Monday, January 2, 2017

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் ‘சிவலிங்கா’. இந்த படம் தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து இம்மாத இறுதியில் திரைக்கு வர உள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் பி.வாசு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவலிங்கா திரைப்படம் ஒரு கிரைம் ஹாரர் திரில்லர் படம். கடந்த பிப்ரவரி 12-ம்தேதி கன்னடத்தில் இப்படத்தை  இதே பெயரில் ரிலீஸ் செய்தேன். சிவராஜ் குமார் நடித்திருந்தார். 85 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மிகப்பெரிய வெற்றிப்படம். சந்திரமுகிக்குப் பிறகு கன்னடத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யும் படம் 'சிவலிங்கா'.

ஒரு பையன் ரெயிலில் சென்றுகொண்டிருக்கிறான். அவன் தனது வளர்ப்பு புறாவையும் உடன் கொண்டு செல்கிறான். கடைசி ரெயில் என்பதால் அந்த கம்பார்ட்மென்டில் யாரும் இல்லை. எனவே, அவன் தூங்கலாம் என நினைத்து படுக்கிறான். அப்போது அந்த கம்பார்ட்மென்டில் இருந்து கண்தெரியாத ஒருவன் எழுந்து நடந்து வாசல் பக்கம் செல்கிறான். உடனே புறா அந்த பையனை எழுப்புகிறது. அவன் எழுந்து குருடனை காப்பாற்ற முயற்சிக்கிறான். ஆனால், அவனோ திடீரென காப்பாற்ற வந்த பையனை கீழே தள்ளி கொல்கிறான். அவனது ரத்தம் புறாவின் மீது விழுகிறது. இப்போது அந்த புறாதான் கொலைக்கு சாட்சி. அந்த புறா, இந்த கொலையை செய்தது யார் என்பது குறித்து கதாநாயகனிடம் சொல்வதுதான் கதை. புறா எப்படி சொல்கிறது? என்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இது தற்கொலை என்று கோர்ட் முடிவு செய்கிறது. ஆனால், அவனது காதலி இந்த வழக்கை மறுபடியும் விசாரிக்க முறையிடுகிறார். எனவே, மிகவும் ரகசியமாக சிபிசிஐடி மூலம் விசாரிக்கிறார்கள். லாரன்ஸ் இதுவரை செய்யாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிபிசிஐடி அதிகாரியாக வருகிறார். அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும். அதேசமயம் வழக்கமாக அவரது படத்தில் இருக்கும் தனி தன்மைகளும் இருக்கும். ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். சந்திரமுகிக்குப் பிறகு வடிவேலுவுக்கு இதில் பெரிய கேரக்டர், சிபிசிஐடியிடம் மாட்டிக்கொண்ட திருடன் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தின் கிளைமாக்சும் வித்தியாசமாக இருக்கும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer