Monday, February 20, 2017

முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதி மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக மீண்டும் ஒரு சபை ஒத்திவைப்பு பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் புதன்கிழமை கொண்டுவரவுள்ளது. இதனை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.

கேப்பாபுலவ- பிலக்குடியிருப்பில் விமானப்படையின் அத்துமீறிய ஆக்கிரமிப்பிலுள்ள 42 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று திங்கட்கிழமை 21வது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதேவேளை, புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினரை உடன் வெளியேறுமாறு வலியுறுத்தி 03ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டம் 18வது நாளாக தொடர்கின்றது.

இந்தநிலையிலேயே, கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு போராட்டங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்ற ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளித்துள்ள இரா.சம்பந்தன், ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “காணிகளை இராணுவத்தினர் பிடித்து வைத்திருப்பது பிழை என்று தெரிந்தும் அரசாங்கம் அசமந்தப் போக்கில் செயற்படுகின்றது. இராணுவத்தினர் மக்களின் காணிகளிலிருந்து வெளியேற வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. காணி விடுவிப்புத் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புப் பிரேரணையை எதிர்வரும் புதன்கிழமை கொண்டு வர இருக்கின்றோம்.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். காணி விடுவிக்கக் கோரும் மக்கள் போராட்டம் நியாயமானது. காணி விடுவிக்கப்படும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.” என்றுள்ளார்.

கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு காணிப்பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer