Monday, February 27, 2017

“புரட்சித் தளபதியாம்.. புரட்சித் தளபதி..” நறநறவென்று பல்லைக் கடித்தார் விருதுநகரைச் சேர்ந்த ஒரு கதர்ச்சட்டைக்காரர். ‘ஏன் இந்தக் கோபம்?’ என்று கேட்டதற்கு,  “வரலாறு முக்கியம்..” என்றார் சீரியஸாக. அவர் கூறிய வரலாற்றுத் தகவல்கள் இதோ –ஆறு லட்சம் பேரைக் கொன்ற அமெரிக்க புரட்சித் தளபதி!

ஐக்கிய அமெரிக்க நாடு 1776-இல் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது. தனது அரசியலமைப்பில்   ‘அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தாலும், ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அந்நாட்டில் அடிமைகளாகவே இருந்தனர். புதிய அமெரிக்கக் குடியரசு அவர்களைக் குடிமக்களாகக் கருதவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் அடிமை முறையைக் காப்பாற்றப் போராடினார் தளபதி ராபர்ட் ஈ. லீ. அது என்ன உள்நாட்டுப் போர்? ஆபிரகாம் லிங்கனைத் தங்கள் அதிபராக ஏற்றுக்கொள்ள மறுத்த தென் மாநிலங்கள், அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாக அறிவித்தன. ‘கான்ஃபெடரசி’ (confederacy) என்ற பெயரில், அதாவது, கூட்டமைப்பு எனச் சொல்லிக்கொண்டு புதிய நாடு ஒன்றை உருவாக்கின. தனியாகப் பிரிந்து போவதற்கு கான்ஃபெடரசிக்கு உரிமை இல்லை என, வட மாநிலங்கள் கொதித்தன. இதனால், வட மாநிலங்களுக்கும், கான்ஃபெடரசி எனப்படும் தென் மாநிலங்களுக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில், இரு தரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ. லீ.

அவ்வளவு பெரிய ஆளா லீ? வர்ஜீனியா  மாநிலத்தில்  ராணுவப்  பாரம்பரியமிக்க  குடும்பத்தில் பிறந்தவர் லீ. பதினெட்டாவது வயதில் அமெரிக்காவின் புகழ்பெற்ற வெஸ்ட் பாயிண்ட் ராணுவக் கல்லூரியில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகளில் படிப்பை முடித்து அமெரிக்க ராணுவத்தில் பொறியியல் அதிகாரியாகச் சேர்ந்தார். அடுத்த நாற்பது ஆண்டுகளில்,  அமெரிக்கா ஈடுபட்ட பல்வேறு போர்களில் பங்கேற்றார். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார்.  1861-ல் உள்நாட்டுப் போர் மூண்டபோது,  ராணுவத்தில் கர்னல் பதவியில் இருந்தார் லீ.

லீயின் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்தால், இவரெல்லாம் வில்லனா என்று கேட்கத் தோன்றும். அவர், யாருக்காகப் போராடினார் என்பதைப் பார்த்தால், மானுட சமுதாயத்துக்கு அவரால் எவ்வளவு பெரிய தீங்கு நேர்ந்திருக்கும் என்பது விளக்கும். கான்ஃபெடரசி ஒரு தீய அரசுதான். அடிமை முறையைத் தக்க வைப்பதற்காக, உருவாக்கப்பட்ட தேசம் அது. தங்கள் நாட்டில் மட்டுமல்ல, அண்டை மாநிலங்களிலும், நாடுகளிலும் இந்த முறையைப் பரப்ப வேண்டும் என, முயன்ற நாடு அது. லீ மட்டும் இல்லையென்றால், ஒரே ஆண்டில் அழிக்கப்பட்டிருக்க வேண்டிய, இந்தக் கொடியவர்களின் கூடாரம், 4 ஆண்டுகள் பிழைத்து, உள் நாட்டுப் போரைத் தொடர்ந்து நடத்தியது. கிட்டத்தட்ட 6 லட்சம் உயிர்களைக் காவு வாங்கிய இந்தப் போர் 4 ஆண்டுகள் நீடித்ததற்கு லீதான் முக்கிய காரணம். இத்தனைக்கும் லீ-க்கு அடிமை முறை மீது எந்தப் பற்றும் கிடையாது. தனது மாநிலத்தின் மீது வைத்திருந்த விசுவாசத்தால், அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றத் துணிந்தார் லீ.

1865-இல் கான்ஃபெடரசி சரணடைந்தது. அடிமை முறையும் ஒழிக்கப்பட்டது. கான்ஃபெடரசிக்காகப் போராடியவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. லீ நாடிழந்தவர் ஆனார். 1870-இல் அவர் மரணமடைந்த போது, அவர் எந்த நாட்டின் குடிமகனும் இல்லை. ஆனாலும், அவர் இறந்து நூறாண்டுகள் கழித்து, அவரது வீரத்தைக் கவுரவிக்கும் பொருட்டு, அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை திருப்பி அளிக்கப்பட்டது. இன்றும் அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் லீயை புரட்சித் தளபதி என்றே அழைக்கின்றனர்.

இவர் இந்திய தேசத்தின் புரட்சித் தளபதி!

1879, டிசம்பர் 5-ஆம் தேதி உமேஷ் சந்திர முகர்ஜி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ஜதீந்திர நாத் முகர்ஜி. புரட்சித் தளபதி பாகாஜதீன் என்று அழைக்கப்பட்ட இவர்,  இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். வீரம் மிக்கவர்.

இவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அப்போது டார்ஜிலிங்கிற்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். முதியவர் ஒருவர் தாகத்தில் தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி,  தன்னிடமிருந்த பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தார். அப்போது, மற்றவர்களைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள் ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் நால்வர். அவர்களில் ஒருவர் மீது பாகாஜதீன் கொண்டு வந்த தண்ணீர் சிறிதளவில் சிந்திவிட்டது. உடனே, அந்த அதிகாரி ஜதீனை அடித்தார். அந்த அடியை வாங்கிக் கொண்டு, முதியவரிடம் சென்று தண்ணீரைக் கொடுத்துவிட்டு, அதிகாரி பக்கம் திரும்பினார். அடித்த அதிகாரியின் கையை முறுக்கினார். வலி தாங்காமல் கத்தினார் அதிகாரி. உடனே, அந்த அதிகாரிக்கு உதவ வந்தார்கள் மற்ற மூவரும். நால்வரையும் ஜதீன் அடி பின்னி எடுத்து விட்டார். இதனால், பிளாட்பாரத்தில் அவர்கள் சுருண்டு விழுந்தனர்.

இதன் காரணமாக தொடரப்பட்ட வழக்கில், ஆங்கிலேய நீதிபதி, ஒரே ஒரு இந்தியன் நான்கு ஆங்கிலேயரை அடக்கினார் என்று செய்தி வெளிவந்தால், மற்ற இந்தியர்களுக்கு தன்னம்பிக்கையும், துணிவும் உண்டாகும். ஆங்கிலேயருக்கோ, இந்தியர் மீது அச்சமும், தங்கள் மீது அவமானமும் ஏற்படும் என்பதை உணர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்தார்.

புளித்துப் போன புரட்சி!

சமீபத்தில், நடிகர் விஷாலின் பெயருக்குப் பின்னால் புரட்சித் தளபதி என்ற பட்டம் ஒட்டிக் கொண்டது.  “ரசிகர்கள் விரும்பித் தந்த பட்டம். அதனால், ஏற்றுக்கொண்டேன்.” என்று சொன்னார் விஷால். இப்போது,  ராசி காரணமாகவோ என்னவோ, அந்தப் பட்டத்தைப் போட்டுக் கொள்வதில்லை.

சரி, விஷயத்துக்கு வருவோம். விருதுநகர் கதர்ச்சட்டைப் பெரியவரின் கோபத்துக்குக் காரணம் என்னவென்று பார்ப்போம். தலைவர் பொறுப்பிலிருந்து வேலாயுதம் விலகிய நிலையில்,    விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளராக ஸ்ரீராஜா சொக்கர் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் ஸ்ரீராஜா சொக்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசரை ‘புரட்சித் தளபதி’ என்ற அடைமொழியோடு அதில் குறிப்பிட்டிருக்கிறார். நடிகர் விஷாலே வேண்டாம் என்று வெறுத்த பட்டத்தை எதற்காக திருநாவுக்கரசருக்கு கொடுக்க வேண்டும்? புரட்சித் தளபதி என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவரா திருநாவுக்கரசர்? அதிமுக பாணியில் எதற்காக காங்கிரஸ்காரர்கள் ‘புரட்சி’ செய்ய வேண்டும்? என்பதுதான் அந்தப் பெரியவரின் ஆதங்கம்.

எதற்கெடுத்தாலும், யாருக்கு வேண்டுமானாலும், புரட்சிப் பட்டம் கொடுத்துக் கொண்டே போனால், சகித்துக் கொண்டேயிருக்க முடியுமா?

0 comments :

Post a Comment

 
Toggle Footer