Tuesday, January 31, 2017

பீட்டா அமைப்பு மட்டுமல்ல, பெப்சி-கோக் கம்பெனிகளும் நமக்கு எதிரான பன்னாட்டு நிறு வனங்கள்தான் என்பதை மெரினாவில் தொடங்கிய  போராட்டத்தில் பங்கேற் றவர்கள் உரக்கச் சொன் னார்கள். 1990களின் தொ டக்கத்தில் பெப்சியும் கோக்கும் நுழைந்தபோதே கம்யூனிஸ்ட்டுகள் இந்த எச்சரிக்கையை விடுத்தனர். புதிய விருந்தாளியை எதிர் பார்த்திருந்த அன்றைய தலைமுறை இதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

பெப்சியும் கோக்கும் உள்ளே நுழைந்தபோது, கைக்குழந்தைகளாக இருந்தவர்களும், அவற்றின் நுழைவுக்குப் பிறகு பிறந்தவர்களும் இப்போது  பெப்சி-கோக்கு போன்ற பன்னாட்டு நிறுவன பானங்களைப் புறக்கணித்து, உள்நாட்டு பானங்களை முன்னிறுத்த வலியுறுத்துகிறார்கள். கல்லூரி  மாணவர்கள் பெப்சி-கோக் பானங்களை கீழே கொட்டி எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா போன்றவர்கள் தமிழகத்தில்  பெப்சி-கோக் விற்பனைக்கு தடைகோருகின்றனர்.தங்கள் சங்க உறுப்பினர்களின் கடைகளில் கோக்-பெப்சி விற்கக்கூடாது எனத் தீர்மானித்துள்ளனர்.

இளைஞர்களின் கோரிக்கையும் வணிகர் சங்கங்களின் முயற்சியும் பெப்சி-கோக் விற்பனையைத் தடுத்து உள்நாட்டுத் தயாரிப்புகளான  பவண்ட்டோ-டொரினோ போன்றவற்றை முன்னிறுத்துமா?தனிப்பட்ட சில நிறுவனங்களின் ஆதாயத்துக்காக கோக்கும் பெப்சியும் எதிர்க்கப்படுகிறதா  என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

பெட்டிக்கடை முதல் பெரிய மால்கள் வரை கோக்-பெப்சி நிறுவனங்களின் ஆதிக்கம் நிலவுகிறது. கடைகளுக்கான விளம்பர போர்டு, ஃப்ரிட்ஜ்  உட்பட்ட வசதிகளைச் செய்துதரும் இந்த நிறுவனங்களின் முதலீடும் விளம்பரச் செலவும் மிகஅதிகம்.

தேவைக்கேற்ற வழங்கல் (சப்ளை அண்ட் டிமாண்ட்) என்பதுதான் வியாபாரத்தில் அடிப்படை வெற்றி. பன்னாட்டு நிறுவனங்கள் அளவுக்கு உள்நாட்டு  நிறுவனங்களால் முதலீடும் உற்பத்தியும் செய்யமுடியாத நிலை உள்ளது. அதனால்தான் உள்ளூரில் 1990-க்கு முன் இருந்த பல சோடா-கலர்  கம்பெனிகள் பெப்சி-கோக் வருகைக்குப் பிறகு தாக்குப்பிடிக்க முடியாமல் காணாமல் போயின. குறைந்த அளவில் உற்பத்தி செய்யும்போது அடக்க  விலை அதிகமாக இருக்கும். பெருமளவில் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடக்க விலை குறைவு. இது உள்ளூர் உற்பத்தியாளர்கள்  சந்திக்கும் மிகப்பெரிய சவால்.

பெட்டிக்கடைகளில் பலவித பாக்குகள்,சிகரெட் வகைகளுக்கு அடுத்தபடியாக அதிகம் விற் பனையாவது குளிர்பானங்கள்தான்.பெப்சி-கோக்  நிறுவனங்கள் இதனை ஆக்கிரமித்துள்ளன. அவற்றுக்குத் தடை விதிக்கும்போது  மாற்று பானங்களை சப்ளை செய்யுமளவுக்கு உள்நாட்டு  நிறுவனங்கள் இருக்க வேண்டும். இளநீர், மோர் போன்ற பானங்கள் என்றால் சின்ன கடைகளில் அவற்றுக்கான இடவசதியும் அவசியம்.
நோக்கம் சரியாக இருந்தும் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால் இலக்கை அடைவது எளிதல்ல.இதை வணிகர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

விக்கிரமராஜாவும் அவர்களின் சங்கத்தினரும் காளிமார்க், பவண்ட்டோ போன்ற உள்நாட்டுத் தயாரிப்பாளர்களைச் சந்தித்து,தேவைக்கேற்ற அளவு  சப்ளை செய்வதற்கான வழிமுறை-காலஅளவு குறித்து ஆலோசித்துள்ளனர்.பெப்சியும் கோக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்றாலும் அதன்  விநியோகஸ்தர்கள்,அவர்களிடம் வேலைபார்ப்பவர்கள் தமிழர்கள்தான். இவர்களுக்கான மாற்று வணிகம்-வேலைவாய்ப்பு குறித்தும் வணிகர் சங்கங்கள் ஆலோசித்துள்ளன. 

பெப்சி-கோக்குக்குப் பதில் உள்நாட்டு குளிர்பானங்களை முன்னிறுத்தும் முயற்சியின் சாத்தியம் குறித்து தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின்  பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளரும் திருவல்லிக்கேணி  வியாபாரிகள் சங்கத் தலைவருமான வி.பி.மணியிடம் கேட்டோம்.

"மார்ச் மாதத்திலிருந்து பெப்சி-கோக் போன்ற பானங்களை எங்கள் பேரமைப்பினர் விற்பனை செய்வதில்லை என எங்கள் தலைவர் அறிவித்துள்ளார். அதுவரை மாற்று ஏற்பாடு கள்-விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வோம். இதில் கடைக் காரர்கள்,பொதுமக்கள் ஆகியோரின் நலனும்  கவனத்தில் கொள்ளப்படும். கல்லூரிகளிலும் ஷாப் பிங் மால்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகின்றது.அங்கே மாற்றங்கள் ஏற்படும்போது  நோக்கம் நிறைவேறும் வாய்ப்புள்ளது.மக்களிடம் ஏற்பட்டு வரும் விழிப்புணர்வுக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம். பன்னாட்டு குளிர்பான  கம்பெனிகளுக்கான தண்ணீர் தேவையில் தொடங்கி கட்டமைப்பு வசதிகள்,வரிச்சலுகைகள் ஆகியவற்றை செய்துதரும் மத்திய- மாநில அரசுகள்  உள்நாட்டு குளிர்பான உற்பத்தியாளர்களுக்கும் அது போன்ற வசதிகளை உருவாக்கித் தரவேண்டும்.பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்தைக்  காப்பாற்றிக்கொள்ள அதிரடி விலைக்குறைப்பு - விற்பனை லாபவிகிதம் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ளும்.அப்படிப்பட்ட  சூழலில், உள்நாட்டு குளிர்பானங்களுக்கும் இளநீர்-மோர் போன்ற விவசாயம் சார்ந்த பானங்களுக்கும் அரசாங்கம் உதவிக்கரம் நீட்டவேண்டும்.  இதையும் நாங்கள் வலியுறுத்துவோம்.ஒரு மாற்றம் ஏற்படும்போது சில தடுமாற்றங்கள் ஏற்படும்.ஆனால் அது தற்காலிகம்தான்”என்று மணி  கூறினார்.

nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer