Sunday, January 15, 2017

பிரபாகரன் வரவேண்டும் தலைமைதாங்க வேண்டும் அமைச்சர் டெனீஸ்வரன்..

வல்வையில் நேற்று நடைபெற்ற பட்டப்போட்டி வல்வைக்கு அப்பால் சர்வதேசரீதியாக புலம் பெயர் தமிழர் ஊடகங்களில் புகைப்பட வடிவில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

விழாவின் பிரதம விருந்தினராக வருகைதந்த வடக்கு மாணகாண கடற்தொழில் அபிவிருத்தித்துறை அமைச்சர் பிரபாகரன் எங்கிருந்தாலும் நலமாக இருக்க வேண்டும், பட்டப்போட்டிக்கு தலைமைதாங்கும் நாள் வரவேண்டும் என்று கூறியபோது கைதட்டல் வான்கடந்து பட்டங்களையே ஒரு முறை உலுக்கியது.

சுமார் ஐம்பத்தைந்துக்கும் மேற்பட்ட பட்டங்கள் ஆகாயத்தில் பறந்தன, இதில் இராட்சத ஓணான் முதலிடத்தைப் பெற்றது.

பட்டங்கள் பார்த்தோம் ஆனால் இதுபோல அபாரமான பட்டங்கள் ஆகாயத்தில் ஏறியதை நாம் இதற்கு முன்னர் பார்த்தில்லை என்று வெளிநாடுகளில் ரியூப்தமிழ் வழியாகப் பார்த்த மக்கள் கருத்துரைத்துள்ளார்கள்.

பொங்கலன்று தமிழக தொலைக்காட்சிகளின் நடிகைகள் புசத்தல்களையே பார்த்து பார்த்து களைத்த தமக்கு பட்டப்போட்டி ஒளிபரப்பு புதுமையாக இருந்ததாக புலம் பெயர் நாடுகளில் பலர் கூறினார்கள்.

தாயக உணர்வுடன் இப்படியான பட்டப்போட்டியை பார்ப்பது பெரிய விடயம் ஐந்தரை மணி நேரமும் இருந்த இடத்திலேயே இருந்து பட்டப்போட்டியை பார்த்ததாக பல ரசிகர்கள் கூறினார்கள்.

தமிழகத்தின் பிரபலமான பாடகி, சூப்பர் சிங்கர் புகழ் சோனியா தமது நாட்டில்; எத்தனையோ பட்டங்களை பார்த்துள்ளேன், ஆனால் இதுபோன்ற இராட்சத பட்டங்களை பார்க்கவில்லை என்று கூறினார்.

வல்வையைச் சேர்ந்த பிரபல விளையாட்டு வீரர் தங்கவேல் கூறும்போது வல்வையில் அதிகமான மக்கள் கூடும் விழாவாக இதுவரை சாதனை படைத்தது இந்திரவிழாவாகும் ஆனால் இந்த நிகழ்வுக்கு வந்துள்ள மக்கள் தொகை அதையும் தாண்டிவிட்டது என்றார்.

வண்டில், துளைபோடும் மெஷீன், குளவி, பெட்டிக்கொடி வடிவங்கள் என்று பல்வேறு ஜாலங்கள் காட்டின பட்டங்கள், கடுமையான போட்டி நிலவியது.

இந்தப்பட்டங்கள் தயாரிப்பானது வாடைக்காற்றை மார்பில் ஏந்தி மேலேறும் படலம், பெட்டிக்கொடி சார் தொழில் நுட்பத்தைத் தழுவி நுட்பமாக தயாரிக்கப்பட்டுள்ளதால் வானில் கச்சிதமாக ஏறுகின்றன, எல்லாவற்றையும் விட முக்கியம் இவற்றுக்கு கட்டும் உச்சிகளாகும்.

இராட்சத ஓணான் கூட இதுபோல ஒரு தொழில் நுட்பத்தை தழுவி படலம் போல காற்றை ஏந்தி அதுபோல திறந்த வாயால் காற்றை விழுங்கி மேல் எழுந்தது.

பட்டம் வானில் நிற்க வேண்டுமானால் முக்கியமானது வால் ஆகும் பட்டம் குத்துக்கரணம் போடாமல் இருக்க வேண்டுமானால் வாலின் நீளம் கூட இருப்பது பாதுகாப்பானது இராட்டசத ஓணானை வடிவமைத்தவர் வாலாவையும், பெட்டிக்கொடி தத்துவத்தையும் இணைத்து வெற்றியை தனதாக்கியிருந்ததைக் காணமுடிந்தது.

சில பட்டங்கள் ஏறமுடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது, காற்றின் வரவுக்கும் பட்டம் கிளம்பும் பாரத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு காற்றின் வேகத்தை பொறுத்து மாறுபடும், இதனால் சில பட்டங்களால் வெற்றியை நெருங்க முடியவில்லை.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் தொகை தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா செல்லும் பிரச்சாரக் கூட்டங்களில் பார்த்தைப்போல பிரமாண்டமாக இருந்தது.

ஆகவே எதிர்காலத்தில் இந்த மைதானமானது மிகவும் பெரிதாக விஸ்த்தரிக்கப்பட்டு மக்கள் சரியான முறையில் உள்வாங்கப்படும் விதமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இங்குள்ள பொறியியலாளர்கள் கற்பனை செய்து இந்த உல்லாசக்கடற்கரையை புதிய கோணத்தில் வரைய வேண்டும், அதற்கு எத்தனை மில்லியன் செலவானாலும் தமது அமைச்சகத்தால் ஒதுக்கித்தரப்படும் என்று பிரதம விருந்தினர் டெனீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் கருத்துரைத்த அவர் இதுபோல ஆரோக்கியமான பாதையில் நமது சமுதாயம் சென்றால் அது பெருமைக்குரியதாக மாற்றமடையும், ஆனால் இதற்கு மாறான துயரமான சம்பவங்களும் நடைபெறுகின்றன என்றார்.

இன்று குடாநாட்டில் இளைஞரிடையே நடைபெறும் வாள்வெட்டு, இந்து – கிறீத்தவ சமயப் பிளவுகள் போன்றன சமுதாயத்தை சீரழித்து வருகின்றன, அவற்றை மாற்ற ஆவன செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

நிகழ்வில் பலர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்று கருத்துரைத்தார்கள், பரீட்சைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது, அத்தோடு பல துறைகளிலும் சாதனை படைத்தோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இது இவ்விதமிருக்க தமிழ்நாட்டில் பொங்கல் என்றும் ஜல்லிக்கட்டு என்றும் தமிழகச் செய்திகள் போக அதிலிருந்து வேறுபட்டு பொங்கல் பட்டப்போட்டியாக மலர்ந்து கிடந்தது ஈழத் தமிழர் நிலம்.

மாட்டை எதிர்த்து மனிதன் என்றால் அது ஜல்லிக்கட்டு காற்றை எதிர்த்து பட்டம் விட்டால் அதுவும் ஒரு ஜல்லிக்கட்டே..

அலைகள்

0 comments :

Post a Comment

 
Toggle Footer