Friday, February 24, 2017

தமிழகத்தில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும், தேர்தலுக்கு தேதிமுக தயாராகவே இருப்பதாகவும் தேமுதிக கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் தேமுதிக கட்சி தலைவர்களில் ஓருவரான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழக அரசியலில் கடந்த 6 மாதமாக பரபரப்பு அரசியல் நடைபெற்று வருவதாகவும் இதனால்  மக்களுக்கு பலன்  எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலையான முதல்வர், நிலையான கவர்னர் இல்லை எனவும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் இல்லை எனவும் தெரிவித்த அவர்,  30 வருடத்திற்கு பின்னர் அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஈசா யோகா மையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும், அவ்வளவு பெரிய சிலையை கட்ட துவங்கும் போது எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் பிரதமர்  வரும் போது எதிர்ப்பு தெரிவிப்பது சரியானது அல்ல என்பது தன்னுடைய கருத்து எனவும், ஈசா மையம் சார்பில் நடைபெறும் விழாவில் தான் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள்  தமிழகத்திற்கு  தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்த அவர் . நடைபெறும் ஆட்சியை கவிழ்க்க தினம் தினம் நாடகம் நடந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது நடைபெறும் நிகழ்வுகள் மூலம் நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் உணர கூடிய தருணம்  ஏற்பட்டு இருப்பதாகவும் பிரேமலதா தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை மக்கள் கருத்தை கேட்டுத்தான் அமலாக்கம் செய்யப்போவதாக மத்திய அரசு தெரிவிததுள்ளதாகவும்  ,மத்திய அரசின் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்காக வாய்ப்புகள் அதிகம் என்பதால் தேமுதிக தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer