Monday, March 27, 2017

“ஆர்ப்பாட்டம் என்றே எமக்குத் தெரியாது. வீடு வழங்கும் கூட்டம் என்று பொய் கூறி இங்கு வந்து இறக்கி விட்டுள்ளனர்” என்று யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோரைக் கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “ஈழத்து கலைஞர்கள், வடக்கு மாகாணம்” எனும் பெயரில், இந்தப் ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு நேற்று முதல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வவுனியா மற்றும் யாழின் பல பாகங்களில் இருந்தும் 10 மேற்பட்ட பஸ்கள் மற்றும் சிறிய ரக வாகனங்களில் ஏற்றி வரப்பட்டனர். நல்லூர் ஆலய முன்றலில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில், நல்லூர் பின் வீதியில் இறக்கி விடப்பட்ட அவர்கள், பேரணியாக நல்லூர் ஆலய முன்றலுக்கு, ஏற்பட்டாளர்களால் அழைத்து செல்லப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வைக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆர்ப்பாட்டம் குறித்து கேட்ட போது, “நாங்கள் யாழ்ப்பாணம் வேலணை பகுதியை சேர்ந்தவர்கள். யாழ்ப்பணத்தில் கூட்டம் என பஸ்ஸில் ஏற்றி வந்தார்கள். காலை 10 மணியளவில் எங்களை ஏற்றினார்கள். மதிய சாப்பாடு மட்டும் தந்ததுடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்கள்” என்றார்.

இளைஞர் ஒருவரிடம் கேட்ட போது, “நாங்கள் வவுனியாவில் வசிக்கிறோம். எங்களுக்கு சின்னஅடம்பனில், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தால் கட்டி கொடுக்கப்படும் வீட்டுத் திட்டத்தில் வீடு கிடைக்க உள்ளது. வீடு கையளிப்பதற்கு ரஜனி வருவதாக இருந்தது. பின்னர் அவர் வர மாட்டார் என கூறிவிட்டார். அதான் அந்த நிகழ்வுக்கு ரஜனி வர வேண்டும் என கோரி போராட்டம் நடத்த வந்துள்ளோம்” என்றார்.

இது தொடர்பில் பெண்ணொருவரிடம் கேட்ட போது, “நாங்கள் யாழ்ப்பாணம் அராலி பகுதியை சேர்ந்தவர்கள். காலையில் எங்கள் ஊரில் வந்து, வீட்டுத் திட்டங்கள் கிடைக்காதவர்கள், வீடு தேவையானவர்களுக்கு யாரோ வீடு கட்டி தர போறதாக கதைத்தார்கள். பின்னர், மதிய நேரத்தில் அங்க வந்து, வீடு கையளிப்பது தொடர்பான கூட்டம் எனக்கூறி அழைத்து வந்து இங்கே இறக்கி விட்டார்கள். இங்கு வந்த பிறகு தான் தெரியும், இது ரஜனி யாழ்ப்பாணம் வர வேண்டும் என கோரும் போராட்டம் என்று” என்றார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer