Thursday, February 16, 2017

இன்னொரு வாணி ராணி தொடர் நாடகம் போல எளிதாக விளங்கியது பலருக்கு..

புலம் பெயர் தமிழரிடையே வன்னியில் நடைபெற்ற போருக்குப் பின் அதிகமாக போய் சேர்ந்திருக்கும் செய்தி எதுவென்றால் கண்டிப்பாக ஜெயலலிதா – சசிகலா கதைதான் என்று துணிந்து கூறலாம்.

தமிழ் நாட்டில் இருந்து தமிழ் தொலைக்காட்சிகள் வழியாக புலம் பெயர் தமிழ் பெண்கள், ஆண்களிடையே அதிகமாக பட்டுவாடா ஆகிக் கொண்டிருப்பது தொலைக்காட்சித் தொடர்கள்தான்.

எந்தவித பின்புலமும் இல்லாமல் எளிதாக விளங்கக்கூடிய முறையில் வாணி – ராணி என்றும் மாமியா – மருமகளா என்றும் பெண்களை வில்லிகளாகவும் காமக்கிழத்திகளாகவும் தமிழ் நாட்டு தொடர் நாடகங்கள் காட்டி வருகின்றன.

இந்த வக்கிர நாடகங்களின் கதைபோலத்தான் ஜெயலலிதா – சசிகலா என்ற இரண்டு பெண்கள் தொடர்பான கதைகளும் வெகுஜன மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

நடப்பது பெண் வில்லிகளின் கதைகள் போல பட்டுவாடா ஆகியிருக்கிறது..

ஜெயலலிதா மர்மமான முறையில் மரணித்ததாகவும், அவருக்கு நஞ்சு வைத்து கொன்றதாகவும் வெளியான செய்திகள், சசிகலா மர்மத்தை மறைக்கிறார் என்ற தகவல்கள் புலம் பெயர் நாடுகளில் வாழும் வெகுஜனத்திற்கு ஒரு தமிழ் நாட்டு தொடர் நாடகம்போல எளிதாக புரிந்து கொள்ள வசதியாக இருந்துள்ளது.

அரசியல் கருத்துக்கள் என்றால் பத்தடி விலகிச் செல்வோர்கூட இப்போது சசிகலா நடராஜன், ஜெயலலிதா தீபா, பன்னீர் என்று அரசியல் ராஜதந்திரப் பேச்சுக்களின் ஈடுபடுவதை ஆங்காங்கு பரவலாக அவதானிக்க முடிகிறது.

சற்று முன்னதாக ஓய்வூதியம் பெற்ற பெண்மணி ஒருவர் கூறும்போது இன்று அதிகாலையிலேயே தானும் கணவனும் விழித்திருந்தாகவும் சசிகலா வழக்கின் தீர்ப்பிற்காக உறங்கவில்லை என்று கூறியிருந்தார்.

இவ்வளவு தூரம் நம் புலம் பெயர் தமிழர்களை அரசியல் பேச வைத்தது சசிகலா என்ற பாத்திரம் ஒரு வில்லிபோல சித்தரிக்கப்பட்டதால்தான்.

அப்பலோவில் இருந்த நடராஜன் சசிகலா அடித்துத்தான் போயிருக்கிறார் என்று ஒரு மூதாட்டி சொன்னதையும் கேட்க முடிந்தது இப்படி ஏராளம் கட்டுக்கதைகள்.

இதற்கெல்லாம் வாய்ப்பாக தமிழக தலைவர்கள் நடந்து தம்மையும் ஒரு சீரியல் பாத்திரங்களாக மாற்றியிருக்கிறார்கள்.

அரசியல் பேச வரும்போது தான் கண்ணீர்விட்டால் அது தொடர் நாடகம் ஆகிவிடும் என்பதை பாவம் சசிகலாவால் விளங்க முடியவில்லை அவர் கண்ணீர்விட கண்ணீர்விட அது எல்லாத் தவறுகளுக்கும் காரணமான வில்லி ஒருத்தி நாடகத்தில் கண்ணீர்விடுவதைப் போல பலருக்கு தோற்றம் கொடுத்திருக்க வேண்டும்.

அதை எல்லாம்விட உச்சக்கட்டம் ஜெயலலிதாவின் சமாதியில் தான் இருந்தபோது ஜெயலலிதா ஆவி வந்து தனது காலை இழத்ததாக அவர் கூறியது, சசிகலாவும் ஒரு தொடர் நாடக கேஸ்தான் என்பதைக் காட்டியது.

இவர்களோடு சேர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டுதான் ஜெயலலிதாவும் போயஸ்கார்டனில் இருந்தாரா என்பது அடுத்த கேள்வி, இன்று உச்ச நீதிமன்றம் ஜெயலிதா இறந்தாலும் அவரும் ஒரு ஊழல் குற்றவாளிதான் என்றுதான் கூறியிருக்கிறது.

இதுவரை உணர்வற்று கிடந்ததாகக் கூறப்பட்ட மு.கருணாநிதியும் சட்டென விழித்தெழுந்து நீதி வெல்லும் என்று சற்று முன் அறிக்கை விட்டுள்ளார்.

இப்போது சசிகலாவுக்கு சிறை என்ற செய்தி வேறு நாடகம் போல அமைந்துள்ளதால் தொடர் நாடகம் பார்ப்பதைவிட இது சுவாரஸ்யமாக மாறியிருக்கிறது வெளி நாடுகளில்.

தமிழக தொலைக்காட்சிகளும் இதை தொடர் நாடகப்பாணியில்தான் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

ஜெயலலிதா சொத்து சேர்த்தார் என்றும் சசிகலா சொத்துக்களை கட்டாயப்படுத்தி பறித்தார் என்றும் கூறப்பட தன்னையும் மிரட்டித்தான் கையெழுத்து வாங்கியதாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

இதுவும் ஒரு தொடர்நாடகக் கதைதான்..

முதல்வர் பதவியில் இருப்பவர் தமிழ் நாடு போலீசை நம்பாமல்தான் கையெழுத்து வைத்துவிட்டு வந்திருக்கிறாரே இவர் ஒரு சரியான மனிதரா என்று யாரும் கேட்கவில்லை.

மிரட்டி கையெழுத்து வேண்டியிருந்தால் அது போலீஸ் கிரிமினல் வழக்கு அதுபற்றி செய்திகளே இல்லை.. ஏன்..?

இதற்குள் நடராஜன் அப்பலோவில் படுக்க.. வை. கோபாலசாமி திருமாவளவன் வகையறாக்கள் சசிகலாவுக்காக உருக.. சீமான் இடையில் கேள்வி கேட்க இத்தோடு தமிழகத்தில் வரும் ஈழ அரசியலும் உருகி ஓடியது.

ஜெயலலிதா சொத்து சேர்த்தார், சசிகலா சொத்து சேர்த்தார் என்று கூறுவோர் ஈழம் பேசுவோருடைய சொத்துக்கள் கடந்த பத்தாண்டுகளில் எப்படி குத்தாக வளர்ச்சி பெற்றதென கேட்கவில்லை.

ஒரு ரூபா சம்பளமெடுத்த ஜெயலலிதா பதவியில் இருந்தபோது 60 கோடியாக உயர்ந்த சொத்து போலவே ஒரு ரூபா கூட வருமானம் இல்லாத ஈழ ஆதரவு அரசியல்வாதிகளின் சொத்தும் உயர்ந்துள்ளதே, அது ஊழல் இல்லையா..?

இப்படி தமிழக அரசியலின் மீதான கேள்விகள் ஓடி இப்போது ஜல்லிக்கட்டு போராட்டமும் அத்தோடு முனைப்புப் பெற்று நடிகர்கள் அதுபற்றியும் அதிகம் பேசுகிறார்கள்.

இவ்வளவு பேசுகிறீர்களோ ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிகள் அடங்கிய ஒரு நூலை நீங்கள் யாராவது வெளியிட்டிருக்கிறீர்களா.. இல்லை பார்த்திருக்கிறீர்களா..?

உதவாக்கரை விளையாட்டெல்லாம் ஒலிம்பிக் விளையாட்டாகியிருக்கிறது எந்த அரசியல்வாதியாவது ஜல்லிக்கட்டை ஒரு பொதுநலவாய விளையாட்டு போட்டிக்காவது எடுத்துச் செல்லவேண்டுமென சட்டசபையில் ஒரு பிரேரணையை ஆவது முன்வைத்ததுண்டா.

ஜல்லிக்கட்டை ஒலிம்பிக் போட்டியாக்க வேண்டுமென திரைப்படத்தில் ஒரு காட்சியையாவது இந்த நடிகர்கள் வைத்ததுண்டா..?
கமலும், ராகவா லோரன்சும் உச்சத்தில் இருந்தபோது ஜல்லிக்கட்டு பற்றி பேசாது இப்போது ஏன் பேசுகிறார்கள் என்று யாராவது சிந்தித்தார்களா…?

இவைகள் கேள்விகள்..

ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை குறைகூறவில்லை ஆனால் இவைகள் கேள்விகள் மட்டுமே..

இருப்பினும் தீமைகளை நன்மையாக்க முடியும் அதை இனியாவது புலம் பெயர் தமிழர் சிந்திக்க வேண்டும்.

தமிழகத்தை நம்பி இலங்கை தமிழர் உரிமைகளை பேசுவதில் இனி யாதொரு பயனும் கிடையாது என்ற புரிதலை எடுக்க இந்த நிகழ்வுகள் உதவினாலே பெரிய விடயம்.

ஈழத் தமிழர்கள் இமயங்களாக நம்பிய அத்தனை தலைவர்களும் நடிகர்களும் வெத்து வேட்டுக்களாக நிற்பதை புலம் பெயர் தமிழர் அடையாளம் காண இது நல்ல தருணம்.

இனியும் இவர்களை நம்பி, இவர்கள் கால்களில் உங்கள் எதிர்காலத்தை வைத்துவிட்டு கைகட்டி நிற்காதீர்கள் என்பதற்கு ஜெயலலிதா – சசிகலா – தீபா – இளவரசி – தினகரன் – ஓ.பன்னீர்செல்வம் – மு.க.ஸ்டாலின் வகையறாக்களின் அரசியல் நல்லதோர் புத்தகமாக அமைந்துள்ளது.

எல்லாவற்றையும் மறந்து மறுபடியும் மறுபடியும் விட்டில் பூச்சிகளாக தமிழக அரசியலில் விழும் புலம் பெயர் தமிழர்கள்.. இனி முற்றாக தப்பித்துக்கொள்ள இந்த நிகழ்வுகள் உதவினால் அதுவே பெரிய விடயம்.

இதை வேடிக்கை பார்ப்பதை விடுத்து இதிலிருந்து விடுதலை பெற முயன்றால் ஈழத்தமிழர்கள் தேடும் விடிவின் அரைப்பங்கு கிடைத்துவிடுமன்றோ..?

அலைகள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer