Friday, January 13, 2017

தொல் பழங்கால நாகரிகம் கொண்ட தமிழர்கள் தங்களின் பண்பாட்டுத் திருவிழாவாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடி மகிழும் திருநாள்தான் தைப் பொங்கல் ஆகும்.

உணவு தானியங்களை மடியில் சுமந்து வாரி வழங்கித் தங்களை வாழ வைக்கும் மண்ணுக்கும், உழுது பயிர் விளைவிக்க உழைப்பைத் தரும் காளை மாடுகள் ஆவினத்திற்கும் நன்றிப் படையல் இட்டு, தித்திக்கும் கரும்பைச் சுவைத்து, தேன் பாகாக இனிக்கும் சர்க்கரைப் பொங்கலைக் குடும்பத்தாரோடு உண்டு மகிழும் தைப் பொங்கல் பண்டிகையை, உழவர் திருநாளாகவும், மாட்டுப் பொங்கலாகவும் கொண்டாடி வந்துள்ளனர்.

இந்த ஆண்டு தைப் பொங்கல், வறட்சியின் கோரப் பிடியில் சிக்கிப் பரிதவிக்கும் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சிப் பொங்கலாக அமையவில்லை. எனினும், அல்லல்கள் தீரும், அவலம் நீங்கும், தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையைத் தளரவிடாமல் சக்திக்கு ஏற்றவாறு விழா எடுத்து, தைத்திருநாளை வரவேற்கின்றனர்.

தமிழர் நாகரிகத்தின் அடையாளச் சின்னமான ஜல்லிக்கட்டின் அடிப்படையைக்கூட அறிந்துகொள்ளாத பேதைமையின் காரணமாக மிருகவதை எதிர்ப்பு இயக்கத்தினர் பிதற்றுவதும், உண்மையை உணராத உச்சநீதிமன்றம் நீதிக்குத் தடை போடுவதும் மனதை வாட்டுகின்றன. ஜல்லிக்கட்டு என்றால் காளை மாடுகளோடு சண்டை போட்டுக் காயப்படுத்துவதுதானே என்று கற்றறிந்த சிலரே என்னிடம் டெல்லியில் கேட்டபோது அதிர்ச்சியுற்றேன்.

சங்க காலத்தில், இலக்கியங்களில் இதனை ‘ஏறு தழுவுதல்’ என்றே கூறினர். சீறிப் பாய்ந்து வரும் காளை மாடுகளின் திமிர்ந்த திமிலைப் பற்றியணைத்து, ஒரு கையால் கொம்பைப் பிடித்து உடன் ஓடி வீரத்தைக் காட்டுவதுதான் ஜல்லிக்கட்டு ஆகும். ஸ்பெயின் நாட்டைப் போல ஈட்டிகளைச் சொருகி மாடுகளைக் குத்திக் கொல்லும் நிகழ்ச்சி அல்ல.

ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தங்கள் வீட்டுப் பிள்ளைச் செல்வங்களாகவே உழவர்கள் வளர்க்கின்ற உண்மையை அறிந்துகொள்ளாமல், வீட்டில் வளரும் காளை மாடுகளைக் கொடிய விலங்குகளின் பட்டியலில் அன்றைய மத்திய அரசு சேர்த்தது,
மன்னிக்க முடியாத அநீதி ஆகும். தடைகளை உடைத்துக்கொண்டு ஜல்லிக்கட்டுக் காளைகளோடு வீரக் காளையரும் ஏறு தழுவுதல் இயல்பாக ஏற்படப்போகும் பேரெழுச்சியாக அமையும்.

தமிழக நதிநீர் வாழ்வாதாரங்களுக்கு அண்டை மாநிலங்களால் ஆபத்து சூழ்கின்றது. நிலத்தடி நீர் வறண்டு விட்டது; குடிக்கத் தண்ணீர் இல்லை. கால்நடைகளைப் பராமரிக்க வழியும் இல்லை. பயிர்கள் காய்ந்து கருகி, விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் துயரம் மனதை வாட்டுகின்றது.

விவசாயிகளின் மறுவாழ்வுக்குத் தேவையான நிதியை மாநில அரசும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து தேசியப் பேரிடர் நிதியில் இருந்து உதவியை மத்திய அரசும் வழங்க வேண்டும். சோதனைகள் நம்மை முற்றுகையிட்டாலும், அவற்றை நெஞ்சுறுதியுடன்
எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கையோடு, தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer