Friday, March 24, 2017

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், 150 வீடுகளை கையளிப்பதற்காக மாத்திரம் நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் வருவது அவ்வளவு அவசியமானதா என்று ஈபிஆர்எல்எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு போராட்டங்கள் தொடர்கின்றன. நில மீட்புப் போராட்டங்களும் தொடர்கின்றன. இந்தப் போராட்டங்கள் மாதக்கணக்காகக் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், சில வீடுகளை மாத்திரம் கையளிப்பதற்கு ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் வர வேண்டுமா? என்கிற கேள்வி எழுகின்றது.

இந்தியத் தேசிய அரசியலில் ரஜினிகாந்த் முக்கியமான நபர். அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியோடு நெருக்கம் உண்டு. அவ்வாறான நிலையில், அவர், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்க முடியும். அதனை அவர் செய்வாராக இருந்தால் அது, பிரயோசனமாக இருக்கும்.

மாறாக, லைகா நிறுவனம் கட்டியுள்ள வீடுகளைக் கையளிப்பதற்காக வருவது அவ்வளவு முக்கியமான ஒன்றல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்ததன் பின்னர், அவர் வருகை தருவாரேயானால், அவரை வரவேற்பதில் பிரச்சினையில்லை. ஆனாலும். அவருக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer