Friday, January 27, 2017

உலகில் இதுவரை நடைபெற்ற எந்த போராட்டங்களுடனும் ஒப்பிட முடியாத போராட்டம் ஜல்லிகட்டு தடை நீக்க கோரி நடைபெற்ற போராட்டம்.

தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் தமிழர்கள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் அந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு ஜல்லிகட்டு ஆதரவுபோராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஜல்லிகட்டு தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம் சம்பந்தமான விழா என்றாலும் தமிழர், வட இந்தியர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் என பன்முக கலாச்சார சங்கமமாக இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் ஒருமித்த குரலில் ஆதரித்த 'ஜல்லிகட்டு' போராட்டம் முதல் நாளிலேயே விஸ்வரூபமெடுத்தது. குடும்பங்கள் ஆதாரித்து கொண்டாடிய ஒரே போராட்டம் ஜல்லிகட்டு போராட்டம் என்ற வரலாறு படைத்தது.

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாணவர்-இளைஞர் தன் எழுச்சி போராட்டம். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் 'சுதந்திரம் எமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்' என்ற கோஷத்தை பால கங்காதர திலகர் முதன் முறை முழங்கியது சென்னை மெரினா கடற்கரையில்தான்.

அப்பெருமை மிகு மெரினா கடற்கரையில் வரலாறு படைத்த 'மக்கள் போராட்டம்' மகிழ்ச்சியுடன் கொண்டாடி கலைந்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்காமல் ரத்த களறியோடு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது மெரினாவில் ஜல்லிகட்டு போராட்டம். எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருந்த ஈழ போராட்டம் நிர்மூலமானதற்கு காரணம்அவர்களுடன் உடனிருந்து பயணித்த கருணா இலங்கை அரசின் கைக்கூலியானதால். அதே போன்ற நிகழ்வுதான் ஜல்லிகட்டு ஆதரவுப் போராட்டத்தில் ஹிப் ஹாப் ஆதியால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

ஜல்லிகட்டுக்கு ஆதராவாக கூலி வாங்கி கொண்டு பாடலுக்கு இசையமைத்தவர் இந்த ஆதி. பாடல் பிரபலமானதால் ஆதியும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டு தீயாகப் பரவியபோது பல மேடைகளில் இவருக்கு இடம் கிடைத்தது. தொலைக்காட்சி ஊடகங்களும் உண்மை நிலை தெரியாமல் ஆதியை முன்னிலைப்படுத்தின.

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக மக்கள் தன் எழுச்சியை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டது. மத்திய அரசு, மாநில அரசுக்கு போராட்டத்தை வைத்து சில நெருக்கடிகளைக் கொடுத்தது. இந்த போராட்டத்தினால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதையும், எதிர்வரும் காலங்களில் தடை செய்ய பட கூடிய கருமேகங்கள் உருவாகி வருவதையும் உணர்ந்தன பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள். போராட்டத்தில் வெற்றி பெற்றதை எழுச்சியுடன் கொண்டாட விட்டால் அடுத்த மாதமே வேறு ஒரு கோரிக்கையை வைத்து போராட்டத்தைத் தொடங்குவார்கள் என்பதை உளவுத் துறை அதிகார வர்க்கத்துக்கு அறிவுரையாகச் சொன்னது.

ஜல்லிகட்டு போராட்டத்தில் கருத்து வேறுபாடு கொண்ட அரசியல் அமைப்புகள் கலந்திருந்தாலும் போராட்டம் தொய்வின்றி, குழப்பமின்றி இரவு பகலும் தொடர்ந்தது. போராட்டத்தில் குழப்பத்தை, மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்க திட்டமிடப்பட்டது. இப்போராட்டத்தில் முதல் நாளிலிருந்து பங்கெடுத்து வரும் இயக்குநர்கள் வ.கெளதமன், சமுத்திரகனி, அமீர், லாரன்ஸ் இவர்களை நெருங்க முடியவில்லை. ஜல்லிகட்டு பாடல் மூலம் பிரபலம், படத் தயாரிப்புக்கு பணத்தேவை என்ற நிலையில் இருந்த ஆதியை பகடைக்காயாக பயன்படுத்த திட்டமிட்டன அரசும், பன்னாட்டு வர்த்தக நிறுனங்களும். குறிப்பாக கோக், பெப்சி கம்பெனிகள். இவர்களால்தான் கையகப்படுத்தபட்டார் ஆதி என்கிறார்கள் ஜல்லிகட்டு போராட்ட ஆதரவாளர்கள்.

போராட்டத்திலிருந்து தான் விலகிக் கொள்ள முக்கிய காரணமாக அவர் குறிப்பிட்டது 'மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் என்று கூறிவிட்டு, கோக், பெப்சிக்கு தடை கேட்கிறார்கள். இது சரியல்ல' என்றுதான். 6 வது நாள் பிற்பகல் வரை போராட்டத்தில் பங்கெடுத்து வந்த ஆதி போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் புகுந்து விட்டன, என் பெயர் இதற்கு பயன்படக்கூடாது, (இவருக்கு இளையராஜா, ஏஆர் ரஹ்மான என நினைப்பு) எனவே போராட்டத்தில் இருந்து விலகுகிறேன் என வீடியோவை பொதுத் தளங்களில் வெளியிட்டு பரபரப்பையும், ஜல்லிகட்டு ஆதரவுப் போராட்டத்தை ஆதரித்து வந்த பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் உருவாக்கினார்.

இதற்கு போராட்டகாரர்கள், பதில் சொல்வதற்கு முன் ஜனவரி 22 இரவு ஆதி பத்திரிகையாளர் சந்திப்பை வேறு நடத்தினார். ஜனவரி 23 அதிகாலை மெரினாவில் போராட்டகாரர்களை வெளியேற்ற காவல்துறை அடக்கு முறையைக் கையாண்டதை கண்டு உலக தமிழர்கள் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் பதிவு செய்து கொண்டிருந்த நேரத்தில், ஜல்லிகட்டு மசோதா நிறைவேறும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பார்வையாளராக ஆதிக்கு அனுமதி. தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு காட்சிகள் அரங்கேறின.

இவற்றையெல்லாம் உற்று நோக்கி வந்த தமிழக இளைஞர், மாணவர், பொது மக்கள் மத்தியில் ஆதி இப்போது விவாத பொருளாகி சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஈழப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர் கருணா. அதேபோல் நம்முடன் உடனிருந்து கடைசியில் போராட்டகாரர்களை களங்கபடுத்திவிட்டார் ஆதி என வேதனைப்படுகிறார்கள் போராட்டத்தில் பங்கெடுத்த மாணவர்கள்.

oneindia.com

1 comments :

 
Toggle Footer