Tuesday, March 28, 2017

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தமக்கு எவ்வித தொடர்புகளும் கிடையாது. எனினும், தமிழக அரசியல்வாதிகள் இது குறித்து வதந்திகளை பரப்புவதாக லைக்கா நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை மூலமாக வவுனியாவில் ஈழத் தமிழருக்கு 150 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையில், குறித்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தமிழக அரசியல் தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக ரஜினிகாந்த் தனது இலங்கை விஜயத்தை இரத்து செய்வதாக தெரிவித்து நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள லைக்கா நிறுவனம், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் தமக்கும் தொடர்பு கிடையாது.

இது ஒரு வதந்தியான செய்தியாகும், இத்தகைய பொய்களை தொழில் போட்டியாளர்கள் பரப்பி வருகின்றனர். அத்துடன், தமிழக அரசியல்வாதிகளும் வதந்திகளை பரப்புவதாக சந்தேகம் உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்களது திட்டத்தில் எந்த ஒரு அரசியல் நோக்கமும் கிடையாது. போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுகிறோம்.

ரஜினியின் வருகையின் போது மேலும் பல திட்டங்களை அறிவிக்க இருந்தோம். எதிர்வரும் 10ஆம் திகதி திட்டமிட்டபடி வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer