Friday, March 31, 2017

அதிகாரம் படைத்த வலியவர்கள் தவறு செய்யும்பொழுது அவர்களுக்கெதிரான எளியவர்களின் சீற்றம் என்ற தன் களத்திற்கு திரும்பியுள்ளார் விஜய் மில்டன். மனிதமும் எளிமையுமே இவரது பலம் என 'கோலி சோடா'வைத் தொடர்ந்து 'கடுகு'ம் நிரூபித்துள்ளது. பிறருக்கு உதவும் பொழுது அவர்களுக்கே தெரியாமல் உதவுவது, பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் தயங்கி, யோசித்து, ஒழுங்குபடுத்திப்  பேசுவது, நண்பருடன் சேர்ந்து முகநூல் பயன்படுத்தும்பொழுது மகிழ்ச்சியும் தயக்கமுமாய் செய்வது என வாய்ப்புகளில்லாததால், காவல் ஆய்வாளருக்கு எடுபுடி வேலை செய்யும் நடுத்தர வயது புலிவேடக் கலைஞராய் இயக்குநர் ராஜகுமாரன். தன்  'புலி' ஜே.பாண்டி  கதாபாத்திரம் இவருக்குள் இருக்கிறான் என்று முடிவு செய்ததில் முதல் வெற்றி அடைந்துள்ளார் விஜய் மில்டன். வேறு எந்த சாயலுமில்லாமல் கதாபாத்திரமாய் மட்டுமே தெரிகிறார்.

நாம் அனைவருமே நல்லவரும் கெட்டவரும் கலந்த கலவையாகவே இருக்கிறோம். கெட்டவர்கள் என தனியாக பயங்கர தோற்றம் கொண்டு பெரும்பாலும் இருப்பதில்லை. பலருக்கு கெட்டவராய் தோன்றுபவர்கள் கூட அவரைச் சார்ந்த சிலருக்கு நல்லவராய் இருக்கிறார்கள். இப்படி ஊருக்கு நல்லது செய்பவராகவும், தனக்கென்று ஒரு சூழ்நிலை  வரும்பொழுது, அந்த நிலையிலிருந்து பிறழ்பவராகவும் பரத். 'காதல்', 'வெயில்', 'எம் மகன்' என இவர் ஏற்கனவே வெற்றிகளைப்  பார்த்திருந்தாலும், 'கடுகு' இவருக்கு மிக முக்கியமான படமே. தாய் தந்தை எரித்த சாம்பலை தன் கழுத்து சங்கிலியிலேயே வைத்திருக்கிறார், 'எங்க ஊர் பொண்ணுகளை மட்டும் கிண்டல் செய்யக் கூடாது' என சண்டை போடுகிறார், கொஞ்சம் போதை ஆன உடன் எதிர்க்க பலமில்லாத ராஜகுமாரனை அழைத்து அடித்துக் காட்டி தன் சீடர்களுக்கு குத்துச் சண்டை பயிற்சி அளிக்கிறார் ...இப்படி துவக்கத்தில் இருந்தே தீதும் நன்றும் கலந்த கதாப்பாத்திரமாக நுட்பமாக வடிவமைத்துள்ளார் இயக்குனர் விஜய் மில்டன். அதில் பரத் மிகப் பொருத்தமாய் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள், வில்லன்கள் என தனித்தனியே இருப்பது சற்று மாறி ஏற்கும் கதாபாத்திரங்கள் முன்னிலை பெற்று வருவது மகிழ்ச்சி. 'குற்றம் கடிதலைத்' தொடர்ந்து இந்தப் படத்திலும் நல்ல கதாபாத்திரம் ராதிகா பிரசித்தாவிற்கு. அழகு என்பது திறமையில் தான் என்று நிரூபித்திருக்கிறார். பரத் சீனி ஏற்கனவே அறிமுகம் ஆனவரைப் போன்ற உணர்வளிக்கிறார். ஏ.வெங்கடேஷ் , பரத்தை சாப்பிட அழைத்துக் கொண்டே இருக்கும் பாட்டி, ஏட்டாக நடித்திருப்பவர் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பாடகராக நாம் அறிந்துள்ள அஜீஸின் இசையில் 'நிலவெது கரையெது' பாடல் மதன் கார்க்கியின் வரிகளில் மனதை கணக்க வைக்கிறது. கதை நடக்கும் கடலோர சிறுநகரமான தரங்கம்பாடி அழகாகவும் கதையின் வெம்மைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. ஒளிப்பதிவாளராக விஜய் மில்டன் அதிகமாய் மிளிர்கிறார். இடைவேளைக் காட்சியிலும், ஊரைக் காட்டியிருக்கும் ஏரியல் காட்சிகளும் கவனித்து  ரசிக்க வைக்கின்றன. 'ஒரு கலை அழியும்போதே கலைஞனும் செத்துரனும்', 'இதுவும் தப்பில்லைனா உங்களுக்கு எது தாண்டா தப்பு?' இப்படி பல அழுத்தமான வசனங்கள். ராஜகுமாரன் பேசுவது போலவே கதையும் மெல்லத் தயங்கித் தயங்கி இடைவேளைக்கு கொஞ்சம் முன்னர் தான் தொடங்குகிறது. ஆனாலும் தொடங்கிய பின் அழுத்தமாக செல்கிறது. இது போன்ற படங்கள் இறுதியில் எதிர்மறையாக, கண்ணீர் சிந்த வைத்துதான்  முடியும் என்றில்லாமல் நேர்மறையாக முடித்தது ஆறுதல். பெண் குழந்தைகள் மீதான சமூகத்தின் அணுகுமுறை, அது தவறாகும் பொழுது அவர்கள் அடையும் வேதனை, கண் முன் நடக்கும் தவறை தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு என நல்ல விஷயங்களின் தொகுப்பு இந்த கடுகு.

0 comments :

Post a Comment

 
Toggle Footer