Thursday, February 23, 2017

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான கிரிஜஸ்ரீ-க்கு உலகம் முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள். கலகல சிரிப்பு, கொஞ்சல் பேச்சு என நேயர்களைக் கட்டிப்போட்ட இவர் இப்போது அரசியல், சமூகம் என எல்லா ஏரியாக்களிலும் ரவுண்டு கட்டி அடிக்கிறார். தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தொடர்ச்சியாக லைவ் வீடியோக்கள் வெளியிட்டபடி பிஸியாக இருந்தவரிடம் ஒரு பேட்டி...

கிரிஜஸ்ரீயைப் பற்றி எங்களுக்குத் தெரியாதவை..?

’’சொந்த ஊர் இதே சென்னைதான். வீட்டில் இப்போ அம்மாவும் நானும் இருக்கோம். +2 பாதியில் படிப்பை விட்டுட்டு டி.வி யில் நிகழ்ச்சித் தொகுப்பாளரா அறிமுகமானேன். அதுக்கு அப்புறம் ஓபன் யுனிவர்சிட்டியில் பி.பி.ஏ படிச்சு முடிச்சேன். டி.வி நிகழ்ச்சி நடத்தினதுதான் எல்லோருக்கும் தெரியுமே...  இப்போவும் அடுத்த நல்ல சான்ஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்.’’

புத்தக வெளியீட்டு விழாக்களில் எல்லாம் கலந்துக்கிறீங்க... இலக்கிய ஆர்வம் உண்டா..?

’’அதிகமா புத்தகம் படிக்கிற புத்தகப் புழுவெல்லாம் இல்லைங்க. புத்தகங்களைப் பற்றிப் பிறர் பேசுறைதக் கேட்கிற ஆர்வத்தினால்தான் கலந்துக்குவேன். நான் எப்போவுமே படிக்கிறதை விட புத்தகங்களை மற்றவர்கள் வாசிக்கிறதைக் கேட்கிறதைத்தான் விரும்புவேன். இப்போ, யூடியூப் மற்றும் சில ஆப்ஸ்களில் கேட்குற மாதிரி இ-புத்தகங்கள் கிடைக்கின்றன. சும்மா இருக்கிற நேரங்கள்ல அதையெல்லாம் கேட்பேன். இந்தளவுதான் என்னோட வாசிப்பு ஆர்வம்.’’

சாதி, மத பிரிவினை அதை ஒழிப்பது சம்பந்தமாக பேசியிருக்கீங்க? என்ன பண்ணலாம்னு ஐடியா?

’’சாதி என்கிற அடிப்படைப் பிரிவே இருக்கக் கூடாது. சாதிய அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கிறதுதான் மிகப்பெரிய மூடநம்பிக்கை. தாழ்த்தப்பட்டோர், உயர்ந்தோர்ங்கிற எந்தப் பாகுபாடும் மக்களிடையே இருக்கக் கூடாது. பொருளாதார அடிப்படையில்தான் சலுகைகள் வழங்கப் படணும். பொருளாதார அளவில் நலிவடைந்தோருக்கு ஆதரவு கொடுக்கப் படணும். ஆனால், இன்னும் நாம சாதியை தூக்கி வெச்சுக்கிட்டு இருக்கோம். அதுதான் மக்களின் அறியாமை. அதை ஒழிக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை.’’

சமூக வலைதளங்களின் மூலம் நல்லது நடந்திடும்னு நினைக்கிறீங்களா?

’’மக்கள்கிட்டே இருக்குற அறியாமைகளைக் களையணும். சமூக வலைதளங்களில் இயங்கிற பலரும் கூட இன்னும் சாதி, மத உணர்வுகளைத் தீவிரமா கொண்டவங்க இருக்காங்க. அவர்களுக்குப் புரியவைக்க, இந்த மாதிரியெல்லாம் நாட்டில் நடக்குது... மக்கள் சிந்திக்கணும்ங்கிறதை வலியுறுத்துறதுக்காக 'கேள்விகள் பல... பதில்கள்..?' அப்படின்னு ஒரு ஈவென்ட்டை ஆரம்பிச்சு நான் அதில் பேசி வீடியோவாக அப்பப்போ வெளியிடுவேன். அதுக்கு நிறைய பேர் பாராட்டுகளும் கிடைச்சது.’’

ஏன் இப்போ டி.வி நிகழ்ச்சிகள் தொகுப்பாளரா பண்றதில்லை..?

’’முதலில் சத்யம் டி.வி யில் 'பள்ளிக்கூடம்' ங்கிற நிகழ்ச்சி பண்ணேன். அதில் சின்ன வயதிலேயே சாதித்தவர்களை அடையாளம் காட்டுனோம். அப்புறம் ஜெயா டி.வி.யில் 'தாய்மண்ணின் சாமிகள்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். தூர்தர்ஷன்ல பழைய பாடல்களைத் தொகுத்து வழங்குற நிகழ்ச்சிக்கு காம்பயர் பண்ணினேன். ஒவ்வொண்ணும் வித்தியாசமான ஜானர்தான். என்னை எந்தக் குறுகிய வட்டத்துக்குள்ளேயும் நிற்கவிடாம வேறு வேறு வேலைகள் பார்த்தேன். அதுக்குப் பிறகு, ஐ.டி.வி.யில் செக்ஸ் கல்வியை வழங்கும் நிகழ்ச்சி சில எபிஸோடுகள் பண்ணின அப்புறம் கேப்டன் டி.வி. சமையல் மந்திரம் வாய்ப்பு கிடைச்சுது. அதிலிருந்து விலகி வேந்தர் டி.வி.யிலும் நிகழ்ச்சி நடத்தினேன். அதை எனக்குப் பிடிச்சுதான் செஞ்சேன். ஆனால், அதுவே எனக்கு அடையாளமாக மாறிப்போறதை நான் விரும்பலை. அதனால் இப்போ கொஞ்சம் பிரேக் விட்டாச்சு. அந்த கேப்'லதான் இந்த ஃபேஸ்புக் புரட்சி.’’

நீங்க அப்லோட் பண்ற வீடியோக்களினால் மிரட்டல் எதுவும்?

’’ஜெயலலிதா விவகாரத்தில் ஒரு வீடியோ போட்டிருந்தேன். அதில் நான் சசிகலாவுக்கு ஆதரவா இருக்கிறதா நினைச்சு என்னைச் சிலர் மிரட்டுனாங்க. வீடியோவை நீக்கச் சொல்லி இன்பாக்ஸில் நிறைய மெசேஜ்கள் வந்துச்சு. ஆனாலும், நான் என்னோட முடிவுகளில் உறுதியா இருந்ததால் மிரட்டல்களைக் கண்டுக்காமல் அப்படியே விட்டுட்டேன். ஆனா, இப்போ பாருங்க... சசிகலா அ.தி.மு.க வின் பொதுச்செயலாளர் ஆனதை வேடிக்கைதான் பார்க்கிறாங்க. இப்போவும் நான் அதே முடிவில்தான் இருக்கேன். யாருக்கும் நாம் பயப்பட தேவையில்லை.’’

பாலியல் தொடர்பான நிகழ்ச்சிகள் பண்றதால ஏதாவது சங்கடத்தை உணர்ந்திருக்கீங்களா..?

’’முதலில் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நடத்தத் தயக்கம் இருந்தாலும், என்கிட்ட அம்மா சொன்ன விஷயம் 'குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த நிகழ்ச்சி பயன்படுது. முழு மனசோட இதை நடத்து'ங்கிறதுதான். செக்ஸ் பற்றிய சந்தேகங்களுக்காக பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், பலவற்றில் டாக்டர் கிட்டே சந்தேகங்களைக் கேளுங்கனு சாதாரணமா சொல்லிடுவாங்க. அப்படி இல்லாமல் நேயர்களை ஈர்க்கிறதுக்காக அப்பப்போ டபுள் மீனிங்லே எல்லாம் பேசவேண்டியிருக்கும். பேசிட்டு இருக்கும்போதே ஹெட்ஃபோனில் இதையெல்லாம் பேசச்சொல்லி ஆர்டர் வரும். அது அந்த நிகழ்ச்சிக்குத் தேவையா இருக்கு. செக்ஸ் பத்திப் பேசுறது தப்பா என்ன? அதைப் பற்றிய விழிப்புஉணர்வு கொடுக்கிற நிகழ்ச்சியாகத்தான் நான் இவைகளைப் பார்க்கிறேன். அதனால் எந்த சங்கடங்களையும் உணர்ந்ததில்லை. அதே நேரத்தில், இந்த நிகழ்ச்சிக்கு மட்டும்தான் நான் சரியா வருவேன்னு நினைச்சிடக் கூடாதுல்ல...’’

சிறுமிகள் மீதான வன்முறை...

(கேள்வியை முடிப்பதற்குள்...) ’’ரொம்பக் கேவலமான விஷயம் இது. அதுவும் இதே குற்றங்கள் அடுத்தடுத்து நடக்கும்போது நம்ம சமூகம் மேலேயே ஒரு வெறுப்பு உருவாகுது. இந்த குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படணும். இது மட்டுமே இந்த வன்முறைகளுக்குத் தீர்வாகாது. எங்க வீட்டைச் சுத்தியே மூணு ஸ்கூல் இருக்கு. அங்கே படிக்கிற சின்னக் குழந்தைகளைக் கேட்டால், அவங்களுக்கு எல்லாம் 'குட் டச்' 'பேட் டச்' பற்றி எதுவும் தெரியலை. பொதுவாக, வீடுகளில் இருக்கிற அப்பா, அம்மா இவற்றையெல்லாம் கட்டாயம் குழந்தைகளுக்குச் சொல்லித் தரணும். அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் மூணு வயசுலேர்ந்து ஆறு வயசு வரை இருக்கிற குழந்தைகளுக்கு அவையெல்லாம் புரியாது. அது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்னு அவங்களுக்குத் தெரியாது. குழந்தைகளோடு நல்லாப் பழகுறவங்களே கொடுமைகளை நடத்துனா என்ன செய்யுறது..?’’

தற்போதைய அரசியல் சூழல் குறித்து உங்களோட கருத்து..?

’’இப்போ தமிழ்நாட்டில் நடக்கிற எல்லாமே மக்களின் மனநிலைக்கு எதிரானதுதான். மக்களுக்குச் சேவை செய்யுறதுக்காக எம்.எல்.ஏ க்களைத் தேர்ந்தெடுத்தா அவங்க கூவத்தூருக்குப் போய் ஒரு வாரம் ஜாலியா கேம்ப் நடத்துறாங்க. அவங்களுக்குள்ளேயே பேசி முடிச்சு, ஒருத்தரை சி.எம்.மா தேர்ந்தெடுக்குறாங்க. இப்போ நிர்வாகத்தில் இருக்கிற யாருமே மக்கள் நலனுக்காகச் செயல்படலை. அப்படிப்பட்ட ஆட்சியே நமக்கு வேண்டாம். கலைச்சிட்டு மறுபடியும் தேர்தல் நடத்தணும். மக்கள் எப்போவும் போல அ.தி.மு.க இல்லைன்னா தி.மு.க ன்னு ஓட்டுப் போடுறதை விட்டுட்டு நமக்கு யார் நல்லது செய்வாங்கங்கிறதை யோசிச்சு நம்மளோட பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கணும். சமூகத்தின் மீது உண்மையிலேயே அக்கரை இருக்கிற இளைஞர்கள் அரசியலுக்கு வரணும். அவ்வளவுதான்.’’

அரசியலுக்கு வரப் போறீங்களா..?

(சிரித்தவாறே..) ’’நீங்களும் கேட்டாச்சா? அரசாங்கத்தை எதிர்த்துக் கொஞ்சம் பேசினாலே அரசியலுக்கு வரப்போறேன்னு கிளப்பி விடுறாங்க. தனிநபரா என்னோட பொறுப்பை உணர்ந்து நான் செயல்படுறேன். மக்களில் எல்லோரும் அப்படி நினைச்சாலே நமக்காக ஒரு கட்சி போராடத் தேவையிருக்காது. ஒரு அமைப்பை உருவாக்குற ஐடியா இல்லை. ஆனால், நம்ம மக்களுக்காகக எப்போவும் நான் குரல் கொடுப்பேன்.’’

சினிமாவில் நடிக்கிற ஆசை இருக்கா..?

’’சினிமாவில் நடிக்க சான்ஸ் வருது. இப்போதைக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லாம இருக்கேன். எதிலேயும் மொத்தமா கமிட் ஆகிக்க விரும்பலைங்கிறதுதான் அதுக்குக்  காரணம்.’’

நேயர்கள் உங்களை நேரில் பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

’’நிறைய பேர் வெளியில் என்னைப் பார்த்தாலும் வந்து பேசுறதில்லை. அதுக்குக் காரணம், என்கிட்டே வந்து பேசுறவங்க என்னோட நிகழ்ச்சியைப் பார்க்கிறதை மத்தவங்க தப்பா நினைச்சிடுவாங்களோங்கிற பயம்தான். அதனாலேயே என்னைப் பார்த்தாலும் யாரும் வந்து பேசுறதில்லை.’’

0 comments :

Post a Comment

 
Toggle Footer