Saturday, February 18, 2017

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சிக்குள் ஏற்பட்ட உள்குழப்பங்களாலும், அதிகாரத்துக்கு வரவிரும்பும் கட்சிகள் மத்தியில் ஆளும்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து குழப்பத்தை உருவாக்கி மாநில ஆட்சியை கலைப்பது என்பது பலமுறை நடந்துள்ளது. அதில் தமிழ்நாடும் ஒன்று.

தமிழகத்தில் இதுவரை நான்கு முறை ஆட்சிகலைக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை திராவிட முன்னேற்ற கழக ஆட்சியும், இரண்டு முறை அதிமுக ஆட்சியும் கலைக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி கலையுமா ? பெரும்பான்மை பலம் பெரும்மா என்கிற மில்லியன் டாலர் கேள்வியை எழுப்பியுள்ளது.

நான்கு முறை தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும், ஒருமுறை மட்டும்மே சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலப்பரிச்சை நடைபெற்று வரலாற்றில் பதியும் அளவுக்கு வன்முறைகள் நடைபெற்றன. அதேபோன்ற சூழ்நிலை இன்று ஏற்பட்டுவிடும்மோ என்கிற அச்சம் ஒரு பக்கம் உள்ளது. இன்று அதற்கான விடை தெரிந்துவிடும்.

இன்று என்ன நடக்கும் என பார்க்கும் முன் கடந்த காலத்தில் 4 முறை கலைக்கப்பட்ட ஆட்சிகள் எதனால் கலைக்கப்பட்டது என பார்த்துவிடுவோம்.

1976 ஜனவரி 31

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்தது. முதல்வராக கலைஞர் மு.கருணாநிதி ஆட்சி பொறுப்பில் இருந்தார். திமுகவின் பொருளாளராக இருந்து பிரிந்து சென்று அதிமுக என்கிற தனிக்கட்சி தொடங்கியிருந்தார் எம்.ஜி.ராமச்சந்திரன். 1975 இந்தியாவில் நெருக்கடி நிலையை கொண்டு வந்துயிருந்தார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி. நெருக்கடி நிலையை புதியதாக கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் ஆதரித்தார். ஆட்சியில் இருந்த கலைஞர் எதிர்த்தார். ஆட்சி கலைக்கப்படும் என இந்திரா அரசு மிரட்டியது. ஆட்சி போனாலும் பரவாயில்லை, மிசாவுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என்றார். தேசிய தலைவராக பிற்காலத்தில் ஜொலித்த ஜார்ஜ்பெர்ணாண்டஸ் உட்பட பல தலைவர்கள் பாதுகாப்பாக தமிழகத்தில் இருந்தனர். நெருக்கடி நிலையை காரணம் காட்டி 1976 ஜனவரி 31ந்தேதி திமுக ஆட்சியை கலைத்தார் இந்திராகாந்தி. தமிழகம் முழுவதும் திமுகவினர் கைது செய்து சிறையில் அடைக்கப்;பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டனர். அதில் பல தலைவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள இந்திரா காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக இருந்த எம்.ஜி.ஆர்ருடன் கைகோர்த்துக்கொண்டனர். அடுத்து வந்த தேர்தலில் இந்திரா காங்கிரஸ் - அதிமுக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து நின்று அதிமுக முதல்முறையாக ஆட்சிக்கு வந்து எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார்.

1980 ஆம் ஆண்டு

1977ல் தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்திரா காங்கிரஸ் - எம்.ஜி.ஆர் கூட்டணி வெற்றி பெற்றுயிருந்தது. எம்.ஜி.ஆர், கட்சி தொடங்கியபோது, திமுக மீது முன்வைத்த பல குற்றச்சாட்டுக்களைவ வாபஸ் பெற்றார். மத்தியில் யார் ஆட்சியில் உள்ளார்களோ, அவர்களோடு இணைந்து செயல்படுவது எம்.ஜி.ஆர் கால ஆட்சியின் வழக்கம். ஆனால் நெருக்கடி நிலையால் இந்திராகாந்தி அம்மையார் பதவியை இழந்தார். 1980 ஆம் ஆண்டு நாடாளமன்ற பொதுத்தேர்தல், இந்திரா காங்கிரஸ் - அதிமுக கூட்டணி பெரும் தோல்வி. மத்தியில், ஜனதா கட்சி ஆட்சி பீடத்தில் இருந்தது. இந்திராகாந்தியோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பல மாநிலங்களில் ஆட்சியை கலைத்தது மொராஜி தேசாய் அரசு. அதில் தமிழகமும் ஒன்று. எம்.ஜி.ஆர் ஆட்சி மூன்றே ஆண்டுகளில் 1980ல் கலைக்கப்பட்டது. இதனால் இந்திராகாங்கிரஸ் கட்சியுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டு, மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சி ஆதரவாளராக தன்னை எம்.ஜி.ஆர் மாற்றிக்கொண்டு அனுதாபத்தை முன் வைத்து சட்டமன்ற, நாடாளமன்ற தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார்.

1988

1987 இறுதியில் உடல் நிலை சுகவீனம்முற்று முதலமைச்சராக இருந்த அஇஅதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர் இறந்தார். அடுத்து முதல்வர் பதவியில் யாரை அமர்வது என்கிற மோதல் அதிமுகவுக்குள் வந்தது. ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற சீனியர் தலைமையிலான டீம் ஜானகியை ஆதரித்து நின்றது. திருநாவுக்கரசர் ( இப்போது, காங்கிரஸ் தமிழக பிரிவு தலைவராக உள்ளாரே அவரே தான் ), கே.கே.எஸ்.ராமச்சந்திரன் ( இப்போது, விருதுநகர் திமுக மா.செவாக உள்ள முன்னால் அமைச்சர் ) சேலம் கண்ணன் போன்றவர்கள் ஒரு டீமாக இருந்து, அதிமுகவின் கொள்கைபரப்பு செயலாளராகவும், மாநிலங்களவை எம்.பியாகவும் இருந்த ஜெயலலிதாவை முன்னிறுத்தினர். ஏம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சராக 1988 ஜனவரி 7ந்தேதி முதலமைச்சராக அப்போதைய ஆளுநர் அலெக்ஸாண்டரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். இருந்தும் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஜானகியா ? ஜெவா ? என்கிற போட்டி ஏற்பட்டது. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன் ( இப்போது ஓ.பி.எஸ் அணியில் உள்ளாரே அவரே தான் ), ஜானகி அணிக்கு ஆதரவாக நின்றார். திமுக தலைவர் கலைஞரிடம், ஜானகி முதல்வராக தொடர நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டமன்றத்தில் ஆதரவாளிக்க வேண்டும் என ஆர்.எம்.வீரப்பன், நடிகர் சிவாஜிகணேசன் போன்றோர் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றார். பின்னர் யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்தார்.

சட்டமன்றத்தில் பலப்பரிச்சை நடைபெற்றது. ஜானகி அணியும் - ஜெ அணியும் கண்ணியமிக்க சட்டசபைக்குள் அடித்துக்கொண்டனர். வேட்டிகள் உருவப்பட்டன, சட்டைகள் கிழிப்பட்டன, மூக்குகள் உடைந்தன, காவல்துறை உள்ளே சென்று தடியடி நடத்தியது. இந்த அடிதடி மோதலுக்கிடையே, வானளாவிய அதிகாரம் எனக்குண்டு என அறிவித்த சபாநாயகர் பி.எச்.பாண்டியன், ஜானகி அணி பெரும்பான்மையை நிரூபித்தது என அறிவித்து அதிர்ச்சி தந்தார். சட்டமன்றம் கலவரக்காடானதால் சட்டசபையை 1988 ஜனவரி 30ந்தேதி ஆளுநர் கலைத்தார்.

1990

அதிமுகவின் ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டது. இரட்டை இலை முடக்கப்பட்டது. ஜானகி அணி புற சின்னத்திலும், ஜெ அணி சேவல் சின்னத்திலும் போட்டியிட்டது. நடிகர் சிவாஜி கணேசன், நடிகர் பாக்யராஜ் போன்றோர் புதியதாக கட்சியை தொடங்கினார்கள். தேர்தல் நடைபெற்றது. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜானகி அணிக்கு பெரும் தோல்வி. 2 இடங்களில் மட்டும்மே அது வெற்றி பெற்றுயிருந்தது. ஜானகி அணியை விட ஜெ அணிக்கு அதிக வெற்றி. 27 எம்.எல்.ஏக்களை பெற்றுயிருந்தார். இதனால் ஜானகி அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இரட்டை இலை ஜெ வசமானது.

அப்போது, ஈழத்தில் விடுதலை புலிகளுக்கும் - இலங்கை இராணுவத்துக்கும் இடையே போர் மூளாமல் தடுக்க என காரணம் கூறி இந்தியா பிரதமர் ராஜிவ்காந்தி, அமைதியை ஏற்படுத்த அமைதிப்படை என்கிற பெயரில் இராணுவத்தை அனுப்பியிருந்தார். இந்திய இராணுவம் தமிழ் மக்களை கொல்கிறது, இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாக இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது, ஈழ மண்ணில் இந்திய இராணுவத்துக்கு தோல்வி ஏற்பட அமைதிப்படையை திரும்ப அழைத்தார் ராஜிவ்காந்தி. குப்பல் வழியாக சென்னை வந்த அமைதிப்படையை முதல்வர் கலைஞர் வரவேற்க செல்லவில்லை. ஏன் தொப்புள் கொடி உறவினை கொன்றுவிட்டு வரும் படையை வரவேற்கமாட்டேன் என்கிற ரீதியில் கருத்து வெளியிட்டு அழைக்கசெல்லவில்லை.

இதை பிடித்துக்கொண்ட ஜெ, முதலமைச்சர் இப்படி பேசுவது சட்டவிரோதம் என்றார். டெல்லியில் லாபி செய்ய தொடங்கினார். இதற்கிடையே எல்.டி.டி.ஈக்கு எதிர்பான வேறு இயக்க முக்கியஸ்தர்கள் அடுத்தடுத்து தமிழகத்தில் கொல்லப்பட்டார்கள், குற்றவாளிகள் பிடிபடவில்லை. ஜெயலலிதா, சு.சாமி போன்றவர்கள், விடுதலைபுலிகளுக்கு ஆளும்கட்சியான திமுக ஆதரவு என புகார் வாசித்தனர். காங்கிரஸ் கட்சி தயவில் பிரதமராக இருந்த சந்திரசேகரிடம், திமுக ஆட்சியை தமிழகத்தில் கலைக்க வேண்டும் என நெருக்கடி ராஜிவ்காந்தியும் நெருக்கடி தந்தார். அவர் மத்தியரசின் பிரதிநிதியாக தமிழகத்தின் ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலாவிடம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அறிக்கை தாருங்கள் எனக்கேட்டது. அவர் தர மறுத்துவிட்டார். ஆளுநர் அறிக்கை இல்லாமலே, தமிழகத்தில் பெரும்பான்மை பலம்மில்லாத நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என காரணம் காட்டி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

1988ல் அதிமுக சந்தித்த அதேநிலையை தான் அதிமுக ஆட்சி மீண்டும் இப்போது சந்திக்கிறது. அப்போது, ஜானகி – ஜெ மோதல் என்றால், இப்போது ஓ.பி.எஸ் - பழனிச்சாமி மோதல். மோதும் இருவரும்மே அதிமுகவில் ஜெவின் தோழி சசிகலாவால் வளர்க்கப்பட்டவர்கள். இப்போது, ஓ.பி.எஸ், சசிகலாவின் முன்னால் ஆதரவாளர், பழனிச்சாமி, இந்நாள் ஆதரவாளர். அவ்வளவே.

இப்போது 2017 என்ன நடக்கபோகிறது ?.

2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக தொடர்ந்த ஜெ, உடல்நிலை சுகம்முற்று 70 நாள் மருத்துவமனையில் இருந்தவர். இல்லம் திரும்பாமலே இறந்துபோனார். ஊழல் குற்றச்சாட்டால் பதவி இழந்தபோதும், ஊழலுக்கு உள்ளாகி சிறை சென்றபோதும் டம்மி முதல்வராக நியமிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தையே, ஜெ இறந்தபின், முதல்வர் நாற்காலியில் சசிகலாவால் உட்கார வைக்கப்பட்டார். பன்னீர்செல்வம் உட்கார்ந்தாலும், அந்த நாற்காலியில் தான் உட்கார ஆசைப்பட்டார் சசிகலா உட்கார ஆசைப்பட்டு கட்சியின் பொதுச்செயலாளராக மாறினார். அடுத்து முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யவைத்தார்.

ராஜினாமா செய்த இரண்டு தினங்களுக்கு பிறகு, சசிகலாவுக்கு எதிராக குரல் எழுப்பினார். சிசகலாவை பிடிக்காமல் இருந்த பல இரண்டாம் கட்ட தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம் பக்கம் திரண்டனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, 91 -96 ஆட்சிகாலத்தில் ஜெ - சசிகலா டீம், ஊழல்களில் ஈடுப்பட்டு வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அடுத்து வந்த திமுக வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு உச்சநீதிமன்றம் 4 வருடம் தண்டனையை உறுதி செய்தது. இதனால் முதல்வர் பதவி ஏற்க முடியாத சசிகலா, தன் சார்பாக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, முதல்வர் வேட்பாளராக நிறுத்தினார். ஆவரை ஆளுநரும் பதவி பிரமாணம் செய்துவைத்தவர். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இன்று 18ந்தேதி காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்வாரா என்பது தெரிந்துவிடும். சட்டமன்றத்தில் 235 உறுப்பினர்கள் உள்ளனர். (234 மக்களால் தேர்வு செய்யப்படுபவர் ஒருவர் நியமன எம்.எல்.ஏ ). 235ல், ஜெ இறந்துவிட்டதால் ஒருயிடம் காலி, சபாநாயகர் வாக்களிப்பில் கலந்துக்கொள்ள முடியாது. அதோடு, நியமன உறுப்பினர்க்கு வாக்குரிமை கிடையாது. ஆக 232 உறுப்பினர்கள் தான் வாக்களிக்க முடியும். அதிமுக வசம் 134 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். திமுக வசம் 89, காங்கிரஸ் வசம் 10 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

பெரும்பான்மை பலம் என்பது இரண்டு வகையில் நிரூபிக்க சபாநாயகர் உத்தரவிடலாம். முதல்வழி. சட்டமன்றத்தில் ஆட்சியமைக்க தேவையான 117 உறுப்பினர்களின் ஆதரவை மறைமுக தேர்தல் வழியாகவோ, கைதூக்கி ஆதரவு தெரிவிக்கும் முறையிலோ காட்ட சொல்லலாம்.

இரண்டாவது வழி, சட்டமன்ற கூட்டத்தில் இன்று கலந்துக்கொண்டுள்ள உறுப்பினர்களில் பாதிக்கு மேல் காட்டவேண்டும். உதாரணத்துக்கு, 220 பேர் வருகை தந்துள்ளார்கள் என்றால் 111 உறுப்பினர்களின் ஆதரவை காட்ட வேண்டும்.

இரண்டு முறையிலும், ஆதரவும், எதிர்ப்பும் சரிசமமாக உள்ளது என்றால் அப்போது சபாநாயருக்கு ஓட்டுரிமை தரப்படும். அவர் செலுத்தும் ஓட்டின்படி முடிவு எடுக்கப்படும். இந்த இரண்டு வழிகளில் தான் பெரும்பான்மை நிரூபிக்கும் வாய்ப்பு. பெரும்பான்மையை நிரூபிக்கவில்லையென்றால் முதல்வர் பழனிச்சாமியின் பதவி பறிபோய்விடும். அதற்கு மேல் என்ன செய்வது என்பது ஆளுநரே முடிவு செய்வார்.
ஆளுநர், அடுத்து பெரும்பான்மையாகவுள்ள திமுகவை ஆட்சியமைக்க அழைக்கலாம். அல்லது அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 355 பிரிவை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சிக்கு பறிந்துரை செய்யலாம். எதிர்கட்சியாக உள்ள திமுக ஆட்சியை ஏற்றுக்கொள்கிறோம் என அறிவித்து பதவிக்கு வந்தால் அவர்களும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 355 பயன்படுத்தி 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சி அதன்பின், மீண்டும் 6 மாதம் பொருத்தே அரசியல் சட்டப்பிரிவு 356 பயன்படுத்தி ஆட்சி கலைப்பு அதன்பின்பே சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும்.

1988ல் அதிமுக ஜா அணியும், ஜெ அணியும் சட்டமன்றத்தில் மோதிக்கொண்டதுபோல் அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று 2017ல் அதே சட்டமன்றத்தில் அதே அதிமுகவின் முன்னால் முதல்வர் பன்னீர்செல்வம் அணியும், தற்போதைய முதல்வர் பழனிச்சாமி அணியும் மோதிக்கொண்டு ஆட்சி கலைப்புக்கு வழி செய்ய போகிறார்களா அல்லது முதலமைச்சர் பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து முதலமைச்சராக ஆட்சியை தொடர போகிறாறா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். எது நடந்தாலும் வரலாற்றின் பக்கங்களில் இவைகள் இடம்பிடிக்கும் என்பதில் மாற்று கருத்துயில்லை.

ராஜ்ப்ரியன்
nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer