Sunday, February 19, 2017

வெள்ளிக்கிழமை  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சேவான் நகரிலுள்ள கலந்தர் என்ற சூஃபி வழிபாட்டுத் தலத்தில் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் நடத்திய குண்டுத் தாக்குதலில் 88 பக்தர்கள் பலியானதுடன் 100 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். இதை அடுத்து நாடளாவிய ரீதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை நடத்திய திடீர் பதில் தாக்குதலில் 100 போராளிகள் வரை கொல்லப் பட்டுள்ளதாக சனிக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாகிஸ்தான் அதிகாரிகள் ஆப்கானிஸ்தானுடனான முக்கிய 2 ஆவது எல்லைக் கடவையை மூடியிருப்பதாகவும் இது நிலத்தால் மட்டுமே சூழப்பட்ட அண்டை நாடான ஆப்கானுடனான வர்த்தக உறவை நேரடியாகப் பாதிப்பதால் இரு நாட்டு உறவுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆப்கானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்காக பாகிஸ்தான் எல்லையை மூடியிருப்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. வெள்ளிக்கிழமை கலந்தர் சூஃபி தலம் மீது மேற்கொள்ளப் பட்ட தாக்குதலுக்கு ISIS போராளிகள் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆப்கானில் பதுங்கியுள்ள சுமார் 76 தீவிரவாதிகளை உடனே ஒப்படைக்கும் படி ஆப்கானுக்கு பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை பாகிஸ்தானில் பணியாற்றிய அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏ இன் அதிகாரியான கெவின் ஹல்பெர்ட் என்பவர் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று சைபர் பிரீப் என்ற உளவுத்துறைக்கான இணையத் தளத்தில் தெரிவித்துள்ளார். இவர் தெரிவித்துள்ள தகவலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதாவது 18 கோடி 20 இலட்சம் மக்கள் எண்ணிக்கையுடன் உலகின் 6 ஆவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடான பாகிஸ்தான் பொருளாதாரச் சரிவு, பரவலான தீவிரவாதம், அதிகரித்து வரும் அணுவாயுதம் போன்ற காரணங்களால் சர்வதேசம் கவலைப் படும் நாடாகவுள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியமான IMF போன்றவை பல கோடி டாலர் நிதியுதவி செய்துள்ள போதும் பாகிஸ்தான் சரியான திசையில் இதுவரை பயணிக்கவில்லை என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer