Saturday, January 14, 2017

டமஸ்கஸ்ஸுக்கு வெளியே அமைந்துள்ள முக்கிய இராணுவ விமானத் தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல் என்றும் இஸ்ரேலை சிரியா குற்றம் சாட்டியுள்ளது.

இத்தாக்குதலின் போது ஏற்பட்ட பெரு வெடிப்புச் சத்தம் டமஸ்கஸ் மக்களின் செவிகளுக்குக் கேட்டதுடன் அப்பகுதியில் எழுந்த புகை மூட்டம் தொடர்பான படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியும் உள்ளன. சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் பாதுகாவலர்கள் பயன்படுத்தி வந்த குறித்த விமானத் தளம் மீது நள்ளிரவுக்குப் பின்னர் வடக்கு இஸ்ரேலின் திபெரியாஸ் நீர்த்தேக்கத்தில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுக்கள் வந்து தாக்கியதாக சிரியத் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெஸ்ஸாஹ் இராணுவ விமானத் தளத்தின் மீது நடத்தப் பட்ட இந்த ராக்கெட்டு தாக்குதலில் சேதங்கள் அல்லது உயிரிழப்புக்கள் ஏற்பட்டதா என்ற தகவலை சிரிய அரசு இன்னமும் தெரிவிக்கவில்லை. ஆனால் பெரு வெடிப்பும் அதனால் தீ மற்றும் புகை ஏற்பட்டதற்கும் அம்புலன்ஸ் வண்டிகள், தீயணைப்பு வண்டிகள் குறித்த பகுதிக்கு விரைந்து சென்றதற்கும் ஆதாரமுள்ளது. கடந்த காலத்தில் இந்த இராணுவ விமானத் தளம் கிளர்ச்சியாளர்கள் மீது சிரிய இராணுவம் ராக்கெட்டு தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப் பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிரிய மண்ணில் தமது நாட்டுக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வந்த ஹெஷ்பொல்லா போராளிகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தி வந்ததுடன் இதில் பல முக்கிய ஹெஷ்பொல்லா தலைவர்கள் கொல்லப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer