Wednesday, March 29, 2017

சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையொன்றை இலங்கையில் உருவாக்குவது சர்வதேசத்தின் ஒரே நோக்கமல்ல. மாறாக, நீதியான நம்பகத்தன்மையுள்ள நீதி விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்குவதே சர்வதேசத்தின் நோக்கமாகும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு 47 உறுப்பு நாடுகளும் ஏக மனதாக ஆதரவு வழங்கியமை சர்வதேச ரீதியில் நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும். மேலைத்தேய நாடுகள் மாத்திரமன்றி சகல நாடுகளும் இலங்கையுடன் நட்புடன் செயற்படுவதுடன், உலகில் எந்தவொரு எதிரி நாடும் இலங்கைக்கு இல்லை.

சர்வதேச நீதிபதிகளை கொண்ட பொறிமுறையொன்றை உருவாக்குவது என்பது எம்முடையதோ அல்லது சர்வதேசத்தினதோ ஒரே குறிக்கோள் அல்ல. நீதியான, நம்பகமான நீதி விசாரணைப் பொறிமுறையொன்றை உறுதிப்படுத்துவதே நோக்கமாகும். சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பொறிமுறையொன்று உருவாக்கப்படும். குறிப்பாக பாதிக்கப்பட்ட எமது நாட்டு சகேதார இனத்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

கலப்பு நீதிமன்றம் என்ற விடயத்தில் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஷவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுமே காரணமாகினர்.

2014ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 12 நாடுகள் மாத்திரமே ஆதரவளித்திருந்தன. எனினும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் அங்கம் வகிக்கும் ஐந்து நிரந்தர நாடுகள் உள்ளடங்கலாக 47 உறுப்பு நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று இலங்கைக்கு சார்பான பிரேரணை இம்முறை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேலும் இரண்டு வருடங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படும். அதன் பின்னர் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து சகல தரப்பினருடனும் கலந்துரையாடி செயற்பாட்டுக்கான திட்டம் தயாரிக்கப்படும். சர்வதேச விசாரணை வேண்டுமென வடக்கில் வலியுறுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் அடிப்படைவாதிகள். பெரும்பாலான தமிழர்கள் அரசாங்கத்தின் செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டுள்ளனர். எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அரசு முன்னெடுக்கும் நம்பகமான விசாரணைப் பொறிமுறையில் உள்வாங்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும், இறுதியில் அவைபற்றிய தீர்மானங்களை எடுப்பது அரசாங்கமே. நாட்டின் இறைமைக்குள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயங்களுக்கு அமைய தீர்மானம் எடுக்கும் அதேநேரம், சகல தரப்பினரின் கரிசனையும் இவ்விடயத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.

கடந்த அரசாங்கத்தின் ஏகாதிபத்திய, மோசடி ஆட்சி காரணமாக சர்வதேசத்துக்கு மாத்திரமன்றி, உள்நாட்டு மக்களுக்கும் நீதித்துறையின் சுயாதீனத் தன்மை தொடர்பில் நம்பிக்கை இருக்கவில்லை. இதனாலேயே சர்வதேச நீதிபதிகள் மற்றும் கலப்பு நீதிமன்றம் என்ற விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியது.

எனினும், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நீதியின் சுயாதிபத்தியத்தை உறுதிப்படுத்த புதிய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டது. இதனால் மேற்குலக நாடுகள் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என சகல திசைகளிலும் உள்ள நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன.

உலகத்தில் மிகவும் ஒழுக்கமான கட்டமைப்பைக் கொண்ட பாதுகாப்புப் படை இலங்கையில் உள்ளது. இராணுவத்தில் உள்ள சலகரும் யுத்தக்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்ட இயலாது. ஒரு சிலர் தவறிழைத்திருந்தால் அவர்களை அடையாளம் கண்டு தண்டனை வழங்க வேண்டும். முதலில் அவர்கள் இழைத்தது யுத்தக் குற்றமா இல்லையா என்பது கூட விசாரணைகளின் மூலமே உறுதிசெய்யப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer