமான, அழகிய காட்சிகளோடும், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் வழியே கூறியிருக்கிறது பாகுபலி.

பிரபாஸை இதற்கு முன் பெரிதும் அறியாத தமிழ் ரசிகர்களுக்கு அவர் பாகுபலியாக அறிமுகமாகினார், பாகுபலியாகவே மனதில் என்றும் நிற்பார். அந்த அளவுக்கு அவரது உழைப்பும் நடிப்பும் இருக்கிறது. முதல் பாதியில் நம்மை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கிய அனுஷ்காவின் 'தேவசேனா' கதாபாத்திரம் இந்த பாகத்தில் மிக சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அனுஷ்கா, அழகு, வீரம் இரண்டிலும் ஜொலிக்கிறார்.  ரம்யாகிருஷ்ணன் ராணி சிவகாமியாகவே தோற்றமளிக்கிறார். சத்யராஜ், நாசர், ராணா அனைவரும் முழுமையாக தங்களை அர்பணித்திருக்கின்றனர். போர், சகோதர யுத்தம், அதிகாரப்பசி  என ஆண்களை சார்ந்த கதையென்றாலும், அதில் பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம்,  கற்பனை கதையானாலும், முற்காலத்தில் பெண்கள் ஆற்றிய பங்குக்கு சான்றாக இருக்கிறது.

மரகதமணியின்  பின்னணி இசை மிக சிறப்பு, ஆனால் பாடல்கள் தெலுங்கு தேசத்தின் எல்லைக்குள்ளாகவே இருக்கின்றன. தொழில்நுட்பத்தின் உச்சமாக ஒளிர்கிறது படம்.  தந்தை அமரேந்திர பாகுபலி நம்  மனதில் முழுமையாக நிற்க, மகன் மகேந்திர பாகுபலி சம்மந்தப்பட்ட சண்டை, போர் காட்சிகள் ஒரு கற்பனை காவிய படத்தின் எல்லையையும் தாண்டி இருப்பது உறுத்தல். இரண்டாம் பாதியில், இறுதியை நெருங்க எடுக்கும் அந்த நீளமான காட்சிகள் சற்றே அயற்சி. சிறிய குறைகளைத் தாண்டி, பாகுபலி ஒரு காட்சி அனுபவம். இந்திய திரை உலகின் சாத்தியங்களை ஒரு படி உயர்த்தியிருக்கும் பெருமுயற்சி. ராஜமௌலிக்கு நல்ல ஓய்வு  தேவை, அடுத்த ஆச்சர்யத்தை நமக்குத் தர...

0 comments :

Post a Comment

 
Toggle Footer