Saturday, February 18, 2017

கூவத்தூரில் நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிரித்துக்கொண்டே சென்ற சசிகலாவின் அணியினரில் பலர் வெளியே வரும் போது கடுப்பாகி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. சசிகலா அணியிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் சமாதியில் தனிமனிதனாக போராட்டத்தை தொடங்கிய பன்னீர்செல்வத்துக்கு  இதுவரை 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராக பதவி ஏற்றார். அப்போது 15 நாட்களில் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். அதன்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டசபை கூடியது. அதற்கு முன்பு கூவத்தூருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அப்போது அங்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

ரிசார்ட்டுக்குள் செல்லும் போது எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிரித்த முகத்துடன் சென்றனர். பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த போது அவர்களின் முகத்தில் சிரிப்பு இல்லை என்றார் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்.
 மேலும் இதுகுறித்து அவர், கூறுகையில், "ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. உள்ளே செல்லும் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிரித்த முகத்துடன் சென்றார். ஆனால் வெளியே வரும் போது அவருடன் வெளியே வந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் சிரிப்பு இல்லை. கூட்டத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்பது தொடர்பாக பாடத்தை எடுத்த கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் சில கேள்விகளை முன்வைத்துள்ளதாகவும், அப்போது எடப்பாடி பழனிசாமிக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடே எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களை எல்லாம் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சமரசப்படுத்தினர்"என்றனர்.

 இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில் சசிகலா அணியில் இருந்து இன்னொரு எம்.எல்.ஏ. விக்கெட் விழுந்தது. கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்குமார், ரிசார்ட்டிலிருந்து வெளியேறினார். என்னுடைய வாக்கு யாருக்கும் இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார். அருண்குமாரின் மனநிலையில் இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் அங்கு இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

 எடப்பாடி பழனிசாமி, மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே முதல்வராக தொடர முடியும். இதனால் சட்டசபையில் பரபரப்புடன் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும், டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தி.மு.க., காங்கிரஸ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் தனபால், சபையிலிருந்து வெளியேறினார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம் ரணகளமானது. போர்களமாகவே சட்டசபை மாறியதால் அவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர் தனபால்.

ஒத்திவைக்கப்பட்ட சபை, தற்போது மீண்டும் கூடி இருக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer