Sunday, January 1, 2017

கொட்டும் மழையிலும் விட்டுவிடாது போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி..

மட்டக்களப்பில் இருந்து சுமார் 22 மைல் தொலைவில் உள்ள மாவடிச்சேனை என்ற இடத்தில் இருந்து தொலைவில் உள்ள கரடியனாறு என்ற இடத்தில் மிகமிக பாதிக்கப்பட்ட நிலையில், உதவிகள் கனவிலும் சென்றடைய முடியாத தொலைவில் உள்ள முன்னாள் போராளி குடும்பத்திற்கு பசுமாடும், உரொக்கப்பணமும் வழங்கும் நிகழ்வு நேற்று 30.12.2016 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வழங்கிக் கொண்டிருக்கும் மகத்தான உதவிகளின் நாலாவது நம்பிக்கை விளக்காக இந்த பசுமாடு வழங்கும் வைபவம் நடைபெற்றது.

கொட்டும் மழையில் நீர் ஏரிகளால் வாகனத்தை ஏற்றி, மாட்டை ஏற்றி மிகப்பெரும் சவாலுக்கிடையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

உதவி வழங்குவதைவிட ஆயிரம் மடங்கு கடினமான பணி அதை உரிய இடத்திற்கு மழை, வெள்ளம், ஏரி பாதைகளற்ற பகுதியால் எடுத்துச் சென்று உரியவர்களிடம் ஒப்படைப்பதாகும், அதைத் திறம்பட செய்தனர் ரியூப்தமிழ் இளைஞர்கள்.

மட்டக்களப்பில் வாழும் முன்னாள் போராளியான சிவரெட்ணம் சிவமலர் தம்பதியர்க்கு இந்த வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது, போரினால் தேகம் முழுதும் விழுப்புண்கள் ஏற்று போராளியான கணவன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காடுகள் நிறைந்த பகுதியில் பிள்ளைகளுடன் ஒரு ஜீவமரணப் போராட்டம் போல இவர்கள் வாழ்வு தடுமாறிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் இவர்கள் வாழ்வில் ஒரு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், ஒரு நம்பிக்கை விளக்கை ஏற்றி இருளை அகற்ற வேண்டும் என்று முடிவு செய்து பசுமாடு ஒன்றும், பத்தாயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டது.

இந்த உதவியை மனமுவந்து வழங்கிய கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனும் அதை செயற்படுத்திய ரியூப் தமிழும் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்களாகும்.

அதேவேளை இதற்கான பணியை முன்னெடுத்து கரடியனாறு போயுள்ள ரியூப்தமிழ் இளைஞர்கள் தரும் தகவல்கள் இன்னொரு புறம் நமக்கு மிகுந்த மனக்கவலையை ஏற்படுத்துவதாயும் அமைந்துள்ளது, இப்படியெல்லாம் மக்கள் இருளில் கிடக்க அப்பகுதிகளில் ஒளியடிக்காமல் ஒரே இடத்தில் ஒளி வீசி நாட்களை கடத்திவிட்டோமே என்ற வேதனையே ஏற்பட்டது.

உதவிகளில் ஊழலும் அரசியலும் ஒழிக்கப்பட வேண்டியது ஒரு புறம் சிக்கலாகவும், ஒரே ஆளே பல தடவைகள் உதவிகளை பெற மற்றவர்கள் ஒன்றும் இல்லாமல் கிடப்பதுமே இப்போதுள்ள பெரும் பிரச்சனையாகும் என்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சென்ற மாதம் டென்மார்க்கில் வைத்து தெரிவித்தது இங்கு கவனிக்கத்தக்கது.

உதவியை வாங்கியபோது அவர்கள் முகத்திலும், பிள்ளைகள் முகத்திலும் ஏற்பட்ட நம்பிக்கையும் சிரிப்பும் எத்தனை கோடி கொடுத்தாலும் பெறமுடியாத பேரின்பம் என்று ரியூப்தமிழ் இளைஞர் கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் அலைகளுக்கு தெரிவித்தார்.

இந்த உதவி பெறுவதைவிட முக்கியம் ஊழல் இல்லாத உதவிப் பொதி 4 என்ற தலைப்பாகும், இலங்கைக்கு வரும் உதவிகளில் 40 வீதம் உரியவரை எட்டித்தொட்டாலே அது மகத்தான சாதனை என்று டென்மார்க்கில் பேசும்போது காலஞ்சென்ற பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார்.

நாம் வழங்கும் உதவிகள் இடைத்தரகர்களால் சூறையாடப்படாமல் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடைந்தால் சேதாரமாகப் போகும் 60 வீதமும் பயனுள்ள உதவியாக மாறிவிடும், அதைத்தான் இப்போது ரியூப்தமிழ் இளைஞர்கள் தாயகத்தில் நின்று செய்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இது பக்கச்சார்பற்ற நடு நிலையான உண்மைச் சேவையாகும், இதுவே இதன் சிறப்பு..

இந்த வகையில் இம்மாதம் வழங்கப்படும் நான்காவது உதவியாக இருப்பதால் ஊழல் இல்லாத உன்னத உதவி இலக்கம் நான்கு என்று சிறப்பாக அழைக்க வேண்டியுள்ளது.

ஒரு பிளே; ரீ குடித்தாலும் பற்றுச்சீட்டு இருக்க வேண்டும், பணத்தை ஒருவர் கையாள முடியாது பலர் கண்காணிக்க வேண்டும், ஒரு ரூபாய் ஓட்டை விழாத விபரமான கணக்குடன் இப்பணிகள் நடக்கின்றன, ஊழல் இல்லாவிட்டால் ஓராண்டு காலத்தில் இரண்டு மடங்கு மக்கள் வாழ்வில் புன்னகையை மலர வைத்துவிடலாம் என்பதே இந்தப் பணிகளின் புத்தம் புதிய தத்துவமாக இருக்கிறது.

வீணான செலவுகளை தவிர்க்க வல்வையில் இருந்து மோட்டார் சைக்கிளிலேயே மட்டக்களப்பு நோக்கி பயணமானார்கள் ரியூப்தமிழ் இளைஞர்கள் கடும் மழை திருகோணமலையை நெருங்கிய போது மூடிக்கொண்டது, இதனால் மோட்டார் சைக்கிளை திருமலையில் விட்டு பேருந்தில் பயணம் தொடர்ந்தது..

பின் அங்கிருந்து ஏரிகளை தாண்டி படகில் சென்று, மாட்டை ஏற்றி உரிய இடத்தை சென்றடைந்து அங்கிருந்து திரும்பி புதுக்குடியிருப்பு வந்து, இன்னொரு போராளிக்கு பசுமாடு வழங்க தாண்டிக்குளம் போக அதிகாலையில் மோட்டார் சைக்கிளை மிதிக்க அதன் படபடப்பு ஒலி பனி பெய்த வன்னிமண்ணில் வெகுதூரம் வரை பயணிக்கிறது..

இது சாதாரண ஒலியல்ல முதலில் ஏழ்மையை வெல்வோம் என்ற நம்பிக்கை ஒலியாகும்.

இழப்புக்கள் கொடுத்து வெற்றிகள் பெறுவது ஆயுதப் போர்..

ஆனால் போரினால் வந்த இழப்புக்களை வென்று மறுபடியும் புது வாழ்வு பெறுவது வாழ்க்கைப் போர்..

வாழ்க்கைப் போரில் வென்றிருந்தால் நமது நாட்டில் ஓர் ஆயுதப் போர் தோன்றியிருக்காதன்றோ..

இறைவனை ஏழையின் சிரிப்பிலும் காணலாம் என்பதுதான் எத்தனை பெரிய உண்மை.

இதோ பசு மாடு வழங்கியபோது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள்…


0 comments :

Post a Comment

 
Toggle Footer